நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் சமீபத்தில் கைது செய்யப்பட்ட ஹரி நாடார், பனங்காட்டுப் படை கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். ஒருங்கிணைப்பாளர் மற்றும் அடிப்படை உறுப்பினரில் இருந்து நீக்கி அக்கட்சியின் தலைவர் ராக்கெட் ராஜா நடவடிக்கை எடுத்துள்ளார்.


இதுதொடர்பாக பனங்காட்டுப் படை கட்சி தலைவர் ராக்கெட் ராஜா வெளியிட்ட அறிக்கை:


திருநெல்வேலி மாவட்டம் மேல இலந்தைகுளத்தை சேர்ந்த திரு அ. ஹரி நாடார் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதாலும் ஒழுங்கு நடவடிக்கை குழுவின் அறிவுறுத்தலின்படி மாநில மாவட்ட நிர்வாகிகளின் ஒப்புதலின் படி அவர் வகித்து வந்த ஒருங்கிணைப்பாளர் பொறுப்பில் இருந்தும் அடிப்படை உறுப்பினரில் இருந்தும் நீக்கப்படுகிறார். அதனால் அவரது கருத்திற்கோ செயலுக்கோ இனி கட்சி பொறுப்பேற்காது பனங்காட்டு படை கட்சி உறவுகள் இவரோடு கட்சி அரசியல் செயல்பாடுகளில் தொடர்பு வைத்துக் கொள்ள வேண்டியதில்லை என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.




முன்னதாக, நடிகை விஜயலட்சுமி தற்கொலைக்கு முயன்ற வழக்கில் ஹரிநாடாரை போலீசார் கைது செய்தனர். கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டார். பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஹரிநாடாரை சென்னை திருவான்மீயூர் போலீசார் கைது செய்தனர்.


நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளார் சீமான் குறித்து கடந்தாண்டு நடிகை விஜயலட்சுமி வெளியிட்ட வீடியோ சர்ச்சைக்குள்ளானது. இதுதொடர்பாக ஹரி நாடார் விஜயலட்சுமிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்பட்டது. இதுதொடர்பாக விஜயலட்சுமி புகார் கூறியிருந்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் சீமான், ஹரிநாடார், சதா ஆகியோரின் மீதும் திருவான்மீயூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். 


இதனிடையே, மோசடி வழக்கில் பெங்களூரு போலீசாரால் ஹரி நாடார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில், பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஹரி நாடாரை, திருவான்மியூர் போலீசார் கைது செய்தனர். 




கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் நடைபெற்ற நாங்குநேரி இடைத்தேர்தலில் பனங்காட்டு படை கட்சி சார்பில் போட்டியிட்டார். அந்த தேர்தலில் 4 ஆயிரத்து 243 வாக்குகள் பெற்று மூன்றாவது இடம் பிடித்தார். நாம் தமிழர் கட்சி வேட்பாளரை பின்னுக்கு தள்ளிய ஹரி நாடார் அப்போது பலராலும் உன்னிப்பாக கவனிக்கப்பட்டார்.


மேலும், இடைத்தேர்தல் பிரச்சாரத்தின்போது ரோல்ஸ்ராய்ஸ் கார், பென்ஸ், ஆடி மற்றும் ஜாக்குவார் கார்களில் வீதி, வீதியாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இதுமட்டுமின்றி, கடந்தாண்டு திரைத்துறையில் கால் பதிக்க வேண்டும் என்ற ஆசையுடன் 2கே அழகானது காதல் என்ற படத்தில் கதாநாயகனாகவும் நடிக்கத் தொடங்கினார். அந்த படத்தில் நடிகை வனிதா கதாநாயகியாக நடிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 


 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண