தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தமிழக ஆளுநர் வி.என்.ரவியை நேரில் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது, தி.மு.க. அரசால் பாஜகவினர் சட்டவிரோதமாக கைது செய்யப்படுவதாக கூறியதுடன், கைது செய்யப்பட்டவர்கள் பற்றியும் ஆளுநரிடம் அறிக்கையாக சமர்ப்பித்ததாக தெரிவித்துள்ளார்






தமிழ்நாட்டில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக கடந்த சட்டசபை தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. திமுக ஆட்சி அமைந்தது முதல் அவர்களின் செயல்பாடுகளை பா.ஜ.க.வினர் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில், அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, “ராஜ்பவனில் இன்று ஆளுநர் வி.என்.ரவியை நேரில் சந்தித்தார். நாங்கள் அவர்களிடம் தி.மு.க. அரசு சட்டவிரோதமாக பா.ஜ.க.வைச் சேர்ந்த தகவல் தொழில்நுட்பத்துறையினர் உள்ளிட்ட 22 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதை அறிக்கையாக சமர்ப்பித்துள்ளோம்“ இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.


இந்த சந்திப்பின்போது தி.மு.க.வில் இருந்து பா.ஜ.க.வில் இணைந்த கு.க.செல்வம், காங்கிரசில் இருந்து பா.ஜ.க.வில் இணைந்த கராத்தே தியாகராஜன், கரு.நாகராஜன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.






மேலும், அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், ”தமிழக ஆளுநர் ரவியை பா.ஜ.க. தலைவர்களுடன் சென்று சந்தித்தேன். நமது கட்சியின் சமூக வலைதள தொண்டர்களை தொடர்ந்து அச்சுறுத்தியும், தேசியவாதிகளின் குரலை நசுக்கிக்கொண்டிருக்கும் தி.மு.க. அரசுடைய போக்கை கண்டித்து அறிக்கையாக சமர்ப்பித்தோம் என்று பதிவிட்டுள்ளார். தமிழக அரசின் நடவடிக்கைக்கு எதிராக ஆளுநரிடம் மனு அளித்த பா.ஜ.க.வின் செயல்பாட்டிற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.




கடந்த வியாழக்கிழமை ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த இந்திய ராணுவ வீரர்களின் உயிரிழப்பு குறித்து காஷ்மீரை ஒப்பிட்டு அவதூறாக கருத்து பதிவிட்டதாக பா.ஜ.க.வின் தீவிர ஆதரவாளர் யூ டிபர் மாரிதாசை போலீசார் கைது செய்தனர். இதற்கு, பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. உள்ளிட்ட பலர் கண்டனம் தெரிவித்தனர். முன்னதாக, தி.மு.க. ஆட்சி அமைந்த பிறகு சாட்டை துரைமுருகன், கிஷோர் கே சுவாமி உள்ளிட்டோர் சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துக்களை பதிவிட்டதாக கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண