கர்நாடக மாநிலத்தில் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றியவர் அண்ணாமலை. அந்த மாநிலத்தின் நிஜ சிங்கமென அவரை கொண்டாடியதாக இங்கு சிலர் கொளுத்திப்போட்டார்கள். ஒருநாள் தனது ஐபிஎஸ் பதவியை துறந்து ஆடு வளர்க்க புறப்பட்டது அந்த சிங்கம்.
சிங்கம் எப்படி ஆடு வளர்க்க முடியும் என்ற கேள்வி எல்லோர் மனதிலும் அப்போது எழுந்தது. ஆனால், அவரது சொந்த கிராமமான கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி ஒன்றியத்தில் உள்ள தொட்டாம்பட்டிக்கு வந்து, கால்நடை வளர்ப்பு, தற்சார்ப்பு விவசாயம் என கால்நடை வளர்ப்பு என தனி பாணியில் களம் இறங்கினார் அவர்.
கோவையில் பொறியியல் படிப்பை முடித்த கையோடு யாரிடமும் ‘அடிமையாக’ வேலை பார்க்கக் கூடாது என்ற எண்ணம் அவருக்கு எழவே, அவர் புத்தியில் உதித்தது எம்.பி.ஏ. அதற்காக லக்னோ பறந்து இந்திய மேலாண்மை பல்கலைக்கழகத்தில் தங்கி எம்.பி.ஏ படித்து முடித்தார். அதான் MBA படித்து முடித்தாயிற்றே, இனி தன் கையே தனக்கு உதவி என்ற பாணியில் பிசினஸ் தொடங்கலாம் என்று நினைத்துக்கொண்டிருந்தபோது, அவரது ’பிசினஸ் மேன்’ என்ற லட்சியத்தை ’போலீஸ் மேன்’ என மடைமாற்றம் செய்ய தயாரானது விதி. அதற்கு காரணமாக அவர் கூறுவது 2008ல் மும்பை தாஜ் ஹோட்டலில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலும், உத்தரபிரதேசத்தில் 5 ரூபாய்க்கு கூட கொலை செய்யும் சம்பவங்கள்நடந்ததும்தான்.
இவற்றையெல்லாம் கண்டபிறகு, கேட்ட பிறகு, அண்ணாமலைக்கு ரத்தம் துடிதுடித்தது, அநியாயத்தை தட்டிக் கேட்க வேண்டுமா ? இல்லை அந்த பக்கம் போய் பிசினஸ் செய்து பிழைக்க வேண்டுமா என்று தோன்றியது. பின்னர், அநியாயத்தை தட்டிக் கேட்பதுதான் முக்கியமென முடிவெடுத்தார். சரி, அநியாயத்தை தனி ஆளாக நின்று தட்டிக் கேட்டுவிடமுடியுமா ? அப்படி தட்டிக்கேட்டால் ‘பொட்டி’ கட்டிவிட மாட்டார்களா என்று இரவும் பகலும் சிந்தித்தார். அதன்பிறகு ‘சிவில் சர்வீஸ்’ தேர்வு எழுதி போலீஸ் ஆகிவிடவேண்டும் என்ற எண்ணம் அவரது மூளையில் பொறித்தட்டியது.
’விடா முயற்சி விஸ்வரூப வெற்றி’ என்று சொல்வார்கள். ஆனால், அண்ணாமலையோ தனது முதல் முயற்சியிலேயே விஸ்வரூப வெற்றி பெற்றார். அதற்கு காரணம் தனது பொறியியல் மூளை, பிசினஸ் மூளை என இரண்டையும் ஒரு நேர்க்கோட்டில் இணைத்து சிவில் சர்வீஸ் படிப்பை சீரியசாக படித்ததுதான் காரணம் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.
2010ஆம் ஆண்டில் கர்நாடக மாநிலம் கார்தாலாவில் ஏ.எஸ்.பி-யாக பதவியேற்றார். 9 வருடம் மக்களின் பாதுகாப்பிற்காக உழைத்தார். அநியாயத்தை கண்டால் ’எரிமலை எப்படி பொறுக்கும்’ என்ற பாணியில் ரவுடிகளை பிடித்து வெளுப்பார். அதேபோல் போலீஸ் துறையை உருகி உருகி காதலித்ததாகவும், திட்டமிட்டு பல முயற்சிகளை எடுத்ததாகவும் அவரே சொல்லியிருக்கிறார்.
ஆனால், அப்படி உருகி ஊற்றி காதலித்த வேலையை ஒரு நாள் அவர் துறந்தார். துறவியென செல்லப்போகிறார் என சிலர் நினைக்கையில், கரூர் வந்து ஆட்டுக்குட்டியை ஒரு மேய்ப்பன் போல கையிலேந்தினார். அப்போது ஏன் ஐபிஎஸ் வேலையை விட்டீர்கள் என பத்திரிகையாளர்கள் கேட்டபோது, அவர் சொன்ன பதில் அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
‘மேலைநாடுகளில் அடுத்தடுத்த இலக்குகளை வைத்துக்கொண்டு, அதற்கு ஏற்றவாறு மாறுவது தான் இயல்பு, அங்கு இதைவிட பல உயரிய பதவியைகூட ஜஸ்ட் லைக் தட் என உதறித் தள்ளுவார்கள்’ என பேட்டிக்கொடுத்தார். பிரம்மித்துப்போனார்கள் தமிழ்நாட்டவர்கள். ஐபிஎஸ் பதவியை உதறிவிட்டு, ஆட்டுக்குட்டியை கையிலேந்த எவ்வளவு துணிச்சல் வேண்டும் என அண்ணாமலை பற்றி பூரித்துப்பேசினார்கள். இடைத்தரகர்களே இல்லாமல் விவசாயிகளே நேரடியாக விற்பனையாளர்களை சந்தித்து தாங்கள் விற்கும் பொருட்களை தகுந்த விலைக்கு விற்பனை செய்யும் திட்டத்தை தொடங்கி, அவர்களின் வாழ்வில் ஒளியேற்றும் விதமாக ’வி த லீடர்’ என்ற அமைப்பை தொடங்கினார்.
ஆனால், அப்போதே அவர் மீது சிலர் சந்தேகத்தை கிளப்பினர். அவர் ஆட்டுக்குட்டி வளர்க்க இங்கு வரவில்லை. இந்த மண்ணை ஆளும் நோக்கில் வந்திருக்கிறார், விரைவில் ஒரு தேசிய கட்சியில் இணைவார் என செய்திகள் கட்சைக் கட்டி பறக்க தொடங்கின. ஆனால், அவரோ அப்படியெல்லாம் இல்லை ‘பிரதர்’ என பத்திரிகையாளர்களிடம் மறுத்தார். ஆனால், தான் ஒரு தேசியவாதி என்றும், மோடியின் அபிமானி எனவும் அவர் சொன்னதும் எல்லோருக்கும் தெரிந்துவிட்டது.
கடைசியாக அந்தநாளும் வந்தது, அவரே அழைத்து அத்தனை பேருக்கும் சொன்னார் தான் பாஜகவில் இணைய டெல்லி போகிறேன் என, பாஜக தேசிய பொதுச்செயலாளர் முரளிதரராவ், அப்போதை மாநில தலைவர் முருகன் தலைமையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 25ஆம் தேதி பாஜகவில் இணைந்தார் அண்ணாமலை. தற்சார்பு விவசாயம், இயற்கை வேளாண்மை, ஆட்டுக்குட்டி வளர்ப்பு எல்லாம் இனி அவ்வளவுதானா என்ற கேள்வி எழுந்தபோது, அதையும் பார்ப்பேன் இதையும் பார்ப்பேன் என பதில் அளித்தார்.
கட்சியில் சேர்ந்தது முதலே ’மிஸ்டர் பவ்யமாக’ வலம் வந்தார் அண்ணாமலை. தன்னுடைய வயதில் பெரியவராக இருந்தாலும் மிகச் சிறியவராக இருந்தாலும் ‘அண்ணா’ என்று அழைத்தே அவர்களை அசர வைத்தார். அட டா மனுஷன் எப்படி இருக்காரு பாரு, ஒரு போலீஸ் அதிகாரியாக இருந்தவர் மாதிரியா தெரியுது ? என பலரும் மூக்கின் மேல் விரல் வைத்து ஆச்சரியம் அடைந்தார்கள். ஆனால், பாஜகவில் இருந்த சிலரோ அவர் நடிக்கிறார் என ஓபனாக கமலாலயத்திலேயே கமண்ட் அடித்தார்கள்.
கட்சியில் இணைந்த சில நாட்களிலேயே அவருக்கு மாநில துணைத் தலைவர் பதவி கொடுக்கப்பட்டது. கட்சியில் பலருக்கும் முதல் அதிர்ச்சி. இப்போது கட்சியில் சேர்ந்தவருக்கு மாநிலத் தலைவர் பதவியா? என பல சீனியர் தலைவர்கள் கொந்தளித்தார்கள். ஆனால், அண்ணாமலையோ ’உசுப்பேத்துறவன் கிட்ட உம்முன்னும், கடுப்பேத்துறவன்கிட்ட கம்முன்னும் இருந்தா, வாழ்க்கை ஜம்முன்னு இருக்கும்’ என்ற பாதையை கடைப்பிடித்தார். அதேபோல், கட்சியில் கள பணி செய்த பல சீனியர்கள் இருந்தபோதும் அவர்களையெல்லாம் புறம்தள்ளி கடந்த சட்டமன்ற தேர்தலில் அரவக்குறிச்சி தேர்தலில் போட்டியிட சீட் வாங்கினார். நான் சீனியர் எனக்கு நிச்சயம் தேர்தலில் போட்டியிட சீட் கிடைக்கும் என நினைத்துக்கொண்டிருந்த பலரின் எண்ணங்களில் மண்ணை விழ வைத்து, அவர்களுக்கு 2வது அதிர்ச்சி கொடுத்தார் அண்ணாமலை.
பிரச்சாரத்தின்போது ”எனக்கு இன்னொரு முகம் இருக்கு அது கர்நாடக முகம், செந்தில்பாலாஜியை எல்லாம் தூக்கிப் போட்டு மிதிச்சேன்னா பல்லுகில்லெல்லாம் வெளியில் வந்துவிடும்” என பேசி பயம் காட்டினார். தேர்தலில் தோல்வியடைந்தாலும் தனது யுத்தியில் தோல்வியடையக்கூடாது என்று பவ்யமாக ஆனால் பயங்கரமாக பணியாற்றினார். பாஜக தலைவராக இருந்த முருகனுக்கு மத்திய இணை அமைச்சர் பதவி கொடுக்கப்படவே தமிழ்நாடு பாஜக தலைவராக யார் நியமிக்கப்பட போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு எகிறியது.
மீண்டும் சீனியரான பொன்.ராதாகிருஷ்ணனோ அல்லது இல.கணேசனோ நியமிக்கப்படலாம். அல்லது வானதி சீனிவாசன், கே.டி.ராகவன் போன்றோருக்கு வாய்ப்பு தரப்படும் என பேசப்பட்ட நிலையில் மூன்றாவது முறையாக பாஜகவினருக்கும் தமிழகம் மக்களுக்கும் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்து பாஜக தலைவராக அறிவிக்கப்பட்டார் அண்ணாமலை.
அவர் மாநிலத் தலைவராக பதவியேற்றதும் தொண்டர்களிடம் பற்றிக் கொண்டது தேச பக்தி எனும் பெருந்தீ. பாஜகவில் அமித் ஷா என்று ஒரு பெரிய ’சங்கி’ இருக்கிறார். இப்போது நமக்கு ‘சின்ன சங்கி’ யாக அண்ணாமலை கிடைத்திருக்கிறார் என அவரை புகழ்ந்து கொண்டாடினர். ஆனால், ’சங்கி’ என்ற வார்த்தை பாஜகவினரை கிண்டல் செய்ய பயன்படுத்துவது என்பது கூட தெரியாமல் இப்படி கூவுகிறார்களே என சமூக வலைதளங்களில் இந்த வீடியோவை போட்டு சிரிப்பே தாங்கல என சிலர் பதிவிட்டனர்.
ஆனால், அவரை பாஜக தலைவராக தேசிய தலைமை அறிவித்ததை தமிழக பாஜகவில் பெரும்பாலான நிர்வாகிகள் ரசிக்கவில்லை. ஆனால், தேசிய தலைமை அறிவித்ததை எதிர்த்து இங்குள்ளவர்களால் என்ன செய்ய முடியும் ? மாலை போட்டார்கள், சால்வை போர்த்தினார்கள், மரியாதைக்குரிய மாநிலத் தலைவர் என்றார் பொன்ராதாகிருஷ்ணன், போற்றுதலுக்குரிய போர்ப்படை தளபதி என்றார் இல.கணேசன், ஆருயிர் சகோதரர் என்றார் வானதி சீனிவாசன். ஆனால் எல்லோருக்குள்ளும் ஒரு நெருப்பு தனல் தகித்துக்கொண்டிருந்தது.
அப்போதுதான் கே.டி.ராகவனின் வீடியோ வெளியாகி பரபரப்பை பற்ற வைத்தது. அண்ணாமலை ஒப்புதலோடுதான் இந்த வீடியோ வெளியிடப்பட்டது என கொளுத்திப்போட்டார் அந்த யூடிபர். அண்ணாமலையை சந்தித்து பேசிவிட்டு ராகவன் தனது கட்சி பொறுப்பை ராஜினாமா செய்தார். பின்னர், அண்ணாமலையே ஒரு நீண்ட அறிக்கையை வெளியிட்டு வீடியோ வெளியிட்ட யூடியூபரை வெறியேற்றினார். பின்னர், அந்த யூடிபரை கட்சியை விட்டே நீக்குவதாகவும் அறிவிக்க செய்தார்.
இதன்பிறகுதான் ட்வீஸ்ட். அண்ணாமலை கே.டி.ராகவன் குறித்தும், கட்சி நிர்வாகிகள் பற்றியும், குஷ்பு, காயத்திரி ரகுராம் தொடர்பாகவும் அந்த யூடிபரிடம் பேசியதை அப்படியே ரெக்கார்ட் செய்து வெளியிட்டார். உண்மையில் அண்ணாமலை அதன்பிறகு ஆடித்தான் போயிருப்பார்.
இந்த வீடியோ விவகாரத்தை டெல்லிக்கொண்டு சென்றால் ஆறு மாதம் ஆகும், எனக்கு Courage இல்ல, பாஜகவில் யாராவது முட்டாள் தனமா பேசினாலும் ‘கம்முன்னு இருக்கனும்’, நானும் பெண் பிள்ளையை பெற்றவன் தான், பாஜக செய்தி தொடர்பு செயலாளர் பிரசாத்துக்கு எப்படி கை ஒடஞ்சது தெரியுமா ?, 2026ல எம்.எல்.ஏ சீட் வாங்கித் தரேன், Nothing will happen tomorrow, எது செஞ்சாலும் அதுக்கு ஒரு பிளான் வேண்டும், ஒரு Project எடுத்தால் அதற்கு இத்தனை நாட்கள் ஆகும் என அந்த ஆடியோ-வில் அவர் பேசியதெல்லாம் அதகள ரகம்.
ஆடியோ வெளியான பிறகு ’ஸ்கெட்ச் ராகவனுக்கு இல்ல அண்ணாமலைக்கு’ என ட்வீட் தட்டினர் நெட்டிசன்கள். சிங்கத்திற்கு இந்த சின்ன விஷயம் கூட தெரியவில்லையா என சிரிப்பூட்டினார்கள் சிலர். ஆனால், ஏற்கனவே அண்ணாமலையை மாநில தலைவராக அறிவித்தபோது அதிர்ந்த தலைவர்கள் எல்லாம் இந்த ஆடியோ வெளியான பிறகு எரிமலை என கொதிக்க தொடங்கியிருக்கிறார்கள். அவர்களில் சிலர் டெல்லித் தலைமைக்கு அண்ணாமலை தலைமை, தமிழகத்திற்கும் எடுபடாது, கட்சிக்கும் சரிபாடாது என கடிதமும் எழுதியிருப்பதாக தகவல் சொல்லியிருக்கிறார்கள் கமலாலய கமாண்டோக்கள்.