தமிழ் இனத்திற்கு வலிமை சேர்க்கவே இணைந்து நிற்கிறோம்:


திருச்சி சிறுகனூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வெல்லும் சனநாயக மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். 


அப்போது பேசிய அவர், "இப்படை தோற்பின் எப்படை வெல்லும் என்பதைப் போல திருமாவின் படை இங்கு கூடியுள்ளது. மாணவர் திமுகவில் பணியாற்றியதில் இருந்து எனக்கு திருமாவைத் தெரியும். இன்று ஜனநாயகம் காக்கத்தான் இந்த கூட்டத்தை கூட்டியுள்ளார். அன்றைக்கு திமுகழகத்தில் இருந்து முழங்கினார். இன்று கழக கூட்டணியில் இருந்து முழங்கி வருகிறார். தமிழ் இனத்திற்கு வலிமை சேர்க்கவே இணைந்து நிற்கிறோம். தந்தை பெரியாரையும், புரட்சியாளர் அம்பேத்கரையும் யாராலும் பிரிக்க முடியாது.


அதேபோல் தான் திமுகவும், விசிகாவையும் பிரிக்க முடியாது. வெல்லும் ஜனநாயகம் என்று சொன்னால் மட்டும் போதாது. சர்வாதிகார பாஜகவை தூக்கி எறிய வேண்டும். இந்தியாவை உண்மையாக கூட்டாட்சி நாடாக மாற்ற வேண்டிய கடமையும் பொறுப்பும் நமக்குத்தான் இருக்கிறது. ஒன்றியத்தில் கூட்டாட்சியையும், மாநிலத்தில் சுய ஆட்சி அரசையும் உருவாக்க வேண்டும்" என்றார்.


தமிழ்நாட்டில் பாஜக என்பது பூஜ்யம்:


தொடர்ந்து பேசிய அவர், "அரசியல் அமைப்புச் சட்டத்தை கொடுத்த அம்பேத்கர் யூனியன் அரசும் மாநில அரசும் ஒன்றோடு ஒன்று அடிபணியவில்லை ஒருங்கிணைக்கப்பட்டு உள்ளது என்றார் . அதைத்தான் நாமும் சொல்கிறோம்.


தமிழ்நாட்டில் பாஜக என்பது பூஜ்யம். அதனால் தமிழ்நாட்டில் பாஜகவைப்பற்றி கவலை பட வேண்டிய அவசியமில்லை. தமிழ்நாட்டில் மட்டும் பாஜகவை வீழ்த்தினால் போதாது. அகில இந்தியா முழுவதும் பாஜகவை வீழ்த்த வேண்டும். அதற்கான அடித்தளம் தான் இந்தியா கூட்டணி. ஒன்றிய அளவில் பாஜகவை வீழ்த்த வேண்டும் என்ற இலக்கை கொண்ட எல்லா கட்சிகளும் இந்த கூட்டணியில் இணைந்திருக்கின்றன. பாஜக என்று சொல்வதால் இதை தனிப்பட்ட ஒரு கட்சிக்கு எதிரான கூட்டணி என்று  சொல்லி விட முடியாது.


இந்தியாவின் ஜனநாயகத்தை, மக்களாட்சியை, மதச்சார்பின்மையை, பன்முகத்தன்மையை, ஒடுக்கப்பட்ட மக்கள், ஏழை எளிய மக்களை காப்பற்ற வேண்டும் என்றால் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது. இது தான் நம்முடைய இலக்கு. பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்தியா என்ற கூட்டாட்சி முறை இருக்காது. 


ஜனநாயக அமைப்பு முறை, நாடாளுமன்ற நடைமுறையே இருக்காது. ஏன் மாநிலங்களே இருக்காது. இதை எல்லோரும் உணர்ந்து கொள்ள வேண்டும். மாநிலங்களை கார்பரேசன் ஆக்கிவிடுவார்கள். நம் கண்முன்னே  ஜம்மு காஷ்மீர் சிதைக்கப்பட்டதை பார்த்தோம். ஜம்மு காஷ்மீரை இரண்டாக பிரித்தார்கள். யூனியன் பிரதேசமாக்கினார்கள். தேர்தல் கிடையாது. இது தான் பாஜக பாணி சர்வாதிகாரம். இது தான் எல்லா மாநிலாங்களுக்கும் ஏற்படும்" என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.