Nitish kumar: காங்கிரஸ் தன்னை சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என,  பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் தரப்பு வலியுறுத்தியுள்ளது.


பாஜகவுடன் நிதிஷ்குமார் கூட்டணி?


நிதீஷ் குமார் பீகார் முதலமைச்சராக வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று ஏழாவது முறையாக, அதுவும் பாரதிய ஜனதா கட்சியின் ஆதரவுடன் பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது அம்மாநில அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், நாளை மறுநாள் நடைபெறும் நிகழ்ச்சியில் பாஜகவைச் சேர்ந்த இரண்டு பேர் துணை முதலமைச்சர்களாக பதவியேற்பார்கள் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2022ம் ஆண்டு பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறி, ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியுடன் கூட்டணி அமைத்து முதலமைச்சரானார். இந்நிலையில், அந்த கூட்டணியில் இருந்து வெளியேறி, மீண்டும் பாஜக உடன் கூட்டணி அமைக்க நிதிஷ்குமார் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.


I.N.D.I.A. கூட்டணியில் இருக்கிறோம், ஆனால் காங்கிரஸ்?


இந்நிலையில் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் மாநில தலைவரான உமேஷ் சிங் குஷ்வஹா, பாட்னாவில் ஆளுநரின் தேநீர் விருந்தில் பங்கேற்ற பின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ”ஐக்கிய ஜனதா தளம் கட்சி I.N.D.I.A. கூட்டணியில் உறுதியாக உள்ளது. ஆனால் கூட்டணிக் கட்சிகள்  உடனான உறவு மற்றும் தொகுதிகளை ஒதுக்கீடு செய்வதில் காங்கிரஸ் தன்னை சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும். 


பீகாரின் ராஷ்டிரிய ஜனதா தளம் உடனான 'மகாத்பந்தன்' கூட்டணியில் எல்லாம் நன்றாக இருக்கிறது.  உள்நோக்கத்துடன் சில ஊடகங்கள் தகவல்களை வெளியிட்டு வருகின்றன.   நேற்றும் இன்றும் முதலமைச்சரை சந்தித்தேன். இது வாடிக்கையான விஷயம். பரவும் வதந்திகளில் உண்மை இல்லை. கட்சி எம்.எல்.ஏ.க்கள் பாட்னாவுக்கு விரைந்து வர அழைப்பு விடுத்ததாக வெளியான வதந்திகளையும் நிராகரிக்கிறோம்" என உமேஷ் சிங் குஷ்வஹா விளக்கமளித்துள்ளார்.





ராஷ்டிரிய ஜனதா தளம் ஆலோசனைக் கூட்டம்:


ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் கூட்டணி மாறும் தகவல்களுக்கு மத்தியில், ராஷ்டிரிய ஜனதா தளத்தைச் சேர்ந்த, தேஜஸ்வி யாதவ், முக்கிய எம்.எல்.ஏக்களை அவசர ஆலோசனைக்கு அழைப்பு விடுத்துள்ளார். நிதிஷ் குமார் தொடர்பாக பேசிய ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவரான சிவானந்த் திவாரி பேசுகையில், ”நிதிஷ் குமார் பாஜக கூட்டணிக்கு திரும்புவார் என்று என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியாது. வரலாறு அவரை எப்படி நினைவில் வைத்திருக்க வேண்டும்? பிஜேபி அலுவலகத்தில் நிதிஷ்குமாருக்கான கதவுகள் மூடப்பட்டு விட்டதாக, அந்த அலுவலக  பியூன் கூட சொன்ன பிறகு அவர் எப்படி பாஜக கூட்டணிக்கு செல்வார்” என பேசியுள்ளார்.