தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் I.N.D.I.A. கூட்டணியின் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பிரதமர் நரேந்திர மோடியை ஒருமையில் பேசியதாக கூறி, தமிழ்நாடு பாஜகவின் துணைத்தலைவர் நாகராஜன், மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன் ஆகியோர் தலைமை செயலகத்தில் தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகுவை சந்தித்து புகார் மனு அளித்தனர்.


பிரதமர் மோடி குறித்து இழிவான கருத்து:


புகார் கடிதம் அளித்த பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய கரு நாகராஜன், "மிக மிகத் தரம் தாழ்ந்து கேவலமான முறையிலே அராஜகமான முறையில் அநாகரிகமான முறையிலே பிரதமர் நரேந்திர மோடி பற்றி யாருமே ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு வார்த்தையை பேசியிருக்கிறார்.


தமிழர்கள் என்றாலே பண்பாடு, கலாச்சாரம் நிறைந்தவர்கள். எவர் ஒருவரையும் மனதை புண்படும்படியாக பேசக்கூடாது என்ற ஒரு உணர்வோடு வாழக்கூடிய இந்த தமிழினத்தில் பிறந்த இந்த அனிதா ராதாகிருஷ்ணன் அருவருக்கத்தக்க வகையிலே திராவிட ஆட்சித் தலைவர்களுக்கு அடிமையாக இருப்பது போல எதை வேண்டுமானாலும் பேசுவேன் என்ற எகத்தாளத்தோடு பேசியிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.


எந்த ஒரு மனிதனும் இதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். தமிழ்நாட்டில் இருக்கிற ஆண்கள், பெண்கள் இளைஞர்கள், பெரியவர்கள் யாருமே அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசுவதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.


தேர்தல் ஆணையத்திற்கு பறந்த கடிதம்:


இந்த கட்சிக்கு இதே வழக்கமாகிவிட்டது. இதே போன்று முன்னாள் முதலமைச்சருடைய தாயார் உடைய புகழுக்கு களங்கம் விளைவிக்கிற படி ஆ. ராசா பேசினார். இன்றைக்கு அமைச்சர் ராதாகிருஷ்ணன் பேசுகிறார். இந்நேரம் முதலமைச்சர் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.


எப்பொழுதுமே அவருடைய தாயை மதிப்பவர் முதலமைச்சர். இப்படி பேசுவது அநாகரிகம் இல்லையா? அசிங்கம் இல்லையா? கேவலம் இல்லையா? இதனால் தமிழ்நாட்டினுடைய ஒட்டுமொத்த மக்களுடைய மரியாதை கெடாதா?


இதை கண்டித்து தலைமை தேர்தல் அதிகாரியிடம் நாங்கள் கடிதம் கொடுத்திருக்கிறோம். சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடிதம் கொடுத்திருக்கிறோம். இது ஏற்றுக் கொள்ள முடியாதது. அனிதா ராதாகிருஷ்ணன் தூத்துக்குடியில் உட்கார்ந்து இப்படி பேசிக் கொண்டே இருக்கலாமா?


கொந்தளித்த பாஜக:


அவர் மீது தக்க நடவடிக்கை சட்டப்படி எடுக்க வேண்டும். முதலில் அவரை பதவி விலக செய்ய வேண்டும். ஏற்கனவே, பொன்முடிக்கு வந்த நிலை செந்தில் பாலாஜிக்கு வந்த நிலை அவருக்கு வர இருக்கிறது. மீண்டும் சொத்துக்கள் முடக்கப்பட்டு இருக்கிறது. விசாரணை நடந்து வருகிறது.


அப்படிப்பட்டவர் வஞ்சத்தோடு வஞ்சகமான எண்ணத்தோடு அவர் சொத்து குவித்த வழக்கில் எப்பொழுது பதவி பறிபோகமோ? என்றைக்கு நாம் சிறைச்சாலைக்கு போகப்போகிறோமோ? என்பதை மனதிலே வைத்துக்கொண்டு இதுவரை யாரும் பயன்படுத்தாத ஒரு வார்த்தை அரசியல் மேடையிலே பயன்படுத்திய அந்த கயவறை தமிழக பாஜக வன்மையாக கண்டிக்கிறது.


மாநிலத் தலைவர் அண்ணாமலை உடனடியாக மனுவை இந்த கடிதத்தை கொடுக்கச் சொல்லி நானும் கராத்தே தியாகராஜன், மாவட்ட தலைவர் மற்றும் நிர்வாகிகள் வந்திருக்கிறோம். இது இன்றோடு விடப் போகிற பிரச்சனை அல்ல. நீதிமன்றத்திற்கும் நாங்கள் செல்வோம்.


இதுபோன்று எப்படி வேண்டுமானாலும் யார் வேண்டுமானாலும் பேசலாம் என்பது பொது அமைதிக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய செயல். அமைச்சர் செய்வது வன்மையாக கண்டிக்கத்தக்கது. நாங்கள் சும்மா விடப் போவதில்லை" என்றார்.