Vikravandi Byelection: விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் - யாருக்கு ஆதரவு? த.வெ.க. தலைவர் விஜய் அறிவிப்பு
Vikravandi Byelection: விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் தங்கள் தரப்பு யாருக்கும் ஆதரவளிக்காது என தமிழக வெற்றிக் கழகம் அறிவித்துள்ளது.

Vikravandi Byelection: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பது தொடர்பாக, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதன்படி, இந்த இடைத்தேர்தலில் தங்கள் தரப்பு யாருக்கும் ஆதரவளிக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழகம் அறிவிப்பு:
இதுதொடர்பாக தமிழக வெற்றிக் கழக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ தமிழக வெற்றிக் கழகத் தலைவர். தளபதி விஜய் அவர்கள், கடந்த பிப்ரவரி மாதம் 2ஆம் தேதி வெளியிட்ட கட்சித் தொடக்க அறிவிப்பிற்கான முதல் அறிக்கையிலேயே, எங்கள் கழகத்தின் அரசியல் நிலைப்பாடு குறித்துத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.
கழகத் தலைவர் அவர்கள், விரைவில் கழகத்தின் கொள்கைகள், கோட்பாடுகள் மற்றும் செயல்திட்டங்களைத் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டில் வெளியிட்டு, அதன் தொடர்ச்சியாகக் கழக உள்கட்டமைப்பு சார்ந்த பணிகள், தமிழகம் முழுவதும் மக்கள் சந்திப்புப் பயணங்கள் என்று. வரும் 2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றப் பொதுத் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை மேற்கொண்டு, தேர்தலில் போட்டியிட்டு (வற்றி பெற்று. மக்கள் பணியாற்றுவது தான் நமது பிரதான இலக்கு என்று ஏற்கெனவே தெரிவித்துள்ளார்.
எனவே, அதுவரை இடைப்பட்ட காலத்தில் நடத்தப்படும் உள்ளாட்சித் தேர்தல் உள்பட எந்தத் தேர்தலிலும் தமிழக வெற்றிக் கழகம் போட்டியிடாது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
குறிப்பாக, வருகிற ஜூலை 10ஆம் தேதி நடைபெற உள்ள விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில், தமிழக வெற்றிக் கழகம் போட்டியிடாது என்றும், எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை என்றும், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் தெரிவித்துக்கொள்கிறேன்” என புஸ்ஸி ஆனந்த் குறிப்பிட்டுள்ளார்.
விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல்:
விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்.எல்.ஏவான புகழேந்தி உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இதையடுத்து ஜுலை 10ம் தேதி அங்கு வாக்குப்பதிவு நடைபெறும் என்றும், ஜுலை 13ம் தேதி பாதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்படும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதையடுத்து திமுக சார்பில் அன்னியூர் சிவா, பாமக சார்பில் சி. அன்புமணி மற்றும் நாம் தமிழர் கட்சி சார்பில் மருத்துவர் அபிநயா ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். பிரதான எதிர்க்கட்சியான அதிமுக மற்றும் அதன் கூட்டணியில் உள்ள தேமுதிக ஆகிய கட்சிகள், இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன. இதனிடையே, தேர்தலில் போட்டியிட விரும்புவோர் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான அவகாசம் கடந்த 14ம் தேதி தொடங்கப்பட்டது. வரும் 21ம் தேதியுடன் இதற்கான அவகாசம் நிறைவடைய உள்ளது.