காயத்ரி ரகுராம், கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செய்லபடுவதாக கூறி, கட்சி தலைமைக்கு பலர் கடிதங்கள் அனுப்பியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இது தொடர்பாக விளக்கமளிக்குமாறு காயத்ரி ரகுராமுக்கு கட்சி தலைமை கடிதம் அனுப்பியதாகவும், ஆனால் அதுகுறித்து எந்த விளக்கமளிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. அதைதொடர்ந்து, கட்சிக்கு களங்கம் விளைவித்தாக கூறி பா.ஜ.க.வில் இருந்து நடிகை காயத்ரி ரகுராமை 6 மாத காலம் இடைநீக்கம் செய்வதாக அண்ணாமலை அறிவித்தார்.
அண்ணாமலை அறிக்கை:
இதுதொடர்பான அறிக்கையில், தமிழக பாரதிய ஜனதா கட்சியின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநில தலைவர் காயத்ரி ரகுராம் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களிலும் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருவதால், கட்சியில் அவர் வகித்து வரும் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் ஆறு மாத காலத்திற்கு நீக்கப்படுகிறார். கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவர்களிடம் கட்சி சார்பாக எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் என அண்ணாமலை அறிவித்து இருந்தார்.
காயத்ரி ரகுராம் விளக்கம்:
கட்சியை விட்டு இடைநீக்கம் செய்யப்பட்டதை தொடர்ந்து, பதவி நீக்கத்தை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் என்னை நேசிக்கிறவர்கள் என்னுடன் பேசுவார்கள். இதை யாராலும் தடுக்க முடியாது. நான் இடைநீக்கத்துடன் தேசத்திற்காக பணியாற்றுவேன் என காயத்ரி ரகுராம் விளக்கமளித்து இருந்தார்.
”காயத்ரி ரகுராமுக்கு திமுக உடன் தொடர்பு”:
காயத்ரி ரகுராம் நீக்கம் பாஜகவினரிடையே சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், அதுகுறித்து அக்கட்சியின் விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டுப் பிரிவின் தலைவர் அமர் பிரசாத் ரெட்டி விளக்கமளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், 3 மாதங்களுக்கு முன்பாக சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள சோமர்ஷெட் ஓட்டலில், முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான ஸ்டாலினின் மருமகனான சபரீசனை, காயத்ரி ரகுராம் சந்தித்து 1 மணி நேரத்திற்கும் மேலாக ஆலோசனை நடத்தியதாக குறிப்பிட்டுள்ளார்.
துரோகிகளுக்கு பா.ஜ.க.வில் இடம் இல்லை எனவும், பாஜக தமிழக தலைவர் அண்ணாமாலை சரியான நேரத்தில், சரியானதை செய்து இருப்பதாகவும், காயத்ரி ரகுராமின் பெயரை குறிப்பிடாமால் மறைமுகமாக குற்றம்சாட்டி அமர் பிரசாத் ரெட்டி பதிவிட்டுள்ளார்.
என்னிடம் விளக்கம் கேட்கவில்லை - காயத்ரி ரகுராம்
முன்னதாக கட்சி நடவடிக்கை தொடர்பாக, காயத்ரி ரகுராம் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, பா.ஜ.க.வில் சுமார் 3 மாதங்களுக்கு முன்பே சேர்ந்த செல்வக்குமார் என்பவர், கட்சியின் அறிவுசார் பிரிவின் துணைத் தலைவர் என்ற ஒரு பெரிய பொறுப்பு வாங்கினார்.
தனக்கு எதிராக, கொச்சையான ஒரு டிவீட்க்கு லைக் போட்டிருக்கிறார். செல்வக்குமார் குறித்து கட்சியில் புகார் அளிப்பது குறித்து தயாராகிக் கொண்டிருந்தோம். அதுதொடர்பாக விசாரணை நடத்தாமல், நோட்டீஸ் கொடுக்காமல் என்னை கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்துள்ளனர். தனது தரப்பு விளக்கம் கூட கேட்கப்படவில்லை எனவும் காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார்.