திமுக ஐடி விங் ட்வீட்:


கர்ப்பிணி பெண்களுக்கு அளிக்கும் ஊட்டச்சத்து வாங்குவதில், திமுக அரசு மீது அண்ணாமலை குற்றச்சாட்டு வைத்திருந்தார். ஆனால் இது பொய்யான குற்றச்சாட்டு என திமுக ஐடி விங், அதன் அதிகாரப்பூர்வ ட்விட்டர் தளத்தில் பதிவு செய்திருந்தது.






எம்.பி கேள்வி:


இந்த ட்வீட் குறித்து கருத்து தெரிவித்துள்ள திமுக எம்.பி செந்தில்குமார், அனைத்து மாவட்டங்களிலும் மிகுந்த பலத்துடன் திமுக ஐடி விங் செயல்பட்டு வருகிறது. ஆனால் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கருத்துக்கு எதிரான இந்த ட்வீட்டுக்கு 6 மணி நேரத்தில் வெறும் 250 பேர் மட்டுமே லைக் செய்துள்ளனர். திமுக ஐடி விங்கிற்கு உள்ள பலத்திற்கு 1 லட்சம் லைக்குகளையாவது பெற்றிருக்க வேண்டாமா என கேள்வி எழுப்பினார். இந்த ட்வீட்டுடன் திமுக ஐடி விங் செயலாளர் டி.ஆர்.பி. ராஜாவையும், செந்தில்குமார் டேக் செய்திருந்தார்.






முதலமைச்சரின் ட்வீட்டை கூட ரீட்வீட் செய்வதில்லை


மேலும் ஒரு போஸ்ட்டில் கருத்து தெரிவித்துள்ள செந்தில்குமார், தனிப்பட்ட முறையில் டி.ஆர்.பி. ராஜாவின் உழைப்பு எனக்கு தெரியும். ஆனால் திமுக ஐடி விங்கில் பணி செய்வோர் சரியாக வேலை செய்வதில்லை. முதலமைச்சரின் ட்வீட்டை கூட ரீட்வீட் செய்வதில்லை என குற்றச்சாட்டை வைத்தார்.






டி.ஆர்.பி. ராஜாவின் பதில்:


திமுக எம்.பி செந்தில்குமாருக்கு ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்துள்ள திமுக ஐடி விங் செயலாளர் டி.ஆர்.பி. ராஜா, நிதி அமைச்சர் பி.டி.ஆர்., பழனிவேல் தியாகராஜன் அமைத்து கொடுத்த அடிதளத்தில், திமுக ஐடி விங் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மேலும் கடந்த சில மாதங்களாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. சரியாக பணி புரியாதவர்கள், மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் டி.ஆர்.பி. ராஜா தெரிவித்தார்.






பிரச்சினை நிக்கவில்லை:


இத்துடன் திமுக ஐடி-விங் தொடர்பான விவாதம் முடிந்தது என்று நினைத்தால், நிற்கவில்லை. மேலும் பேசிய செந்தில்குமார், சரியாக பணி புரியாதவர்கள் நடவடிக்கைகள் எடுத்தால் மட்டுமே, திமுக மீது பற்றுள்ள ஐடி விங்கை சமூக வலைதளத்தில் உருவாக்கிட முடியும் என பதிவிட்டுள்ளார்.






ட்வீட்டருக்கு வந்த திமுக பிரச்சனை:


கட்சிகளுக்கு இடையிலான பிரச்சினை பெரும்பாலும் கட்சிகளுக்கு உள்ளேயே இருக்கும். பொது தளத்திற்கு பெரும்பாலும் தெரியாது. ஆனால் திமுக ஐடி விங் செயல்பாடுகள்  குறித்து பொது தளத்திற்கு வந்துள்ளது திமுகவினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டி.ஆர். பாலுவின் மகனான டி.ஆர்.பி. ராஜா கட்சிக்கு மிக நெருக்கமானவராக அறியப்படுகிறார். மேலும் இவருக்கு அமைச்சர் பதவி கிடைக்க வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் பரவி வருகிறது. இந்நிலையில் டி.ஆர்.பி. ராஜாவின் கட்டுப்பாட்டில் உள்ள துறையின் மீது செந்தில்குமார் குற்றச்சாட்டு வைத்திருப்பது கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சிலர், செந்தில்குமாரின் கருத்து திமுகவினரின் பலரது கருத்துக்களை வெளிக்காட்டி உள்ளதாகவும் கூறி வருகின்றனர்.