நடந்து முடிந்த சட்ட மன்ற தேர்தலின் போது, காரைக்குடி தொகுதி அ.தி.மு.க மாவட்ட செயலாளர் செந்தில்நாதனுக்கு  ஒதுக்கப்படும் என தெரிவித்ததால் முன்னாள் எம்.பி செந்தில்நாதன் காரைக்குடியை குறி வைத்து தீவிரமாக செயல்பட்டார். கொரோனா முதல் அலையின் போது காரைக்குடி தொகுதி முழுவதும் காய்கறி தொகுப்பை வழங்கினார். தொகுதியில் உள்ள மக்களுக்கு இ- பாஸ் வழங்கும் வேலையை கூட செய்தார். பல்வேறு உதவிகள் செய்ததால் காரைக்குடி வாக்காளர் மனதில் நீங்கா இடம் பிடித்தார். ஆனால் இதனை தட்டிப்பறிப்பது போல் பி.ஜே.பி மூத்த தலைவர் ஹெச்.ராஜா காரைக்குடி தொகுதியை  விடாப்பிடியாக வாங்கினார். 

 



 

அ.தி.மு.க.வின் ஆதரவு வாக்குகளை அறுவடை செய்துவிடலாம் என ஆசைப்பட்ட ஹெச்.ராஜாவிற்கு தேர்தலுக்கு முன்பாகவே தோல்வி முகம் தென்பட ஆரம்பித்தது. அதனால் மத்தியில் உள்ள பி.ஜே.பி பிரமுகர்கள் ஹெச்.ராஜாவுக்கு ஆதரவாக களம் இறங்கினர். காங்கிரஸ் வேட்பாளர் மாங்குடிக்கு ஆதரவாக ப.சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் பிரச்சாரத்தில் இறங்கினர். இதனால் காரைக்குடி சட்ட மன்ற தொகுதி, பாராளுமன்ற தேர்தல் போல ஜொலித்தது. அமமுக வேட்பாளர் தேர்போகி பாண்டி, ஹெச்.ராஜா, மாங்குடி என மூன்று முக்கிய வேட்பாளர் களம் இறங்கியதால். மும்முனை போட்டி நிலவியது. தேர்தல் முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் மாங்குடி வெற்றி பெற்றார். இதனால் பி.ஜே.பி ஆதரவாளர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். தேர்தல் தோல்வியால் ஹெச்.ராஜா காரைக்குடி நிர்வாகிகளை குறை சொல்லியதாக கூறப்படுகிறது. இதனால் பலரும் மன வருத்தத்தை வெளிப்படுத்தினர்.

 



 

 

ஆரம்பத்தில் இருந்தே பி.ஜே.பி.யில் ஹெச்.ராஜாவுக்கு எதிரான ஆட்கள் செயல்பட்டுவரும் நிலையில் தற்போது ஹெச்.ராஜா கூடாரம் காலியாக உள்ளதாக வாட்சப் மூலம் தகவல் பரவியது. இந்நிலையில் காரைக்குடி நகர் தலைவர் சந்திரன், காரைக்குடி சாக்கோட்டை தெற்கு ஒன்றியத் தலைவர் பாலா உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் மாவட்ட நிர்வாகி செல்வராஜிடம் ராஜினாமா கடிதம் கொடுத்துள்ளனர். இந்நிலையில் திடீரென பி.ஜே.பி மாவட்டத் தலைவர் செல்வராஜூம் மாநிலத் தலைமைக்கு ராஜினாமா கடிதம் அனுப்பியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும்  மாவட்டத்தில் உள்ள நிர்வாகிகள் பலர் ராஜினாமா செய்து வருகின்றனர். காரைக்குடி நகரத் தலைவர் சந்திரன் தனது ராஜினாமா கடித்தத்தில்...," ஹெச்.ராஜா தனது 2021 சட்ட மன்ற தேர்தல் தோல்விக்கு என்ன காரணம் என்பதை ஆராயாமலும், சுயபரிசோனை செய்து கொள்ளாமலும், தான் செய்த தவறை மறைப்பதற்காக நிர்வாகிகள் மீது குற்றம் சாட்டுகிறார்,’’ என தெரிவித்துள்ளனர். பி.ஜே.பி நிர்வாகிகள் தொடர்ந்து ராஜினாமா செய்து வருவது கட்சி தலைமைக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
  

 

 

 



இதுகுறித்து பாஜக மாவட்டத் தலைவர் செல்வராஜ் செய்தியாளர்களிடம் ‘‘நான் ராஜினாமா செய்தது உண்மை தான். இன்னும் ஓரிரு நாட்களில் செய்தியாளர்களை சந்தித்து உண்மையை வெளிப்படுத்துகிறேன். மேலும் தேவகோட்டை,  காரைக்குடி நகர நிர்வாகிகள், கண்ணங்குடி, சாக்கோட்டை ஒன்றிய நிர்வாகிகள் ராஜினாமா செய்துள்ளனர். இன்னும் பலர் தொடர்ந்து ராஜினாமா கடிதம் கொடுத்து வருகின்றனர்,’’ என்றார்.

சிவகங்கை மாவட்டத்தில் பி.ஜே.பி பலமாக உள்ளது என ஹெச்.ராஜா தெரிவித்து வந்தநிலையில் அவருக்கு எதிராக கட்சியினர் வெளிக் கிளம்புவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.