உத்தரபிரதேசத்தில் பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர் ஆசாத் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சஹரன்பூரில் உள்ள தேவ்பந்த் பகுதியில்,  பகுஜன் மிஷன் இயக்கம் தொடர்பான பொது நிகழ்ச்சியில் பங்கேற்று வீடு திரும்பும் போது இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.


இந்த கொலைவெறித் தாக்குதல் குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், ”உத்தரபிரதேச மாநிலம் சஹாரன்பூரில் பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர் ஆசாத் மீது நடத்தப்பட்ட கொலைவெறி தாக்குதலை கண்டிக்கிறேன். இந்த வன்முறை சம்பவம் உத்தரபிரதேசத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதை அம்பலப்படுத்துகிறது. சந்திரசேகர் ஆசாத் விரைவில் குணமடைய வாழ்த்துவதுடன், இந்தக் கோழைத்தனமான தாக்குதலுக்குக் காரணமான குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்” இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 


துப்பாக்கிச் சூடு:


சஹரன்பூரில் உள்ள தேவ்பந்த் பகுதியில்,  பகுஜன் மிஷன் இயக்கம் தொடர்பான பொது நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சந்திரசேகர் ஆசாத் தனது காரில் நேற்று சென்று கொண்டிருந்தபோது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சஹரன்பூர் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, ஹரியான பதிவெண் கொண்ட டொயாட்டோ ஃபார்ச்யூனர் காரில் வந்த கும்பல் துப்பாக்கியால் சுட்டுள்ளது. நான்கு முறை துப்பாக்கியால் சுடப்பட்டதாக கூறப்படும் நிலையில், குண்டு கார் கண்ணாடிகளை துளைத்து உள்ளே நுழைந்துள்ளன. 


சந்திரசேகர் ஆசாத் காயம்:


உடனடியாக சுதாரித்த சந்திரசேகர் ஆசாத்தின் ஓட்டுனர் காரை யு-டர்ன் போட்டு திருப்பியுள்ளார். தாக்குதல் நடத்திய கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது. இந்த தாக்குதலில் சந்திரசேகர் ஆசாத்தின் இடுப்பு பகுதியில் காயம் ஏற்பட்டது. கார் கண்ணாடிகள் உடைந்து சேதமடைந்தன. காரில் பயணித்த சந்திரசேகரின் சகோதரர் உள்ளிடோருக்கு நல்வாய்ப்பாக எந்த காயமும் ஏற்படவில்லை. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், சந்திரசேகரை மீட்டு உடனடியாக அருகிலிருந்த மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.