இந்திய அளவில், காங்கிரஸ் கட்சியை பலப்படுத்தும் வகையிலும், தொண்டர்களை உற்சாகப்படுத்தும், வகையிலும் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை பயணம் ( பாரத் ஜோடா யாத்ரா ) பெயரில், இந்தியா முழுவதும் மேற்கொண்டு வரும் நடை பயணமானது இன்றுடன் 100வது நாளை எட்டியது.


தமிழ்நாடு - கன்னியாகுமரி


காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை பயணத்தை மேற்கொண்டு வருகிறார். அவர் தன்னுடைய பயணத்தை தமிழ்நாட்டின் கன்னியாகுமரியில் செப்டம்பர் 7ஆம் தேதி தொடங்கினார்.


கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த யாத்திரையில் 150 நாட்களில் 3,570 கிலோ மீட்டர் தூரம் நடைபயணம் மேற்கொண்டு காஷ்மீரை அடைய திட்டமிடப்பட்டுள்ளது.


12 மாநிலங்கள் 2 யூனியன் பிரதேசங்கள் வழியாக ராகுல் காந்தி செல்லும் ஒற்றுமை பயணத்தில் 10  நாட்களை தொட்டுள்ள இந்த பயணம், தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரம், தெலுங்கானா, மத்திய பிரதேசம் கடந்து, தற்போது ராஜஸ்தானில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார்.




வித்தியாசமான பயணம்:


பாரத் ஜோடோ யாத்திரையின் போது புல்லட் ஓட்டிய ராகுல் காந்தியின் வீடியோ மிகவும் வைரலாகி வந்த நிலையில், சில இடங்களில் சிறுது தூரம் சைக்கிளில் பயணம் மேற்கொண்டார்.


இந்திய ஒற்றுமை பயணத்தின் போது வயதான பெண் ஒருவர் ராகுல் காந்தியை கட்டித்தழுவி ஆசீர்வதித்தது, அவரை நெகிழ செய்தது.  


மத்திய பிரதேசத்தில் நடந்த பாரத் ஜோடோ யாத்திரையில் ராகுல் காந்தியுடன் ஒரு ஜெர்மன் ஷெப்பர்ட் நாய் சிறிது தூரம் நடந்தது கவனம் பெற்றது.


சில நாட்களுக்கு, இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன், ராகுலுடன் நடைபெயணம் மேற்கொண்டது, பெரும் கவனத்தை ஈர்த்தது.




இது போன்று, ஒவ்வொரு இடங்களிலும் தன்னையும் உற்சாகப்படுத்தி கொண்டு, கட்சி தொண்டர்களையும் உற்சாகப்படுத்தி கொண்டு ராகுல் காந்தி மேற்கொண்டு வரும் நடை பயணமானது, இன்று 100 நாளை எட்டியுள்ளது, காங்கிரஸ் கட்சியினர் கொண்டாடி வருகின்றனர்.


மேலும், நடைபயணத்தின் போது, பாஜக ஆட்சியில் விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளது என கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்.


விமர்சனம்:


ஆனால், அவருடைய இந்திய ஒற்றுமை பயணத்துக்கு நேர்மறையாகவும் எதிர்மறையாகவும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.


அவருடைய ஒற்றுமை பயணமானது, ராகுல் காந்தியின் அரசியலுக்கு முத்திரை பதித்துள்ளது என்றும், காங்கிரஸ் கட்சி நேரடியாக மக்களுடன் இணைந்துள்ளது என்றும் கட்சியினர் தெரிவிக்கின்றனர்.


இந்த பயணத்தால், மக்களை ஏமாற்ற முடியாது என்று பாஜகவினர் விமர்சித்து வருகின்றனர்


ஆனால், ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணமானது, காங்கிரஸ் கட்சியை எந்த அளவுக்கு மக்களிடத்தில் சென்றுள்ளது என்று வரும் நாடாளுமன்ற தேர்தலிலே முழுமையாக தெரிய வரும்.