KCR On Annamalai: சொந்த தொகுதியில் வெல்லாத அண்ணாமலை தமிழக அரசை கவிழ்க்க மிரட்டுகிறார் என தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் தெரிவித்துள்ளார்.


தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக இருப்பவர் அண்ணாமலை. இவர் அரசியல் வாழக்கைக்கு வருவதற்கு முன்னர் காவல் துறையில் பணியாற்றி வந்தார். செப்டம்பர் 2013ல்  உள்ள கார்கலா துணைப்பிரிவின் உதவி காவல் கண்காணிப்பாளராக தனது போலீஸ் வாழ்க்கையைத் தொடங்கினார். அதன் பின்னர் தனது சிறப்பான பணியால் பதவி உயர்வு பெற்றார். 2015ல் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த அண்ணாமலை பதவியை ராஜினாமா செய்து, தமிழகம் திரும்பி, இயற்கை விவசாயம் செய்து வந்தார். அதன் பின்னர், பிரதமர் மோடி, அன்றைய பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, அன்றைய தமிழக பாஜக தலைவர் எல். முருகன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். அதன் பின்னர் 2021ல் நடந்த சட்டமன்ற பொதுத் தேர்தலில், அரவக்குறிச்சி தொகுதியில், திமுகவின் எம்.எல்.ஏ ஆர். இளங்கோவனை எதிர்த்து போட்டியிட்டு, 24,816 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும், 2021 சட்டமன்ற பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்த திமுக அரசை கவிழ்ப்போம் என அடிக்கடி சொல்லி வருகிறார். இதனை குறிப்பிட்டு பேசியுள்ள தெலுங்கானா மாநில முதல்வர் கே.சி. சந்திரசேகர்ராவ், சொந்த தொகுதியில் வெல்லாத அண்ணாமலை தமிழக அரசை கவிழ்க்க மிரட்டுகிறார்  என பேசியுள்ளார். 


சமீபகாலமாகவே, தெலுங்கானா மாநில முதல்வர் கே.சி. சந்திரசேகர்ராவ். தென்னிந்தியாவின் முக்கியமான தலைவர்களில் ஒருவராக திகழும் இவர் சமீபகாலமாக பா.ஜ.க.வையும், பிரதமர் மோடியையும் கடுமையாக விமர்சித்து வருகிறார். இந்த நிலையில், முதல்வர் சந்திரசேகர் ராவ் விரைவில் தேசிய கட்சியை தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளார். தற்போது அவர் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியின் தலைவராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.






இதுதொடர்பாக சந்திரசேகர்ராவ் அலுவலகம் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கூறியிருப்பதாவது, “ தெலுங்கானா இயக்கம் தொடங்குவதற்கு முன்பு நாங்கள் செய்ததைப் போன்று பல்வேறு துறைகளைச் சேர்ந்த அறிவுஜீவிகள், பொருளாதார வல்லுனர்கள் மற்றும் நிபுணர்களுடன் நீண்ட நேர ஆலோசனைக்கு பிறகு மாற்று தேசிய நிகழ்ச்சி நிரலில் ஒருமித்த கருத்து ஏற்பட்டுள்ளது. இதனால், மிக விரைவில் தேசிய கட்சியை உருவாக்குவதும், அதன் கொள்கைகளை உருவாக்குவதும் நடைபெறும்” என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


சந்திரசேகர் ராவின் இந்த அறிவிப்பால் தேசிய அரசியலில் மிகப்பெரிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தெலுங்கானா உருவாவதற்கு மாபெரும் போராட்டங்களை முன்னெடுத்து, பின்னர் அந்த மாநிலத்தின் முதல்வராகவும் பொறுப்பு வகித்து வரும் சந்திரசேகர் ராவ் தென்னிந்தியாவில் பிரதமர் மோடியை மிகவும் வலுவாக எதிர்த்து வரும் தலைவர்களில் ஒருவர் ஆவார்.


தெலுங்கானா மாநிலத்தில் இரண்டாவது முறையாக ஆட்சியைப் பிடித்த பிறகு தேசிய அரசியலில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார் சந்திரசேகர் ராவ். 2019 தேர்தலுக்கு முன்பே அவர் மம்தா பானர்ஜி, தேவகவுடா, அகிலேஷ் யாதவ், ஜெகன்மோகன் ரெட்டி, நவீன் பட்நாயக், ஸ்டாலின் ஆகியோர சந்தித்தார். ஆனால், அப்போது அவரால் தேசிய அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை.


இருப்பினும், கடந்த சில மாதங்களாகவே பிரதமர் மோடியையும், பா.ஜ.க.வையும் மிக கடுமையாக விமர்சித்து வருகிறார். தெலுங்கானாவிற்கு பிரதமர் மோடியை சந்தித்தபோது அவரைச் சந்திப்பதையும் தவிர்த்தார். எம்.எல்.ஏ, மாநில அமைச்சர், மத்திய அமைச்சர், முதல்வர் என பல்வேறு பொறுப்புகளை வகித்த கே.சி.சந்திரசேகர்ராவ் தற்போது தேசிய அரசியலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.