ஓபிஎஸ் அணியின் கொள்கை பரப்பு செயலாளர் பெங்களூர் புகழேந்தி சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியது, "கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை திசை திருப்பவே கனகராஜ் ஜெயலலிதாவின் டிரைவர் இல்லை என எடப்பாடி பழனிசாமி சொல்கிறார். அப்போது கனகராஜ் என்னவாக இருந்தார்? கனகராஜ் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஓட்டுநர்களின் ஒருவராக இருந்தவர்தான். கனகராஜ் ஜெயலலிதாவால் வெளியே அனுப்பப்பட்டவர். இருந்தும் அவர் எடப்பாடி பழனிசாமி, சசிகலா உள்ளிட்டோரிடம் மிகவும் நெருக்கத்தில் இருந்து வந்தார். கனகராஜன் சகோதரர் தனபாலை உடனடியாக விசாரிக்க வேண்டும். கொடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக எடப்பாடி பழனிசாமி, சசிகலா, சுதாகர் உள்பட 12 பேரிடம் விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டும், தமிழக அரசு இதுவரை எடப்பாடி பழனிசாமியை விசாரிக்காதது ஏன்? தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினுக்கும் எடப்பாடி பழனிச்சாமிக்கும் என்ன அண்டர்ஸ்டாண்டிங்? என்று கேள்வி எழுப்பினார். 



எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்த போது நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கின் படி கனகராஜ், ஜெயலலிதாவின் ஓட்டுநர் என்று குறிப்பிட்டுள்ளது. ஆனால் நான்கரை ஆண்டிற்கு பின்னர் எடப்பாடி பழனிசாமி, கனகராஜை அம்மாவின் ஓட்டுநரே இல்லை என்று கூறுவது வேடிக்கையாக உள்ளதாக கூறினார். எடப்பாடி பழனிசாமிக்கு தமிழக அரசு உடந்தையாக இருந்து வருகிறது. கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் இதுவரை எடப்பாடி பழனிசாமி தமிழக அரசு ஏன் விசாரிக்க வேண்டும். இதேபோன்று பல்வேறு வகையில் எடப்பாடி பழனிசாமியை தமிழக அரசு ஆதரித்து வருகிறது. குறிப்பாக மதுரை மாநாட்டிற்கான கட்டவுட் விவகாரத்தில் கூட காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை‌ என்று கூறினார். கொடநாடு கொலை கொள்ளை நடத்தப் போது ஓபிஎஸ் தர்மயுத்தம் நடத்தினார்.


அதன்பின் மீண்டும் எடப்பாடி பழனிசாமியுடன் சேர்ந்ததால்தான் ஓ.பன்னீர்செல்வத்தின் அரசியல் வாழ்க்கை போச்சு. இது பாஜக பண்ண கூத்து! என்றார். கனகராஜ் ஜெயலலிதாவின் டிரைவர் என பேசினால் வழக்கு போடுவோம் என தெரிவித்துள்ள எடப்பாடி பழனிசாமிக்கு தைரியம், தில் இருந்தால் என் மீது வழக்கு போடட்டும் என்று சவால் விடுத்தோர். நான்கரை ஆண்டுகள் முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி கனகராஜ் ஜெயலலிதாவின் டிரைவர் இல்லை என கூறவில்லையே. கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் சிபிசிஐடி மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. சிபிஐ-யை நாட உள்ளதாக தெரிவித்தார். 



கொடநாடு விவகாரத்தில் முதலமைச்சரின் நடவடிக்கையால் திமுக தொண்டர்களே தலையில் அடித்துக் கொள்கிறார்கள். செந்தில் பாலாஜி சிறைக்குச் சென்ற போது திமுகவில் உள்ள அனைத்து அமைச்சர்களும் மகிழ்ச்சியில் பார்ட்டி பண்ணினர். அதைப் பற்றி பேச நான் விரும்பவில்லை. உடனடியாக எடப்பாடி பழனிசாமியிடம் விசாரணை நடத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். ஓபிஎஸ் புதிய கட்சி ஆரம்பிக்க உள்ளாரா என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், அதிமுக எங்களது கட்சி. கூடிய விரைவில் எடப்பாடி பழனிசாமி தான் புதிய கட்சி துவங்க வேண்டும். நாடாளுமன்ற தேர்தலைப் பொறுத்தவரை நாங்கள் அதிமுகவில் தான் வேட்பாளர்களை நிறுத்த உள்ளோம். செப்டம்பர் மூன்றாம் தேதி காஞ்சிபுரத்தில் மிகப்பிரம்மாண்டமாக நாடாளுமன்ற தேர்தல் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. காஞ்சிபுரம் பொதுக் கூட்டத்தினை மாநாடு போல மிக பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தை ஓபிஎஸ் தொடங்கியுள்ளார். தேர்தல் ஆணையம் சொல்லட்டும் அதிமுக யாருடையது என்று. இபிஎஸ் இருக்கும் இடத்தில் எங்களுக்கு வேலையில்லை, மோடியுடன் அவர் இருந்தால் அங்கும் எங்களுக்கு வேலையில்லை." என தெரிவித்தார்.