தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் 7 மாநிலங்களில் உள்ள 13 சட்டப்பேரவை தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலில் 10இல் வெற்றிபெற்று பிரம்மாண்ட வெற்றியை பதிவு செய்திருக்கிறது இந்தியா கூட்டணி.
மேற்குவங்கத்தில் 4 தொகுதிகளுக்கும் இமாச்சல பிரதேசத்தில் 3 தொகுதிகளுக்கும் உத்தரகாண்டில் 2 தொகுதிகளுக்கும் தமிழ்நாடு, மத்திய பிரதேசம், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் தலா ஒரு தொகுதிக்கும் கடந்த கடந்த 10ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.
தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டது. அதன்படி, 10 தொகுதிகளில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. இரண்டு தொகுதிகளில் பாஜகவும் ஒரு தொகுதியில் சுயேச்சையும் வெற்றி பெற்றுள்ளனர்.
நேரடி போட்டியில் காங்கிரஸிடம் வீழ்ந்த பாஜக: இடைத்தேர்தல் நடைபெற்ற 13 தொகுதிகளில் 6 தொகுதிகளில் காங்கிரஸ், பாஜகவுக்கு இடையே நேரடி போட்டி நிலவியது. அதில், காங்கிரஸ் 4 தொகுதிகளிலும் பாஜக 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.
காங்கிரஸ் ஆட்சியில் உள்ள இமாச்சலப் பிரதேசத்தில் டேஹ்ரா, நலகர் தொகுதிகளை காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது. ஹமிர்பூர் தொகுதியில் மட்டுமே பாஜக வெற்றி பெற்றுள்ளது. பாஜக ஆட்சியில் உள்ள உத்தரகாண்டில் இரண்டு தொகுதிகளையும் காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது. மத்திய பிரதேசத்தில் அமர்வாரா தொகுதியில் 15 ஆண்டுகளுக்கு பிறகு பாஜக வெற்றி பெற்றுள்ளது.
சம்பவம் செய்த மம்தா: மேற்கு வங்கத்தில் இடைத்தேர்தல் நடத்தப்பட்ட ராய்கஞ்ச், ரணகாட் தக்சின், பாக்தா, மணிக்தலா ஆகிய 4 சட்டப்பேரவை தொகுதிகளிலும் மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம், மம்தாவின் கோட்டை மேற்குவங்கம் என்பது நிரூபணமாகியுள்ளது.
தமிழ்நாட்டில் விக்கிரவாண்டி தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் திமுக பிரம்மாண்ட வெற்றியை பதிவு செய்துள்ளது. அதேபோல, பஞ்சாபில் இடைத்தேர்தல் நடைபெற்ற மேற்கு ஜலந்தர் தொகுதியில் ஆளும் ஆம் ஆத்மி கட்சி வெற்றி வாகை சூடியுள்ளது.
ஐக்கிய ஜனதா தளம் - பாஜக கூட்டணி ஆட்சி நடந்து வரும் பீகாரில் ரூபாலி தொகுதியில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என அனைவரையும் தோற்கடித்து சுயேச்சையாக போட்டியிட்ட சங்கரி சிங் வெற்றி பெற்றுள்ளார். கடந்த மாதம் வெளியான மக்களவை தேர்தல் முடிவுகள் ஆளும் பாஜகவுக்கு பேரதிர்ச்சியாக அமைந்தது.
அக்கட்சிக்கு தனிப்பெரும்பான்மை கூட கிடைக்கவில்லை. 240 தொகுதிகளில் வெற்றிபெற்ற பாஜக, கூட்டணி கட்சிகளின் ஆதரவில் ஆட்சி அமைத்தது. இப்படிப்பட்ட சூழலில், 7 மாநிலங்களில் நடந்த இடைத்தேர்தலும் ஆளும் பாஜகவுக்கு அதிர்ச்சியை தந்துள்ளது.
இந்தாண்டு இறுதியில் நடைபெற உள்ள மாநில தேர்தல்களிலும் இந்தியா கூட்டணியின் வெற்றி தொடருமா அல்லது பாஜக மீண்டெழுமா என பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. மகாராஷ்டிரா, ஹரியானா, ஜார்க்கண்ட், ஜம்மு காஷ்மீரில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.