மதுபான கொள்கை வழக்கு தொடர்பாக கடந்த மார்ச் 21ஆம் தேதி அமலாக்க இயக்குநரகத்தால் (ED) டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். இதை தொடர்ந்து கடந்த மே மாதம், மக்களவை தேர்தலைக் கருத்தில் கொண்டு அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால ஜாமின்
வழங்கியது.
ஜாமினை நிறுத்திவைத்த டெல்லி உயர் நீதிமன்றம்:
இடைக்கால ஜாமின் நிறைவடைந்ததை தொடர்ந்து ஜூன் 2ஆம் தேதி, அரவிந்த் கெஜ்ரிவால் சரண் அடைந்தார். இதையடுத்து, ஜாமின் கோரி முதலமைச்சர் கெஜ்ரிவால் சார்ரபில் டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
கெஜ்ரிவாலின் வழக்கறிஞர் மற்றும் அமலாக்கத்துறையின் வாதங்களை நீதிமன்றம் கேட்டறிந்த நிலையில், கெஜ்ரிவாலுக்கு சாதகமாக, இடைக்கால ஜாமீன் வழங்கி தீர்ப்பு வழங்கியது. இப்படிப்பட்ட சூழலில், கடந்த வாரம், அரவிந்த் கெஜ்ரிவால், சிறையில் இருந்து இன்று வெளிவர இருந்தார்.
ஆனால், சிறையில் இருந்து வெளியே வருவதற்கு சில நிமிடங்கள் இருந்த நிலையில், ஜாமீனை ரத்து செய்தது டெல்லி உயர்நீதிமன்றம். விசாரணை நீதிமன்றம் ஜாமின் உத்தரவு வழங்கி இருந்தமைக்கு எதிராக, டெல்லி உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
உச்ச நீதிமன்றத்தை நாடும் கெஜ்ரிவால்:
இந்த நிலையில், ஜாமினை நிறுத்தி வைத்த டெல்லி உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தை நாட உள்ளார் அரவிந்த் கெஜ்ரிவால். இந்த மனு மீதான விசாரணை நாளை நடத்தப்பட வேண்டும் என அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பு வழக்கறிஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு ஆட்சியில் உள்ள டெல்லியில் மதுபான கொள்கையை சாராய நிறுவனங்களுக்கு சாதகமாக திருத்தி லஞ்சம் பெற்றதாக பகீர் புகார் எழுந்தது.
இந்த வழக்கில் ஆம் ஆத்மி கட்சி தலைவர்களை ஒருவர் பின் ஒருவராக அமலாக்கத்துறை கைது செய்து வருகிறது. டெல்லி துணை முதலமைச்சராக பதவி வகித்து வந்த மணீஷ் சிசோடியா (கைதுக்கு முன்பு பதவியை ராஜினாமா செய்துவிட்டார்), ஆம் ஆத்மி கட்சியின் தகவல் தொடர்பு பிரிவு பொறுப்பாளர் விஜய் நாயர், மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் சிங் (தற்போது ஜாமீனில் வெளியே உள்ளார்) ஆகியோர் அமலாக்க்துறையால் கைது செய்யப்பட்டனர். அந்த வரிசையில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலும் கைது செய்யப்பட்டார். சுதந்திர இந்திய வரலாற்றில் சிட்டிங் முதலமைச்சர் ஒருவர் கைது செய்யப்படுவது அதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.