கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம் தேசிய அளவில் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், இதற்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 


கண்டனம் தெரிவித்த நிர்மலா சீதாராமன்: ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு நிர்மலா சீதாராமன் அளித்த பேட்டியில், "200க்கும் மேற்பட்டோர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 56 பேர் இறந்துள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் பட்டியலின சமூகத்தை சேர்ந்தவர்கள்.


இந்த சம்பவத்தை நான் கண்டிக்கிறேன். இதற்கு எதிராக காங்கிரஸ் ஒரு வார்த்தை கூட பேசாதது எனக்கு அதிர்ச்சி அளிக்கிறது. 'டாஸ்மாக்' எனப்படும் அரசால் நடத்தப்படும் கடைகளில் உரிமம் பெற்ற மதுபானங்கள் கிடைக்கும் மாநிலத்தில். அதையும் மீறி களக்குறிச்சியில் ரசாயனம் கலந்த சட்டவிரோத மதுபானம் வழங்கப்படுகிறது.


காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே எங்கே?... ராகுல் காந்தி எங்கே?...வெற்றிபெறுவார் என உறுதியாக இருப்பதாலேயே இங்கு அவர் தேர்தலில் போட்டியிடுகிறார். கள்ள சாராயத்தால் தலித்துகள் இறக்கும் போது, ​​ராகுல் காந்தியிடம் இருந்து எந்த அறிக்கையும் வரவில்லை. இந்த முழு விவகாரத்தையும் சிபிஐ விசாரணைக்கு ஒப்படைக்க வேண்டும் என்று கோருகிறேன்" என்றார்.


தொடர்ந்து உயரும் பலி எண்ணிக்கை: கடந்த 19ஆம் தேதி, கள்ளக்குறிச்சியில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்ததால் உடல்நலம் பாதிக்கப்பட்ட 193 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் இதுவரை 56 பேர் உயிரிழந்துவிட்டனர். கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம் மற்றும் புதுச்சேரி மருத்துவமனைகளில் 139 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, அமைச்சரும் திமுகவின் இளைஞரணி செயலாளருமான உதயநிதி, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் உள்ளிட்டோர் கள்ளக்குறிச்சிக்கு சென்று பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை சந்தித்து நலம் விசாரித்தனர்.


கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சமும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அறிக்கை வெளியிட்டிருந்த தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், பெற்றோரை இழந்த பிள்ளைகளின் கல்வி செலவை அரசே ஏற்கும் என்றும், அவர்களுக்கு மாதாந்திர உதவி தொகையையும் அறிவித்தார்.