சென்னை அரும்பாக்கம் ராதாகிருஷ்ணன்நகர் பகுதி மக்களை அவர்களது வசிப்பிடத்திலிருந்து அப்புறப்படுத்தும் பணிகளுக்குச் சென்னை மாநகராட்சி ஆயத்தமாகி வருகிறது.  இதனை பல்வேறு அரசியல் கட்சிகள் வலுவாக எதிர்த்து வருகின்றன. இது தொடர்பாக திமுக கூட்டணிக் கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சி இன்று சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடியைச் சந்தித்துள்ளது.


மேலும் குடிசைகளை அகற்றும் பணியால் பாதிக்கப்பட்ட மக்களை அந்தக் கட்சியின் தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் நேரில் சந்தித்து அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விசிக தலைவர் தொல். திருமாவளவன்:


’அரும்பாக்கம் ராதாகிருஷ்ணன் நகர் மக்களை சென்னை மாநகராட்சி அப்புறப்படுத்தி அவர்களுக்கு புளியந்தோப்பு பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகள் கொடுக்கப்பட்டுள்ளது. அவர்களில்  காலங்காலமாக இதே பகுதியில் வாடகைக்கு குடியிருக்கும்  21 பேருக்கு ரேஷன் அட்டை, ஆதார் அட்டை என அனைத்து ஆவணங்கள் இருந்தும் வீடுகள் ஒதுக்கப்படவில்லை. 


இந்த 21 பேருக்கும் வீடு வழங்க விரைவில் அமைச்சர் மற்றும் மாநகராட்சி ஆணையர் ஆகியோரை நேரில் சந்தித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வலியுறுத்த உள்ளோம்




சென்னையின் பூர்வக்குடி மக்களை பெருநகருக்கு வெளியே அப்புறப்படுத்தும் போக்கிற்கு தமிழக முதல்வர் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது. மண்ணின் பூர்வ குடிமக்களை அப்புறப்படுத்துவது அரசியல் ரீதியாக திமுகவிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சுட்டிக்காட்டுகிறது’ என தெரிவித்தார்


இதனைத் தொடர்ந்து ரிப்பன் மாளிகையில் சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடியை நேரில் சந்தித்து அரும்பாக்கம் ராதாகிருஷ்ணன் நகர் மக்களின் கோரிக்கைகளை வலியுறுத்தினார்


இந்த நிகழ்வில் கட்சியின் துணைப் பொதுச் செயலாளரும் நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினருமான ஆளூர் ஷாநவாஸ், தலைமை நிலைய செயலாளர் பாலசிங்கம் அரசியல் குழு தலைவர் நீலவானத்து நிலவன் ,மத்திய சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் இரா. செல்வம், ஆகியோர் உடனிருந்தனர்

இதற்கிடையே, சென்னை அரும்பாக்கத்தில் உள்ள ராதாகிருஷ்ணன் நகரில் கூவம் நதிக்கரைக்கு அருகில் வசிக்கும் 250 பூர்வகுடிகளுக்கு மாற்று இடம் கொடுக்கப்படாமல் கட்டாய இடமாற்றம் செய்யப்படுவதாக சமூகவலைத்தளங்களில் செய்திகள் உலா வந்த வண்ணம் இருந்தன. சென்னை அரும்பாக்கம் ராதாகிருஷ்ணன் நகரில் நடப்பது என்ன என்பது குறித்து நேரில் சென்று கள ஆய்வு மேற்கொண்டோம்.

2015ஆம் ஆண்டில் ஏற்பட்ட சென்னை பெருவெள்ளத்திற்கு பிறகு கூவம் நதிக்கரையோரம் இருக்கும் குடியிருப்புகளை அகற்றி, அங்குவசிக்கும் மக்களை வேறு இடங்களுக்கு அரசு அனுப்பி வருகிறது. இந்த நிலையில் ராதகிருஷ்ணன் நகர் பகுதியில் வெள்ள பாதிப்புக்கு அதிகம் வாய்ப்புள்ள சுமார் 247 வீடுகளை அப்புறப்படுத்த போவதாக ஏற்கெனவே அரசு அறிவித்திருந்தது. வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்க உள்ள நிலையில் கூவம் ஆற்றில் வரும் நீரின் அளவு அதிகரிக்கும் என்பதால் ஆற்றின் கரைக்கு நெருக்கமாக கட்டப்பட்டுள்ள 100 குடியிருப்புகளை  முதற்கட்டமாக இடிக்க அரசு திட்டமிட்டுள்ளது.

எனவே கூவம் ஆற்றின் கரைக்கு மிக அருகில் இருக்கும் 100 குடும்பங்களில் 93 குடும்பங்களுக்கு வீடுகள் ஒதுக்கப்பட்ட நிலையில் அதே பகுதியில் வசிக்கும் 7 குடும்பங்களுக்கு மட்டும் இன்னும் வீடுகள் ஒதுக்கப்படவில்லை என்கின்றனர், அப்பகுதி மக்கள். 

ராதாகிருஷ்ணன் நகர் பகுதியில் அரசால் அப்புறப்படுத்தப்பட உள்ள சில வீடுகளின் உரிமையாளர்கள் வேறு இடங்களில் வசித்து வரும் நிலையில் ஆற்றின் கரையோரம் உள்ள தங்களது வீடுகளை வாடகைவிட்டு உள்ளனர். இந்த நிலையில் புளியந்தோப்பு பகுதியில் ஒதுக்கப்பட்டுள்ள வீடுகள், வேறு பகுதியில் வசித்து வரும் வீட்டின் உரிமையாளர்களுக்கே வழங்கப்பட்டுள்ளதாகவும் ராதாகிருஷ்ணன் நகர் மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.