சட்டசபை தேர்தலுக்கான பரப்புரை தமிழகத்தில் நாளையுடன் நிறைவு பெற உள்ளதால், அனைத்து கட்சியினரும் வாக்கு சேகரிப்பில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் 28-ந் தேதி கோவை மாவட்டம் ஒக்கிலிபாளையத்தில் அ.தி.மு.க.வினர் மற்றும் தி.மு.க.வினர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். அப்போது, இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, அது அடிதடியாக மாறியது.


இதையடுத்து, இந்த அடிதடி தொடர்பாக வடக்கிபாளையம் காவல்துறையினர் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் மகன் பிரவீன் உள்பட அ.தி.மு.க. தரப்பில் சிலர் மீதும், தி.மு.க. தரப்பில் சிலர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர்.




இந்த நிலையில், இந்த அடிதடி வழக்கின்கீழ் பொள்ளாச்சி ஜெயராமன் மகன் பிரவீன் உள்பட அ.தி.மு.க. தரப்பில் 7 பேரை கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் ஆணையிட்டுள்ளார். மேலும், அடிதடியில் ஈடுபட்ட தி.மு.க. தரப்பினர் 4 பேரையும் கைது செய்ய இந்த ஆணையில் உத்தரவிடப்பட்டுள்ளது.


வாக்கு எண்ணிக்கைக்கு இன்னும் இரு நாட்களே உள்ள நிலையில், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனின் மகனை கைது செய்ய ஆணை பிறப்பித்திருப்பது அ.தி.மு.க.வினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொள்ளாச்சி பாலியல் வழக்கில் பொள்ளாச்சி ஜெயராமனின் மகனுக்கும் தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்ததும் குறிப்பிடத்தக்கது.