நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான கூட்டணி குறித்து அண்ணாமலை முடிவு செய்வார் என்று பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பற்றி சென்னையில் உள்ள கமலாலயத்தில் பாஜகவினர் இன்று ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனைக்கு பிறகு பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார். அந்தப் பேட்டியில், ‘வரும் 31ஆம் தேதிக்கு பிறகு பாஜக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்யத் தொடங்குவார்கள். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான பாஜக வேட்பாளர் பட்டியலை அண்ணாமலை அறிவிப்பார். அதிமுகவுடனான கூட்டணி குறித்து இன்றைய கூட்டத்தில் கலந்துரையாடினோம். தனித்து போட்டி என்கிற கேள்விக்கு தற்போது அவசியம் ஏற்படவில்லை. கூட்டணி குறித்து முடிவெடுக்க மாநில பாஜக தலைவர் அண்ணாமலைக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது. அதனால், கூட்டணி குறித்து அவர் முடிவு செய்து அறிவிப்பார். அதிமுக உடன் கூட்டணி சுமூகம், சமூகம் இல்லை என்ற எந்தக் கருத்தும் நான் தெரிவிக்கவில்லை” என்று கூறினார்.
தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அடுத்த மாதம் 19 ம் தேதி நடைபெறும் என்று தமிழ்நாடு தேர்தல் ஆணையம் சமீபத்தில் அறிவிப்பை வெளியிட்டது. இதையடுத்து, தேர்தல் நடைபெற உள்ள பகுதிகள் முழுவதும் ல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தது. தொடர்ந்து, அரசியல் கட்சிகள் தேர்தலுக்கான பணிகளைத் தொடங்கி விட்டது.
தமிழ்நாட்டில் நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளதால் பலத்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. சட்டசபைத் தேர்தல், நாடாளுமன்ற தேர்தல்களை காட்டிலும் உள்ளாட்சித் தேர்தல்களில் வேட்பாளர்களிடையே பலத்த போட்டி நிலவி வருகிறது.
தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தல் மூலமாக மொத்தம் 12 ஆயிரத்து 838 உறுப்பினர்களின் பதவிகள் நேரடி தேர்தல் மூலமாக நிரப்பப்பட உள்ளது. இது மட்டுமின்றி, மார்ச் 4-ந் தேதி நடைபெறும் மறைமுகத் தேர்தல் மூலமாக 1,298 பதவியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
தேர்தலில் போட்டியிட்டு பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுங்கட்சியான தி.மு.க. முதல் எதிர்கட்சியான அதிமுக வரை தனது தேர்தல் பணிகளை துரிதப்படுத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்