தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் திருநெல்வேலி கிழக்கு மாநகர் மாவட்டம் மற்றும் தென்காசி மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திருநெல்வேலி மாவட்டம் செங்குளம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். இக்கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதனை தொடர்ந்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ”இந்த தேர்தல் தேசத்தின் இரண்டாம் சுதந்திரப் போர். யார் ஆள வேண்டும், யார் ஆளக்கூடாது என்பதை இந்திய தேச மக்கள் தீர்மானித்துள்ளனர். அதன் அடிப்படையில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்று அனைத்து மாவட்ட மண்டல தலைவர்களுக்கும் வேண்டுகோள் வைத்துள்ளோம்.
கூட்டத்தில் தலைவர் ராகுல் காந்தி தமிழ்நாட்டில் போட்டியிட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம், தமிழகத்தின் பேரிடருக்கு மழை வெள்ள பாதிப்புக்கு உள்ளான திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு ஒரு நயா பைசா கூட மோடி அரசு கொடுக்கவில்லை, எதற்காக கோடி தமிழ்நாட்டை ஓரம் கட்டிவிட்டு வஞ்சித்து விட்டு வாக்கு சேகரிக்க வருகிறார். தமிழக மக்கள் ஒருபோதும் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் ஐ ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். இது சமூக நீதிக்கான மண். அவரை புறம் தள்ளுவார்கள் என தெரிவித்தார், தொடர்ந்து பேசிய அவர், போதை பொருட்களை பற்றி அண்ணாமலை பேசி வருகிறார், இதன் தலைவர்கள் யார்? யார்? எந்த துறைமுகத்திலிருந்து எந்த துறைமுகத்திற்கு இது கைமாற்றப்படுகிறது?
குஜராத் மாநிலம் முந்த்ரா, காண்ட்லா ஆகிய துறைமுகம் வழியாக தான் தமிழகத்துக்கு போதை பொருட்கள் வருகிறது. இதுவரை அங்கிருந்து 1000 டன் போதை பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. குஜராத்தில் இருந்து கிருஷ்ணா பட்டினம் துறைமுகத்திற்கு வந்து அங்கிருந்து தமிழகம் வருகிறது. இதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்று அண்ணாமலை பதில் சொல்ல வேண்டும். தமிழகத்திற்கு இதுவரை ஜிஎஸ்டியில் எவ்வளவு பணம் கொடுத்துள்ளீர்கள்? வெள்ளை அறிக்கை கொடுக்க தயாரா?” என்று கேள்வி எழுப்பினார்.
தமிழக மீனவர்களுக்கு ஒரு நீதி? குஜராத் மீனவர்களுக்கு ஒரு நீதி என பாஜக அரசு செயல்படுகிறது. இது தேசத்திற்கு விரோதமான செயல். இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு நேர்மாறாக விரோதமாக செயல்பட்டுக் கொண்டு இருக்கிறார். இதனை காங்கிரஸ் பேரியக்கம் வன்மையாக கண்டிக்கிறோம் என்றார், மீனவர்களை பாதுகாப்போம் என்றார்கள். ஆனால் இன்று தமிழக மீனவர்களின் படகுகள் இலங்கையால் பறிமுதல் செய்யப்படுகிறது. பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் மாற்றான் தாய் மனப்போக்கோடு செயல்படுகிறார்கள். பாஜகவில் தேர்தலில் போட்டியிட ஆளில்லை. பகவான் சிங் சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஸ்வர்தன் ஆகியோர் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்ட பிறகு தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என விலகி விட்டார்கள்.
திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை எங்கள் பலம் எவ்வளவு என்று எங்களுக்கு தெரியும். அதன் அடிப்படையில் தொகுதிகள் ஒதுக்கப்படும் இனிப்பான செய்தி இன்னும் இரண்டு நாட்களில் கிடைக்கும். இது ஜனநாயக நாடு. யார் வேண்டுமானலும் இங்கு போட்டியிடலாம். ஆனால் பாஜகவிற்கு இங்கு இடமில்லை. தமிழகத்தில் பாஜக நோட்டாவை விட மோசமாக போவார்கள் என்று தெரிவித்தார்.
முன்னதாக அவர் கூட்டத்தில் பேசுகையில், தமிழகத்தில் தொன்மையான பொருநை நாகரீகத்தை கொண்ட திருநெல்வேலி மாவட்டம் முதன்மையாக இருக்க வேண்டும் என ராகுல் காந்தி விரும்புகிறார். ராகுல் காந்தியின் கரத்தை பலப்படுத்த வேண்டும் என்பதுதான் நமது குறிக்கோளாக இருக்க வேண்டும். மோடி எதற்காக தமிழகத்திற்கு அடிக்கடி வருகிறார். திருவள்ளுவர் பற்றி பேசுகிறார், திருவள்ளுவருக்கு காவி சாயம் பூசுகிறார். ஜெயலலிதாவை புகழ்ந்து அதிமுக வாக்கு வங்கியை பெற நினைக்கிறார். அதே மேடையில் இருக்கும் ஒருவர் ஜெயலலிதாவை இகழ்ந்து பேசுகிறார். நாட்டில் 15 எய்ம்ஸ் மருத்துவமனைகளில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழகத்தில் மட்டும் எய்ம்ஸ் மருத்துவமனை இன்னும் திறக்கப்படவில்லை. பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு யாருக்கும் பாதுகாப்பு இல்லை.
பாஜக ஆட்சியில் பட்டியல் இன மக்கள் மீது வழக்குகள் 44.8% அதிகரித்துள்ளது. சிறுபான்மை மக்கள் இந்த ஆட்சியில் மகிழ்ச்சியாக வாழவில்லை. சிஐஏ போன்ற சட்டங்களை கொண்டு வருவார்கள் என ஒரு அச்சத்தோடு வாழ்கிறார்கள். காங்கிரஸ் இயக்கத்தில் சிறு சிறு தவறு செய்தால் கூட இந்த இயக்கத்தை வளர்த்தவர்களின் ஆன்மாக்கள் அவர்களை மன்னிக்காது என பேசினார்