தமிழ்நாட்டில் ஆட்சி செய்த அனைத்து அரசியல் கட்சிகளின் ஊழல் பட்டியலும் வெளியிடப்படும் என, பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக ஊழல் தொடர்பான பட்டியல் மேலும் 3 பாகங்களாக வெளியிடப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பு:
சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ”சுற்றி இருக்கக்கூடிய நண்பர்களின் உதவி கட்சியின் உதவியை வைத்து எனக்கான செலவுகளை செய்து வருகிறேன். எனக்குள்ள 3 உதவியாளர்களின் சம்பளத்தை 3 நண்பர்கள் வழங்குகின்றனர். காருக்கான டீசல் பணத்தை கட்சி வழங்குகிறது. நான் வசிக்கும் வீட்டிற்கான வாடகையை மற்றொருவர் தருகிறார். ஒரு முதல் தலைமுறை அரசியல்வாதிக்கு இருக்ககிற பிரச்னைகள் எனக்கும் உள்ளது. அவற்றை பல நல்ல மனிதர்களின் உதவியோடு தான் நகர்த்த முடிகிறது.
”இந்த அரசியல் சரிபட்டு வராது”
எதற்கும் துணிந்து தான் நான் அரசியலுக்கு வந்துள்ளேன். கடந்த இரண்டு மாதங்களாக மிகவும் உக்கிரமாக இருக்கிறேன். மாலையை போடுவது, கும்புடு போடுவது, தேர்தலின் போது ஒன்றாக சேர்வது போன்ற அரசியல் எனக்கு சரிபட்டு வராது. ஒரு விஷயத்தை எதிர்க்கிறோம் என்றால் அடிப்படையில் இருந்து எதிர்க்க வேண்டும் என்கிற முடிவுக்கு நான் வந்துவிட்டேன். அதனால் இப்போது நீங்கள் பார்த்த திமுக ஃபைல்ஸ் பகுதி ஒன்றுடன் நிற்கப்போவதில்லை. தமிழ்நாடு அரசில் இதுவரை எந்த கட்சிகள் எல்லாம் அமர்ந்து இருக்கிறதோ, அத்தனை கட்சிகளின் ஊழலும் 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு அம்பலப்படுத்தப்படும்.
முடிந்தால் அண்ணாமலையை மாற்றுங்கள்
காரணம் ஊழலை எதிர்க்க வேண்டும் என்றால் மொத்தமாக தான் எதிர்க்க வேண்டும். பாதி எல்லாம் எதிர்த்தால் மக்களுக்கு நம் மீது நம்பிக்கை வராது. அதனால் அத்தனை பேரையும் எதிர்ப்போம். அப்படி எதிர்க்கக் கூடாது என நினைப்பவர்கள் டெல்லிக்கு சென்று அண்ணாமலையை மாற்றிவிட்டு வாருங்கள். ஆனால் அண்ணாமலை இருக்கும் வரை எதிர்ப்பான். சக்தி இருக்கு, திராணி இருக்கு என நினைப்பவர்கள் சென்று அண்ணாமலையை மாற்றி விட்டு வாருங்கள். காரணம் இது மோடி விரும்புகிற அரசியல், நான் விரும்புகிற அரசியல் கிடையாது. யாருக்கும் பயந்தோ, பணிந்தோ, குணிந்தோ அவர்கள் தயவில் எம்.பி., எம்.எல்.ஏ ஆகவேண்டியதில்லை. 10 தேர்தல்களில் தோற்றாலும் இங்கே தான் நிற்பேன்.
ஆங்கிலேயர்களை மிஞ்சிய கொள்ளை
திமுக செய்த பல தவறுகளை பாஜக தான் சரி செய்து வருகிறது. பட்டியல் நிறைய உள்ளது. முதலமைச்சர் மீது முதல் பட்டியல் இருக்க வேண்டும் என்று தான் இன்றைய பட்டியலை வெளியிட்டுள்ளேன். தமிழ்நாட்டின் மொத்த வருமானம் நடப்பாண்டில் ரூ.2.3 லட்சம் கோடி. ஆனால், இவர்களின் பினாமி சொத்துக்களின் மதிப்பு மட்டுமே கிட்டத்தட்ட ரூ.2 லட்சம் கோடியை தாண்டுகிறது. குறிப்பிட்ட 13 பேரின் சொத்து மதிப்பு மட்டும் 1.3 லட்சம் கோடி ரூபாயை தாண்டுகிறது. ஆங்கிலேயர்கள் கூட கொள்ளையடிக்காத அளவிலான கொள்ளையை திமுக செய்துள்ளது. உங்களால் என்ன முடியொமோ அதை செய்துகொள்ளுங்கள் ஆனால் நான் அடங்கப்போவதில்லை.
பார்ட்-4 வரை நீளும் ஊழல் பட்டியல்:
மின்சாரத்தை தொட்டுவிட்டோம் இனி அதை விட முடியாது. பார்ட் ஒன்றுடன் நிறுத்த முடியாது. இனி பார்ட் 2, பார்ட் 3 மற்றும் பார்ட் 3 என, நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக மேலும் 3 பார்ட் ஊழல் பட்டியல் வெளியிடப்படும். வேறு வேறு கட்சிகளையும் இதில் கொண்டு வரத்தான் போகிறோம். அதையெல்லாம் பார்த்துவிட்டு யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை மக்கள் தீர்மானிக்கட்டும்” என அண்ணாமலை ஆவேசமாக பேசினார்.