தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி இன்று சென்னையில் உள்ள ஆளுநர் மாளிகையில் பனாரஸ் இந்து பல்கலைகழகத்தின் (BHU) தமிழ் பயிலும் மாணவர்களின் “தமிழ்நாடு தரிசனம்” நிகழ்ச்சியில் கலந்துரையாடினார்.


தமிழரல்லாத மாணவர்களுடன் ஆளுநர் கலந்துரையாடல்:


கடந்த 2022ஆம் ஆண்டு, நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் ஏற்பாடு செய்யப்பட்ட காசி தமிழ் சங்கமத்தின் போது, பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழியில் பல்வேறு பாடப்பிரிவுகளைப் படிக்கும் மாணவர்களை தமிழ்நாடு ஆளுநர் சந்தித்து 'தமிழ்நாடு தர்ஷன்' என்ற பயணத்துக்கு வரும்படி அழைப்பு விடுத்தார். 




அதன்படி, தமிழ் கற்கும் தமிழரல்லாத மாணவர்களுக்கு தமிழ் கலாசாரம், அதன் பாரம்பரியம், உணவு வகைகள் மற்றும் கலைப்பொருட்கள் பற்றிய நேரடி அனுபவத்தைப் பெறவும் இந்தியாவின் அற்புத கலாசாரம், ஆன்மிகம்,  பொருளாதார பாரம்பரியத்தை உருவாக்குவதில் தமிழ் வகிக்கும் தனித்துவ பங்கைப் புரிந்து கொள்வதற்காகவும் இந்த வருகை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 


மாணவர்கள், தங்களுடைய பல்கலைக்கழக ஆசிரியர்கள், உதவிப் பேராசிரியர்கள், தமிழ் இந்திய மொழிகள் துறை, பனாரஸ் இந்து பல்கலைக்கழகம், டாக்டர். ஜெகதீசன் மற்றும் டாக்டர். விக்னேஷ் அனந்த் ஆகியோருடன் சேர்ந்து 9 நாட்களுக்கு 'தமிழ்நாடு தர்ஷன்' பயணத்தை கடந்த ஏப்ரல் 4ஆம் தொடங்கினர். 


இதையடுத்து, இன்று நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில், ஆளுநர் தமிழ்நாட்டை ஆன்மிக மற்றும் கலாசார தலைநகராகக் குறிப்பிட்டார். பாரதத்தின் ஆன்மிகம், கலாசாரம் மற்றும் நாகரிக பரிணாம வளர்ச்சியின் ஒருமைப்பாட்டின் வரலாற்றுக் குறிப்புகளை அவர் விவரித்தார். 


மக்களை அந்நியர்களாக்கியது காலனித்துவ சக்தி:


"மன்னர்கள் மற்றும் ராஜ்ஜியங்களைப் பற்றி கவலைப்படாமல், நம் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் மக்கள் பரந்து விரிந்த இந்த நிலப்பரப்பில் நகர்ந்தனர், மக்களும் சமூகமும் ஒன்றுபட்டிருந்தனர். காலனித்துவ சக்தி இந்த தேசத்தை துண்டாடுவதற்கு திட்டமிட்ட முயற்சிகளை மேற்கொண்டது, மக்களைத் துண்டித்து, அவர்களை அந்நியர்களாக்கியது" என ஆளுநர் தெரிவித்தார்.


தமிழ் மொழி மற்றும் இலக்கியத்தின் செழுமையை மேற்கோள்காட்டிப் பேசிய ஆளுநர், 1960இல் அறியாமையால், இந்தி திணிக்கப்பட்டது என்று குறிப்பிட்டார். "தமிழ் பழமையான மொழி. சமஸ்கிருத மொழி பழங்காலத்தில் தமிழுக்கு நெருக்கமாக இருந்தது. திருக்குறள் போன்ற இதிகாசங்கள் மிக ஆழமான அறிவொளியைத் தரக்கூடியவை என்பதால் அவற்றை எப்போதும் நாம் பேண வேண்டும்" என ஆளுநர் குறிப்பிட்டார்.




தமிழ் மொழி மற்றும் தமிழ் இலக்கியத்தின் ஞானம் நாடு முழுவதும் பரவ வேண்டியதன் அவசியத்தை ஆளுநர் வலியுறுத்தினார். தமிழ் பேசாத பகுதிகளில் இருந்தும் எண்ணிலடங்கா தமிழ் அறிஞர்களை நாம் கொண்டிருக்க வேண்டும். தமிழ் அல்லாத மாணவர்களைத் தமிழ் கற்கவும், தமிழ் இலக்கியத்தின் பழமையான ஞானத்தில் மூழ்கித் திளைக்கவும் ஆளுநர் ஊக்குவித்தார். 


தமிழ் கற்பதை வலியுறுத்திய ஆளுநர், தமிழ் மொழியின் தனித்தன்மைகள் மற்றும் நுணுக்கங்களை அதன் இயல்பான மற்றும் சொந்த வடிவங்களில் பயன்படுத்துமாறு அறிவுறுத்தினார். தமிழில் உயர்கல்வி படிக்க விரும்பும் தமிழ் அல்லாத மாணவர்களுக்கு முழு கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார். ராஜ்பவன் "தமிழ்நாடு தர்ஷன்" நிகழ்வை தவறாமல் நடத்த ஏற்பாடு செய்யும் என்றும் ஆளுநர் உறுதியளித்தார்.




நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைத்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஆளுநர் திருக்குறள் பிரதிகளை  வழங்கினார்.