தமிழர்களுக்கு வேலை மறுக்கும் என்.எல்.சி வெளியேற வலியுறுத்தி நாளை (செப்.04) போராட்டம் மேற்கொள்ள உள்ளதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:


“கடலூர் மாவட்டத்தில் உள்ளூர் மக்களின் நிலங்களில் நிலக்கரி சுரங்கம் அமைத்து கோடிக்கணக்கில் லாபம் ஈட்டும் என்.எல்.சி நிறுவனம், உள்ளூர் மக்களின் நலன்களையும், சுற்றுசூழலையும் மதிக்காமல் செயல்பட்டு வருகிறது. மண்ணின் பிரச்சினைகளையும் மக்களின் சிக்கல்களையும் தீர்க்க வேண்டும் என்று பலமுறை வலியுறுத்தினாலும் அதை செவிமடுக்க என்.எல்.சி மறுப்பது கண்டிக்கத்தக்கதாகும்.


'உள்ளூர் மக்கள் இழப்பீடு, வேலை வழங்கவில்லை’


நெய்வேலியில் பழுப்பு நிலக்கரி நிறுவனம் அமைப்பதற்காக அப்பகுதியில் உள்ள 23 கிராமங்களில் இருந்து 36,000 ஏக்கருக்கும் கூடுதலான நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. அந்த நிலங்களில் இருந்து எடுக்கப்படும் நிலக்கரியை ஆதாரமாகக் கொண்டு தான் ஆண்டுக்கு 10,662 கோடி ரூபாய் வருவாய் ஈட்டும் நிறுவனமாக  என்.எல்.சி வளர்ச்சியடைந்திருக்கிறது. ஆனால், இதற்கெல்லாம் மூலதனமான நிலங்களை வழங்கிய உள்ளூர் மக்களுக்கு போதிய இழப்பீடோ, வேலை வாய்ப்போ வழங்கப்படவில்லை.


என்.எல்.சி. நிறுவனம் லாபம் ஈட்டுவதற்கான விலையை கடலூர் மாவட்டம் தான் கொடுத்து வருகிறது. நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் தொடங்கப்படுவதற்கு முன் கடலூர் மாவட்டத்தில் 8 அடியில் நிலத்தடி நீர் கிடைத்தது. ஆனால், இப்போது நிலத்தடி நீர் மட்டம் ஆயிரம் அடிக்கும் கீழ் சென்றுவிட்டது. நிலத்தடி நீரை உறிஞ்சி கடலுக்கு அனுப்புவது, மழைக் காலங்களில் வெள்ளநீரை வெளியில் தள்ளி பயிர்களை மூழ்கடிப்பது போன்ற செயல்களைத்தான் என்.எல்.சி. நிறுவனம் செய்து கொண்டிருக்கிறது.


'ஒட்டுமொத்த மாவட்டமும் பாதிப்பு’


நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விட்டதால் கடலூர் மாவட்டம் முழுவதும் கடல் நீர் உட்புகத் தொடங்கி விட்டது. இதனால் பாசனத்திற்கும் குடிநீர் தேவைக்கும் ஏற்பட்டிருக்கும் பாதிப்புகள் பட்டியலிட முடியாத அளவுக்கு மிக நீளமானவை.


கடலூர் மாவட்டத்தில் என்.எல்.சி நிறுவனத்தால் பழுப்பு நிலக்கரி மற்றும் பிற தாதுக்கள் வெட்டி எடுக்கப்பட்டதால் ஏற்பட்ட மோசமான விளைவுகளை கருத்தில் கொண்டு பார்க்கும் போது, ஒட்டுமொத்த கடலூர் மாவட்டமும் பாதிக்கப்பட்ட பகுதியாக கடலூர் மாவட்ட தாது அறக்கட்டளையால் அடையாளம் கண்டு அறிவிக்கப்பட்டிருப்பதாக மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.


நிலக்கரி மூலம் கடந்த 5 ஆண்டுகளில் என்.எல்.சி சுமார் ரூ.45,000 கோடி வருவாய் ஈட்டியுள்ள நிலையில், அதனால் கடலூர் மாவட்டத்திற்கு ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்ய ரூ.447 கோடி, அதாவது 1% தொகையை மட்டுமே என்.எல்.சி. ஒதுக்கியுள்ளது. இது மிக மிகக் குறைவு. இவ்வளவு தீமைகளை செய்து வரும் என்.எல்.சி நிறுவனம், இன்னும் 12,250 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்தி, நிலக்கரியை  வெட்டி எடுக்கத் தொடங்கினால் கடலூர் மாவட்டம் பாலவனமாக மாறுவதைத் தடுக்கவே முடியாது.


பிற மாநிலத்தவர் பணியில் நியமனம்


என்.எல்.சிக்கு நிலம் கொடுத்தவர்களுக்கு வேலைவாய்ப்பு மறுக்கப்படுகிறது. நிலக்கரி சுரங்கம் அமைப்பதற்காக முதலில் நிலம் கொடுத்தவர்களுக்கு இன்று வரை வேலைவாய்ப்பு வழங்கப்படவில்லை. பொறியாளர்கள் முதல் அதிகாரிகள் வரை அனைத்து நிலை பதவிகளிலும் பிற மாநிலத்தவர் தான் நியமிக்கப்படுகின்றனர். ஒப்பந்த தொழிலாளர்களும் கூட பிற மாநிலங்களிலிருந்து தான் வரவழைக்கப்படுகின்றனர்.


அண்மையில் நியமிக்கப்பட்ட 299 பொறியாளர்களில் ஒருவர் கூட தமிழர்கள் இல்லை. வேலைவாய்ப்பு மறுக்கப்படுவதால் மண்ணின் மைந்தர்களும், நிலக்கரி சுரங்கம் அமைக்க நிலம் அளித்தவர்களும் தங்களின் வாழ்வாதாரங்களை இழந்து வறுமையில் வாடிக் கொண்டிருக்கின்றனர்.


 என்.எல்.சி நிறுவனத்திலிருந்து கிடைக்கும் லாபத்தைக் கொண்டு ஒதிஷா, உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், இராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் உள்ள மக்களுக்கு செய்யப்படும் நலத்திட்டங்களுடன் ஒப்பிடும் போது தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காகவும், நிலம் கொடுத்த கடலூர் மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்திற்காகவும் செலவிடப்படும் தொகை மிக மிகக் குறைவு ஆகும். கடலூர் மாவட்டத்தின் வளங்களை சுரண்டி, வட இந்தியர்களுக்கு வளம் சேர்க்கும் பணியைத் தான் என்.எல்.சி செய்கிறது.


சுற்றுச்சூழல் சீரழிவு


நிலம் கொடுத்த மண்ணின் மைந்தர்களுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் வேலைவாய்ப்பு வழங்க என்.எல்.சி. நிறுவனம் மறுக்கிறது; சுற்றுச்சூழலை சீரழித்து கடலூர் மாவட்டத்தை பாலவனமாக்குகிறது; இத்தகைய  நிறுவனம் தேவையில்லை என்பது தான் ஒட்டுமொத்த கடலூர் மாவட்ட மக்களின் நிலைப்பாடு ஆகும்.


எனவே, கடலூர் மாவட்டத்தையும், கடலூர் மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தையும் சீரழிக்கும் என்.எல்.சி நிறுவனம் வெளியேற வேண்டும் என்று வலியுறுத்தி நெய்வேலி ஆர்ச் கேட் அருகில் நாளை (04.09.2022) ஞாயிற்றுக்கிழமை காலை 11.00 மணிக்கு பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மாபெரும் மக்கள் திரள் போராட்டம் நடத்தப்படவுள்ளது.


இந்தப் போராட்டத்ததுக்கு பாட்டாளி மக்கள் கட்சித் தலைவரான நான் தலைமையேற்றவுள்ளேன். இப்போராட்டத்தில் பா.ம.க. மற்றும் அதன் துணை அமைப்புகளின் அனைத்துப் பிரிவுகளைச் சேர்ந்தவர்களும் பங்கேற்பார்கள். என்.எல்.சிக்கு நிலம் கொடுத்து ஏமாந்த மக்களும், சுற்றுச்சூழல் மற்றும் மனித உரிமை ஆர்வலர்களும் இதில் பெருமளவில் பங்கேற்க வேண்டுகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.