சென்னை உயர்நீதிமன்றம் அதிமுகவின் பொதுக்குழு செல்லும் என தீர்ப்பு வழங்கியதை தொடர்ந்து மதுரையில் முன்னாள் அமைச்சர்ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், “அ.தி.மு.க., என்ற மாபெரும் இயக்கத்தை எம்.ஜி.ஆர்., தொடங்கி தொடர்ந்து வெற்றி சிம்மாசனத்தில் அமர்த்தினார். தொடர்ந்து அ.தி.மு.க.,வை ஜெயலலிதா மூன்றாவது மக்கள் இயக்கமாக மாற்றினார். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எதிரிகளே இல்லாத நிலையை ஜெயலலிதா உருவாக்கினார். ஜெயலலிதாவுக்கு பிறகு அ.தி.மு.க., எனும் மகத்தான மக்கள் இயக்கத்தை எடப்பாடி பழனிசாமி காப்பாற்றி, ஜெயலலிதா, எம்.ஜி.ஆர்., கனவுகளை நிறைவேற்றி வழிநடத்தினார். ஒன்றரை கோடி தொண்டர்களை ஒருங்கிணைத்து ஜெயலலிதாவின் கனவை நனவாக்கினார். தன்னை அர்ப்பணித்து நெருப்பாற்றில் நீந்தி ஆட்சியை நடத்தினார். பல்வேறு சாதனைகளை செய்து மக்கள் நெஞ்சங்களில் நிறைந்த தலைவராக எடப்பாடி திகழ்கிறார். 



தாய்தமிழ் நாட்டு மக்கள் பாதுகாவலரான எடப்பாடிக்கு நீதியரசர்கள் தந்த மகத்தான தீர்ப்பு. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆன்மா எடப்பாடியிடம் உள்ளது என்பதை காட்டும் வகையில் நீதிபதிகள் கொடுத்தது தான் இந்த தீர்ப்பு. இந்த தீர்ப்பு உள்ளங்கை நெல்லிக்கனி போல தெரிகிறது. கிளைக்கழகம் தொடங்கி தலைமை கழகம் வரை எடப்பாடிக்கு ஆதரவு உள்ளது. அ.தி.மு.கவின் பெருமைகளை கட்டிக்காக்க தொண்டர்கள் தயாராக உள்ளார்கள். எடப்பாடியின் நல்ல நோக்கத்திற்காக கிடைத்த தீர்ப்பு. இந்த தீர்ப்பு எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆன்மா எடப்பாடியிடம் உள்ளது என்பதை காட்டுகிறது. மக்களுக்காக, தொண்டர்களுக்காக உழைக்கிற எடப்பாடியாருக்கு கிடைத்த வெற்றி.



அவரின் மக்கள் பணிக்கு கிடைத்த வெற்றி. வருகிற எந்த தேர்தலாக இருந்தாலும் அ.தி.மு.க  வெற்றியடையும் என மக்கள் தீர்ப்பாக இந்த தீர்ப்பு அமைந்துள்ளது. நியாயம், சத்தியம், தர்மம், உண்மை தொண்டர்கள் பக்கம் நின்று கிடைத்துள்ள மகத்தான தீர்ப்பு.  ஒரு இயக்கம் ஒரு தலைவருக்கு தன்னிச்சையாக தருகிற ஆதரவு போல எடப்பாடிக்கு தான் உண்டு. இது இறுதி தீர்ப்பா என்கிற கேள்விக்கு, கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவை இல்லை. இந்த தீர்ப்பு மூலம் வெட்ட வெளிச்சமாக தெரிகிறது. அறிந்தும் அறியாதது போல, தெரிந்தும் தெரியதது போல உள்ளவர்களை ஒன்றும் செய்ய முடியது. அ.தி.மு.க., எடப்பாடி பழனிசாமி தலைமையில் மக்கள் பணியாற்ற தயாராக உள்ளது” என்றார்.