தமிழகம் முழுவதும் நாளையுடன் தேர்தல் பரப்புரை நிறைவு பெற உள்ளது. இதையடுத்து, அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள பா.ஜ.க. 20 இடங்களில் போட்டியிடுகிறது.
இந்த நிலையில், பா.ஜ.க. வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று இரவு சென்னை வந்தார். இன்று காலை 10.45 மணியளவில் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடும் நடிகை குஷ்புவிற்கு ஆதரவாக. திறந்த வாகனத்தில் பாண்டி பஜார் நோக்கி பேரணியாக சென்று வாக்கு சேகரித்தார்.
பேரணியில் பங்கேற்ற அமித்ஷாவிற்கு மலர்தூவி பா.ஜ.க.வினர் வரவேற்பு அளித்தனர். மேலும், அமித்ஷாவிற்கு கூட்டணி கட்சித் தலைவர்களும் வரவேற்பு அளித்தனர். குஷ்புவிற்கு ஆதரவான பிரசாரத்தை நிறைவு செய்த பிறகு, விமானம் மூலம் தூத்துக்குடி செல்கிறார்.
பின்னர், அமித்ஷா அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் திருநெல்வேலி மற்றும் ராமநாதபுரத்தில் நடைபெறும் தேர்தல் பரப்புரை கூட்டங்களில் பங்கேற்க உள்ளார். அமித்ஷா தேர்தல் பரப்புரையில் ஈடுபடுவதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.