மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா,ஏபிபி செய்திக்கு பிரத்யேக நேர்காணல் அளித்தார். அப்போது, மக்களவை தேர்தல் குறித்தும், பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் உத்திகள் குறித்தும் மற்றும் எதிர்க்கட்சிகளின் விமர்சனங்கள் குறித்தான கேள்விகளுக்கும் மத்திய அமைச்சர் அமித்ஷா அளித்த பதில் குறித்து பார்ப்போம்.
கேள்வி: பாஜக பெரும்பான்மையைப் பெற்றால் அரசியலமைப்பில் மாற்றங்களைச் செய்யும் என கூறப்படுகிறது?
பதில்:
பத்து ஆண்டுகளாக எங்களுக்கு பெரும்பான்மை உள்ளது. அந்த முழுமையான பெரும்பான்மையை வைத்து என்ன தவறாகப் பயன்படுத்தினோம்?. சட்டப்பிரிவு 370ஐ ரத்து செய்யவும், முத்தலாக்கை ரத்து செய்யவும், சி.ஏ.ஏ சட்ட திருத்தம்., ராமர் கோவில் கட்டவும் மட்டுமே செய்தோம். ஏழைகள், தலித்துகள் மற்றும் பழங்குடியினரை மேம்படுத்தியுளோம். ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை ராகுல்ஜி கூறத் தொடங்குகிறார். காங்கிரஸ் கட்சி தொடர்ந்து பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி வருகிறது.
அரவிந்த் ஜெக்ரிவால் கைது குறித்தான கேள்வி:
பதில்
கைது செய்யப்பட்ட பிறகும், ஒருவர் ராஜினாமா செய்யாதது வரலாற்றில் இதுவே முதல் முறை."எந்தவொரு வழக்கிலும் ஒருவர் கைது செய்யப்பட்டால், அவர் தார்மீக அடிப்படையில் ராஜினாமா செய்யவில்லை என்பது வரலாற்றில் நடந்ததில்லை. அரசியலமைப்புச் சட்டத்தில், இதற்கென்ற அம்சம் இல்லை. ஏனென்றால் கைது செய்யப்படுபவர், ராஜினாமா செய்யமாட்டார் என்று அரசியலமைப்பை உருவாக்கியவர்கள் கற்பனைகூட செய்திருக்க மாட்டார்கள். அதனால், இதற்கென்ற சரத்துக்கள் இல்லை.
"ஆம் ஆத்மி கட்சியின் குணாதிசயம் என்னவென்றால், அரசியலுக்கு வரமாட்டோம் என்றார்கள். ஊழலுக்கு எதிராக போராடுகிறோம் என்றார்கள். ஆனால், தற்போது அவர்களே ஊழல் வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாஜக அரசியல் கட்சிகளை அழிக்கிறது என்ற விமர்சனம் எழுகிறதே?
பதில்
நாட்டில் எதிர்க்கட்சிகளை முடிவுக்குக் கொண்டுவர அவசரநிலையை விட பெரிய முயற்சி எதுவும் இல்லை. யாரும் அப்படி எல்லாம் செய்யவில்லை. ஆனால் ஊழல் செய்து கொண்டே இருந்தால், யாரும் உங்களை தொடக்கூடாது என்று நினைத்தால் அது பலிக்காது என தெரிவித்தார்.
கேள்வி: பாஜகவின் "400 பார்" முழக்கம் மற்றும் வாக்குப்பதிவு குறைந்திருப்பது குறித்து கருத்து?
பதில்:
இதுவரை நடைபெற்றுள்ள இரண்டு கட்ட தேர்தலில், பாஜகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் 100 இடங்களை தாண்டிவிட்டன. பா.ஜ.க.வும் அதன் ஆதரவாளர்களும் தங்கள் வாக்குகளை முழுவீச்சில் செலுத்தி வருகின்றனர். தேசம் தொடர்பான குறிப்பிடத்தக்க பிரச்னைகள் உள்ளன, மேலும் 80 கோடி மக்களின் வாழ்க்கையில் மாற்றங்களை கொண்டு வந்துள்ளோம்.
இலவச எரிவாயு இணைப்புகள், வீடுகள் திட்டம் மற்றும் தடுப்பூசிகள் ஆகியவற்றின் விநியோகத்தை உயர்த்தியது அரசின் சாதனைகள். மோடி அரசாங்கத்தின் வருங்கால மூன்றாவது ஆட்சியின் கீழ் இந்தியா உலகளவில் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறும். பயங்கரவாதம் மற்றும் நக்சலிசத்தை கட்டுப்படுத்துவதற்கு, நாட்டின் பாதுகாப்பினை உறுதி செய்வதற்கும், பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும், பாஜக அரசாங்கம் உறுதியுடன் உள்ளது எனவும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார்.