காங்கிரஸ் கட்சியை சேர்ந்த வேட்பாளரே மனுவை வாபஸ் பெற்று பாஜகவில் இணைகிறார் என்றால், எந்தளவு அச்சுறுத்தல் இருக்கிறது காங்கிரஸ் கட்சி விமர்சனம் செய்துள்ளது.
மத்திய பிரதேசம்:
மத்திய பிரதேச மாநிலத்தில் மொத்தம் 29 மக்களவை தொகுதிகள் உள்ளன. அங்கு 3 கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. ஏற்கனவே 2 கட்ட தேர்தல் நடைபெற்றது. மூன்றாம் மற்றும் நான்காம் கட்ட தேர்தலானது வரும் மே மாதம் 7-ஆம் தேதி மற்றும் மே 13-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இந்நிலையில் நான்காம் கட்ட தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கலை திரும்பப்பெற, நேற்றைய தினம்தான் கடைசி நாள். நான்காம் கட்ட தேர்தலுக்குள் மத்திய பிரதேசத்தில் இந்தூர் மக்களவைத் தொகுதியும் உள்ளது.
வேட்புமனு தாக்கல் வாபஸ்:
இந்தூரில் சுமார் 25 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர். இங்கு காங்கிரஸ் கட்சி சார்பாக போட்டியிட அக்ஷய் கன்டி பாம் மனுதாக்கல் செய்திருந்தார். இந்நிலையில், நேற்று திடீரென்று அக்ஷய் கன்டி பாம் மனுவை வாபஸ் பெற்றார். அதையடுத்து, பாஜக அலுவலகத்துக்கு கன்டி பாம், பாஜகவில் இணைந்தார் என்று செய்தி வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
இது இந்தூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது காங்கிரஸ் கட்சியினரிடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த சுப்ரிய ஸ்ரீநேட், காங்கிரஸ் கட்சி சார்பாக போட்டியிடுவதாக மனுதாக்கல் செய்த வேட்பாளரே மனுவை வாபஸ் பெற்றிருக்கிறார். இதைத்தான் ஜனநாயகம் ஆபத்தில் இருப்பதாக கூறுகிறோம்
பாஜக கட்சியினர், எதிர்க்கட்சியினரை மிரட்டி அழுத்தம் கொடுத்து வருகின்றனர். இதுபோன்று, எதிர்க்கட்சி வேட்பாளருக்கு அழுத்தம் கொடுத்தால், எப்படி சுதந்திரமான தேர்தல் நடைபெறும்.
பாதிப்புக்குள்ளாகும் ஜனநாயகம்:
இதுபோன்று தொடர்ந்து வேட்பாளர்கள் மிரட்டப்படுவது, தேர்தல் விதிமுறைகளை மீறி செயல்படும் பாஜகவினரை தேர்தல் ஆணையம் கண்டு கொள்ளாமல் இருப்பது போன்ற செயல்பாடுகள் தொடர்ந்தால் எப்படி நேர்மையான தேர்தல் நடக்கும் என காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த செய்தி தொடர்பாளர் சுப்ரிய ஸ்ரீநேட் தெரிவித்தார்.
சில தினங்களுக்கு முன்பு, குஜராத் மாநிலம் சூரத் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வேட்பாளரின் மனு நிராகரிக்கப்பட்டது. அதையடுத்து, இதர கட்சி வேட்பாளர்கள் மனுவை வாபஸ் பெற்ற நிலையில் பாஜக வேட்பாளர் போட்டியின்றி வெற்றி பெற்றார். இதுபோன்ற நிகழ்வுகள் அதிகரிப்பது ஜனநாயகத்தை பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என் அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.