மக்களவைக்கான சபாநாயகர் தேர்தல் வரும் ஜூன் 26 ஆம் தேதி நடைபெறவுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் சபாநாயகர் பதவியை பாஜக தக்கவைத்து கொள்ளப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. 


மக்களவைத் தேர்தல்:


இந்திய நாடாளுமன்றத்தின் 18வது மக்களவைக்கான  தேர்தல் முடிவில் எந்தவொரு கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காததால், இந்தியாவில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கூட்டணி ஆட்சி அமையும் சூழல் ஏற்பட்டுள்ளது. அதன்படி, தனிப்பெரும் கட்சியான பாஜக, சந்திரபாபு நாயுடு மற்றும் நிதிஷ்குமாரின் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளது. இந்த கூட்டணி ஆட்சியின் பிரதமராக, நரேந்திர மோடி பதவியேற்றார். ஆனால், கடந்த 10 ஆண்டுகளாக இருந்த பாஜக ஆட்சிக்கும், இனி அமையப்போகும் பாஜக கூட்டணி ஆட்சிக்கும் பல வித்தியாசங்கள் இருக்கும் என கூறப்படுகிறது. குறிப்பாக மோடியால் இனி தன்னிச்சையாக எந்தவொரு முக்கிய முடிவுகளையும் எடுக்க முடியாது எனவும் அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.




சபாநாயகர் யார்?:


இந்நிலையில் மக்களவையின் தலைவராக பார்க்கப்படும் சபாநாயகர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த பதவிக்கு கூட்டணி கட்சியான, பாஜக தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைக்க பெரிதும் உதவியாக இருந்தவர்களான தெலுங்கு தேச கட்சியின் தலைவரான சந்திரபாபு நாயுடுவும் , ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவரான நிதிஷ் குமாரும் உள்ளனர். இவர்கள் இருவரும் சபாநாயகர் பதவியை கேட்டு வருவதாக தகவல் வெளியாகி வரும் நிலையில், பாஜகவுக்கு ,பெரிதும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. 


ஏனென்றால், சபாநாயகர்தான் மக்களவையின் தலைவர், அவர்தான் பேரவையை வழி நடத்திச் செல்பவர், எம்.பி தகுதி நீக்கம் உள்ளிட்ட சில விவகாரங்களில், இவர் முடிவு எடுக்க அதிகாரம் உண்டு. மேலும் , ஒரு மசோதா பண மசோதாவா இல்லையா என்பதை முடிவு எடுக்கும் அதிகாரத்தில் நீதிமன்றமும் கூட தலையிட முடியாது.


ஆகையால், இந்த அதிகாரம் கொண்ட பதவியை கூட்டணி கட்சிகளுக்கு விட்டுக் கொடுக்க பாஜக விரும்பவில்லை என தகவல் தெரிவிக்கின்றன. ஆனால், பாஜக கூட்டணி ஆட்சி அமைக்க பெரிதும் காரணமாக இருந்த சந்திரபாபு நாயுடுவும், நிதிஷ்குமாரும், சபாநாயகர் பதவியை கேட்பதால் மிகவும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. 




இந்நிலையில், பாஜக விட்டு கொடுக்க விரும்பவில்லை என்ற தகவல் வெளிவந்திருக்கும் நிலையில், கூட்டணி கட்சியினரை சமாதனப்படுத்த, வேறு ஏதேனும் பதவியை கொடுக்க திட்டம் வைத்துள்ளதா என்று இனிதான் தெரியவரும். 


Also Read: "பிரதமர் மோடியின் இரு தூண்கள்" உளவு மன்னன் அஜித் தோவல் மீண்டும் நியமனம்! பி.கே.மிஸ்ராவுக்கும் பதவி நீட்டிப்பு!