"பலகை கூட தேய்ந்து விட்டது" போராடும் மக்களுக்கு தீர்வு கிடைக்குமா ? வேதனையில் ஏகனாபுரம் மக்கள்

Parandur airport protests :"பலகை கூட தேய்ந்து விட்டது" போராடும் மக்களுக்கு தீர்வு கிடைக்குமா ? வேதனையில் ஏகனாபுரம் மக்கள்

Continues below advertisement

பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஏகனாம்புரம் கிராம மக்கள் தொடர்ந்து 686- வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்

Continues below advertisement

பரந்தூர் பசுமை விமான நிலையம்

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் சுற்றுவட்டார 13 கிராம பகுதிகளை உள்ளடக்கிய 5,700 ஏக்கர் பரப்பளவில் பரந்தூர் பசுமை வெளி விமான நிலையம் அமைக்கப்படும் என மத்திய, மாநில அரசுகள் அறிவிப்பு வெளியிட்டு பணிகளை மேற்கொண்டு வருகிறது. பரந்தூர் பசுமை வெளி விமான நிலையம் ( parandur greenfield airport ) அமைப்பதால் நெல்வாய், தண்டலம், மடப்புரம், நாகப்பட்டு, ஏகனாபுரம், மேலேறி, ஆகிய கிராமங்களில் விவசாய நிலங்கள் மட்டுமின்றி குடியிருப்புகளும் அகற்றப்பட உள்ளதால் தங்களின் இருப்பிடமும், வாழ்வாதாரமான விளைநிலங்களும் பறிபோய் விடும் எனக் கூறி விமான நிலையம் அமைக்க, எதிர்ப்பு தெரிவித்து, நாள்தோறும் இரவு நேரங்களில் ஊர் மைதானத்தில் கிராம மக்கள் ஒன்று கூடி அமர்ந்து தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொடரும் போராட்டம்  ( parandur airport protest )

விமான நிலையம் அமைய உள்ள 5700 ஏக்கர் பரப்பளவு நிலத்தில், 3700 ஏக்கர் நிலம் விவசாயிகள், கிராம மக்களிடம் இருந்து நில எடுப்பு செய்யப்பட உள்ளது. மீதமுள்ள நிலங்கள் அரசு நிலமாக உள்ளது. கிராம மக்களின் போராட்டம் 686வது நாளை எட்டியுள்ளது. கிராம மக்களின்  போராட்டம் நடக்கும் நிலையில் கடந்த அக்டோபர் மாதம், விமான நிலைய திட்டத்துக்கான நிர்வாக அனுமதி வழங்கி அரசாணை வெளியிட்டது. இந்நிலையில் இந்த திட்டத்தை செயல்படுத்த, 3 மாவட்ட வருவாய் அலுவலர்கள் தலைமையில், 3  துணை ஆட்சியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர், 29 தாசில்தார்கள், 6 துணை தாசில்தார்கள உட்பட 324 பேர் பணி அமர்த்தப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

 


தொடரும் நில எடுப்பு அறிவிப்புகள்

இதனிடையே முதற்கட்டமாக பொடாவூர், மகாதேவி மங்கலம், சிறுவள்ளூர், பரந்தூர் கிராமத்தில் விமான நிலையத்துக்கான நிலங்களை கையகப்படுத்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. சம்பந்தப்பட்ட நில உரிமையாளர்கள். ஆட்சேபனை இருப்பவர்கள் கருத்து தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்தநிலையில் தேர்தல் முடிவு பெற்று தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில், பரந்தூர் விமான நிலையம்  அமைப்பதற்கு மீண்டும் நிலம் எடுப்பது தொடர்பான அறிவிப்பு வெளியாகி உள்ளது.  தொழில் முதலீடு ஊட்டுவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில்,  புதிய பசுமை வேலி விமான நிலையம் திட்டம்  அமைப்பதற்கான  நில எடுப்பு தொடர்பான அறிவிப்பு வெளியாகி உள்ளது. எடையார்பாக்கம் பகுதிக்கு உட்பட்ட சுமார்  59.75 எக்டர்  நிலம் கையகப்படுத்தப்பட உள்ளதாக  அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேய்ந்த கரும்பலகை

இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கிராம மக்கள் தெரிவித்ததாவது : கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளை எங்கள் போராட்டம் நெருங்கி வருகிறது. தினமும் இரவு நேர போராட்டம், இதுபோக அவப்பொழுது பேரணி, தீப்பந்த போராட்டம்,தேர்தல் புறக்கணிப்பு போராட்டம் உள்ளிட்ட பல்வேறு வகையான போராட்டங்களை கையில் எடுத்திருக்கிறோம். அரசு எங்களுடைய போராட்டத்திற்கு செவி சாய்க்கவில்லை. நாங்கள் ஒரு புறம் போராடிக் கொண்டிருக்கிறோம், மறுபுறம் அரசு விமான நிலையம் அமைப்பதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.போராட்டத்தை குறிக்கும் கரும்பலகை கூட தேய்ந்து விட்டது, ஆனால் அரசு மனமிறங்கி வரவில்லை என தெரிவிக்கின்றனர்

Continues below advertisement