காங்கிரஸ் கட்சி சார்பாக தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்கும் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
”காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளுக்கும், தலைமைக்கும் விரோதமாக பொதுவெளியில் ஊடகங்கள் வாயிலாக கருத்துக்களை தெரிவித்து வருவதால் திரு. அமெரிக்கை வி.நாராயணன் அவர்கள் காங்கிரஸ் கட்சி சார்பாக தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்கும் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
எனவே, காங்கிரஸ் கட்சியின் சார்பாக தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்க இனி அவரை அழைக்க வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் இது தொடர்பாக கே.எஸ்.அழகிரி விளக்கம் அளிக்க வேண்டும் என்று அமெரிக்கை நாரயணன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “ விளக்கம் கேட்காமல், 30 வருடமாக கட்சிக்கு சொந்தப் பணத்திலும் உழைப்பிலும் புகழ் சேர்த்த நான், இந்திய காங்கிரஸ் கொள்கைக்கு எதிராக பேசியது என்ன என்பது குறித்து தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரிவிளக்க வேண்டும்.கடந்த 3 நாட்கள் நான் பேசியது அனைத்தும் காங்கிரசைகாப்பாற்றுவோம் என்றே!" என்று குறிப்பிட்டுள்ளார்.
உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான தேர்தலில், பாஜக பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றி மாபெரும் வெற்றியை பெற்று தனது ஆட்சியை தக்கவைத்திருக்கிறது. பஞ்சாப்பை பொறுத்தவரை ஆம் ஆத்மி கட்சி 90 இடங்களுக்கு மேல் பெற்று ஆட்சியை கைப்பற்றியிருக்கிறதுகாங்கிரஸ் படு தோல்வியை சந்தித்த நிலையில், கட்சியினர் இடையே இந்த தோல்வி பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில் தங்களது ட்விட்டர் பக்கங்களில் ராகுலும், பிரியங்கா காந்தியும் மக்களின் தீர்ப்பை தலைவணங்கி ஏற்றுக்கொள்வதாக தெரிவித்திருக்கின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்