காங்கிரஸ் அதன் நம்பகத்தன்மையை இழந்து வருவதால் அந்தக் கட்சியை நம்பி இருக்க முடியாது என்ற மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கருத்துக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ஆதிர் ரஞ்சன் செளத்ரி காட்டமான பதிலை சொல்லியிருக்கிறார்.
இது குறித்து அவர் கூறும் போது, “ பைத்தியத்துக்கு பதில் சொல்வது சரியானது அல்ல. இந்தியா முழுவதும் காங்கிரஸ் 700 எம்.எல்.ஏக்களை கொண்டிருக்கிறது. எதிர்க்கட்சிகளின் மொத்த வாக்குகளில் 20 சதவீதத்தை காங்கிரஸ் கைப்பற்றியிருக்கிறது. பாஜகவை மகிழ்ச்சியடைய செய்வதற்கும், அவர்களின் ஏஜெண்ட் போலவும் மம்தா செயல்பட்டு கொண்டிருக்கிறார். அவர் பேசும் விஷயங்கள் நடைமுறைக்கு தொடர்புடையதாக இருக்க இப்படி பேசிக்கொண்டிருக்கிறார்.
உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான தேர்தலில், பாஜக பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றி மாபெரும் வெற்றியை பெற்று தனது ஆட்சியை தக்கவைத்திருக்கிறது. பஞ்சாப்பை பொறுத்தவரை ஆம் ஆத்மி கட்சி 90 இடங்களுக்கு மேல் பெற்று ஆட்சியை கைப்பற்றியிருக்கிறதுகாங்கிரஸ் படு தோல்வியை சந்தித்த நிலையில், கட்சியினர் இடையே இந்த தோல்வி பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில் தங்களது ட்விட்டர் பக்கங்களில் ராகுலும், பிரியங்கா காந்தியும் மக்களின் தீர்ப்பை தலைவணங்கி ஏற்றுக்கொள்வதாக தெரிவித்திருக்கின்றனர்.
இந்த நிலையில் இந்த தோல்வி குறித்து கருத்து தெரிவித்த மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, “ காங்கிரஸ் தொண்டர்கள் ஆக்ரோஷமாக வேண்டாம். நேர்மறையாக இருங்கள். இந்த வெற்றி பாஜகவிற்கு பெரிய இழப்பாக அமையும். இந்த முடிவுகள் 2024 ஆம் ஆண்டு தேர்தலில் எதிரொலிக்கும் என சொல்லப்படுகிறது. இது நடைமுறையில் சாத்தியமாகாத ஒன்று.
காங்கிரஸ் விரும்பினால் 2024 இல் லோக்சபா தேர்தலை இணைந்து சந்திக்கலாம். காங்கிரஸ் அதன் நம்பகத்தன்மையை இழந்து வருகிறது. பாஜகவை எதிர்த்து போராட நினைக்கும் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து செயலாற்ற வேண்டும். காங்கிரஸ் அதன் நம்பகத்தன்மையை இழந்து வருவதால் அந்தக் கட்சியை நம்பி இருக்க முடியாது” என சொல்லியிருந்தார்