நாடு முழுவதும் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு, தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6-ந் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வரும் வேட்பாளர்களும் கொரோனா பாதிப்பிற்கு ஆளாகி வருகின்றனர்.
தமிழகத்தில் இதுவரை காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ், மக்கள் நீதிமய்ய வேட்பாளர்கள் சந்தோஷ்பாபு மற்றும் பொன்ராஜ், தே.மு.தி.க. வேட்பாளர்கள் அழகாபுரம் மோகன்ராஜ் மற்றும் பார்த்தசாரதி, அ,ம.மு.க. வேட்பாளர் குரு, தி.மு.க. வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், அ.தி.மு.க. வேட்பாளர் ஹசனா ஆகியோர் ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சிலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சூழலில், சிலர் தங்களது வீடுகளிலே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர்.
இந்த நிலையில், அம்பத்தூர் தொகுதியில் தி.மு.க. சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ஜோசப் சாமுவேலுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தது. இதில், அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 9 வேட்பாளர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். வாக்குப்பதிவிற்கு இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில், வேட்பாளர்கள் பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதால் வாக்கு சேகரிப்பதில் கடும் சிரமம் ஏற்பட்டுள்ளது.