வருகின்ற 2024-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலோடு, சட்டமன்றத்திற்கும் தேர்தல் வரும். அப்போது அதிமுகவிற்கு விடியல் வரும் என விழுப்புரத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி.பழனிசாமி பேசியுள்ளார்


அதிமுக பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக விழுப்புரத்திற்கு வருகை புரிந்த முன்னாள் தமிழக முதலைமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு விழுப்புரம் நான்கு முனை சந்திப்பில் மாநிலங்களவை உறுப்பினர் சிவி சண்முகம் தலைமையிலான மூவாயிரத்திற்கும் மேற்பட்ட அதிமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். 


”எம்.ஜி ஆர் மறைவிற்கு பிறகு ஜெயலலிதா அவர்கள் தமிழகத்தின் வரலாற்றில் ஒரு எடுத்துக்காட்டாக விளங்கினார்கள். இருபெரும் தலைவர்கள் வகித்த அதிமுக பொதுச்செயலாளர் பொறுப்பை உங்கள் மூலம் எனக்கு வழங்கியுள்ளீர்கள். அதிமுகவை அழிக்க வேண்டும், முடக்க வேண்டும் என நமக்கு எதிரான திமுகவின் எத்தனையோ சூழ்ச்சிகளை முறியடித்து தொண்டர்களின் ஆதரவோடு திமுகவை வீழ்த்தும் மகத்தான பணியை எனக்கு வழங்கியுள்ளீர்கள். தொண்டர்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாக செயல்படுவேன்.


இது தொண்டர்களால் உருவாக்கப்பட்ட இயக்கம், தொண்டர்களில் ஒருவராக இருந்து தொண்டர்களின் எண்ணத்தை நிறைவேற்றுவேன். அதிமுகவை முடக்க வேண்டும் என்பதற்காக நம்முடன் இருந்து பிரிந்து திமுகவுடன் சேர்ந்து திமுகவின் பி டீமாக செயல்படுகிறார்கள். அவர்களையெல்லாம் நீதிமன்றத்தின் மூலமாக, சட்டத்தின் மூலமாக வென்று எம்ஜிஆர். ஜெயலலிதா கனவை நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து நிறைவேற்றுவோம். இன்றைக்கு முதல்வர் ஸ்டாலின் அவர்கள் திட்டமிட்டு அதிமுக தொண்டர்கள். நிர்வாகிகள் மீதும் பொய் வழக்கு போட்டு வருகிறார்கள். எத்தனை பொய் வழக்கு போட்டாலும் சட்டரீதியாக தகர்த்து எறிவோம். எம்ஜிஆர் உருவாக்கிய இந்த இயக்கத்தை ஜெயலலிதா அவர்கள் பல்வேறு சோதனையான காலகட்டங்களை தாங்கி எம்ஜிஆர் கனவை இறுதி மூச்சு வரை நடத்தி காட்டினார்கள்.


எம்.ஜி.ஆர், ஜெயலலிதா என தற்போதுவரை பல்வேறு சோதனைகளை  அதிமுக சந்தித்து வருகிறது. எத்தனை சோதனை வந்தாலும் தொண்டர்கள் மூலம் அதனை வெற்றி பெறுவோம். அதிமுக ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் தொடர்ந்து மக்கள் பணியை தொடர்ந்து செய்வோம். அதிமுகவை யார் சீண்டிப்பார்த்தாலும் அவர்கள் தான் அழிவார்கள். நாம்முடைய தலைவர்கள் இறைவனால் கொடுக்கப்பட்டவர்கள். எம்.ஜி.ஆர். தேர்தல் ஜெயலலிதாவுக்கு வாரிசுகள் இல்லை தொண்டர்களைத்தான் வாரிசாக பார்த்தார்கள். அதிமுகவை யாராலும் தொட்டுக்கூட பார்க்கமுடியாது.


வழக்கு மூலம் அதிமுகவை அழிக்கப்பார்த்தால் அது கானல் நீராகத்தான் போகும். அதிமுக மீண்டும் ஆட்சியில் அமரும். அது வெகு தொலைவில் இல்லை, வரக்கூடிய நாடாளுமன்ற தேர்தலோடு சட்டமன்றத்திற்கும் வரலாம். இதைதான் மத்தியில் உள்ள ஆட்சியாளர்கள் ஒரேநாடு ஒரே தேர்தல் என குறிப்பிட்டு வருகிறார்கள். வருகின்ற 2024-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலோடு சட்டமன்ற தேர்தல் வரும் நமக்கு விடியல் வரும். தொண்டர்கள் எறும்பைப்போல், தேனீக்களை போல் சுறுசுறுப்பாக பணியாற்ற வேண்டும். அதேபோல அதிமுக - பாஜக கூட்டணி குறித்து தேசிய தலைமைதான் முடிவுசெய்யும் என நினைவில் வைத்துக்கொள்ளவேண்டும்” என பேசினார்.