அதிமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளுமே குடும்பக் கட்சிகளாக மாறிவிட்டதாக, பாஜக தலைவர் ஜே.பி. நட்டா தெரிவித்துள்ளார்.


நட்டா 3 நாள் பயணம்:


கர்நாடகாவில் சட்டமன்ற பொதுத்தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சிகள் அனைத்தும் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன. குறிப்பாக, தென்னிந்தியாவில் பாஜக ஆட்சி செய்யும் ஒரே மாநிலம் கர்நாடகா என்பதால், அக்கட்சியினர் கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றனர். கட்சியின் தேசிய தலைவர்கள் பலரும் அங்கு முகாமிட தொடங்கியுள்ள நிலையில், கடந்த வாரம் பிரதமர் மோடியும் பெங்களூரு வந்து சென்றார். இந்நிலையில், 3 நாள் சுற்றுப்பயணமாக பாஜக தலைவர் நட்டா கர்நாடகா சென்றுள்ளார். அப்போது உடுப்பியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், எதிர்க்கட்சிகளை கடுமையாக விமர்சித்தார்.  


”மோடி தான் காரணம்”


அப்போது, “ கடந்த ஆண்டு ஜூன் மாதம் பிரதமர் மோடி தொடங்கி வைத்த 33 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள், இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதார மாநிலமாக மாற்றும். அமெரிக்க அதிபர் ஜோ பைடனை இன்னமும் மாஸ்க் அணிந்து தான் வெளியே வருகிறார். ஏனென்றால் அங்கு வெறும் 76 சதவிகிதம் பேருக்கு தான் முழுமையாக தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. ஆனால் இந்த பொதுக்கூட்டத்தில் யாருமே மாஸ்க் அணிந்திருக்கவில்லை.  ஒருவருக்கு ஒருவர் மிக நெருக்கமாக அமர்ந்திருக்கின்றனர். இதற்கு காரணம் பிரதமர் மோடி கொடுத்த 220 கோடி தடுப்பூசிகள் தான்.


”அதிமுக குடும்பக் கட்சி”


போரை நிறுத்தி தனது நாட்டு மக்களை அங்கிருந்து வெளியேற்றிய இதுபோன்ற பிரதமர் உலகில் யாராவது இருக்கிறார்களா? புதின் மற்றும் ஜெலென்ஸ்கியுடன் பிரதமர் மோடி பேசி போரை நிறுத்தி, 22,500 இந்திய மாணவர்களை பத்திரமாக தாயகம் அழைத்து வந்தார் என்று பெருமையுடன் கூறலாம். காங்கிரஸ், சமாஜ்வாதி, சிவசேனா, மம்தா பானர்ஜி, டிஆர்எஸ் மற்றும் அதிமுக உட்பட அனைத்துக்கட்சிகளுமே குடும்ப கட்சிகளாகிவிட்டன என” ஜே.பி. நட்டா பேசினார். 


சிக்மங்களூருவில் பரப்புரை:


தொடர்ந்து சிக்மங்களூருவில் பேசிய அவர், அரிக்கா கொட்டையின் குறைந்தபட்ச இறக்குமதி விலையை அரசு 3 மடங்கு உயர்த்தியுள்ளது. ஸ்திரமின்மையற்ற விலை மற்றும் தரமற்ற தயாரிப்பு உள்நாட்டு சந்தையில் நுழைவதைத் தடுக்க முயற்சித்தோம். பருப்பு உள்ளிட்ட சிறுதானியங்கலை பயிரிடுபவர்கள் சிரமப்படக்கூடாது என்பதற்காக,பாஜக அரசுதான் ஒவ்வொரு தீமையையும் கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுத்தது. எந்த சூழ்நிலையிலும் அரிகா கொட்டை விவசாயிகளை கவனித்துக் கொள்ள நாங்கள் இருக்கிறோம். பாஜகவின் இரட்டை எஞ்சின் அரசு. விவசாயிகள், பெண்கள், ஏழைகள், தலித், இளைஞர்கள் மற்றும் சமூகத்தின் அனைத்துப் பிரிவினரும் அதிகாரம் பெறுவதைப் பார்க்க முயற்சிக்கிறது. கிராமப்புற மற்றும் நகர்ப்புற இந்தியா அதிகாரம் பெற்று நீண்ட பாய்ச்சலைப் பெற அனைத்து திட்டங்களும் உள்ளன” எனவும் ஜே.பி. நட்டா பேசினர்.