ஹிஜாப் அணிந்த பெண் எதிர்காலத்தில் இந்தியாவின் பிரதமராக வர வேண்டும் என்று விரும்புவதாக அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் (AIMIM) தலைவர் அசாதுதீன் ஒவைசி தெரிவித்துள்ளார்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் இங்கிலாந்தின் பிரதமராகப் பதவியேற்றது குறித்து கருத்து கேட்டபோது ஒவைசி இவ்வாறு கூறினார்.
மேலும், AIMIM தலைவர் ஓவைசி, காவி கட்சி ஹலால் இறைச்சி மற்றும் முஸ்லிம்களின் பிற வாழ்க்கை முறைகளுக்கு எதிரானது என்றும் பாஜக முஸ்லிம்களின் அடையாளத்திற்கு எதிரானது என்றும் குற்றம் சாட்டினார்.
'சப்கா சாத், சப்கா விகாஸ், சப்கா விஸ்வாஸ்' என்ற தனது முழக்கத்தை பிரதமர் நரேந்திர மோடி வாய் மொழியாக மட்டுமே கூறுகிறார் என்று அசாதுதீன் ஓவைசி குற்றம் சாட்டினார். நாட்டின் பன்மைத்துவத்தை அழிப்பதே பாஜகவின் செயல்திட்டமாக இருப்பதால், அடிப்படை யதார்த்தம் முற்றிலும் வேறுபட்டது என்றார்.
முன்னதாக, கர்நாடக மாநிலம் உடுப்பியில் உள்ள அரசுப் பல்கலைக்கழகப் பெண்கள் கல்லூரியின் முஸ்லீம் மாணவிகள் வகுப்பறைக்குள் ஹிஜாப் அணிய அனுமதி கோரி தாக்கல் செய்த மனுக்களை கர்நாடக உயர் நீதிமன்றம் மார்ச் 15, 2022 அன்று தள்ளுபடி செய்தது. இஸ்லாமிய நம்பிக்கையில் ஹிஜாப் அணிவது அத்தியாவசியமான மத நடைமுறையின் ஒரு பகுதியாக இல்லை என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
நீதிபதிகள் ஹேமந்த் குப்தா மற்றும் சுதன்ஷு துலியா ஆகியோர் அடங்கிய இரண்டு நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு, மாநிலத்தின் கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க மறுத்த கர்நாடக உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்கள் மீது 2022 ஆம் ஆண்டு அக்டோபர் 13 ஆம் தேதி மாறுபட்ட தீர்ப்பை வழங்கியது. நீதிபதி குப்தா உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரான மேல்முறையீடுகளை தள்ளுபடி செய்தார், அதே நேரத்தில் நீதிபதி துலியா அவற்றை அனுமதித்தார்.
நீதிபதி குப்தா, பள்ளிகளில் சீருடைகளை அமல்படுத்த அரசாங்கத்திற்கு அதிகாரம் உள்ளது என்று குறிப்பிட்டார், அதே நேரத்தில் நீதிபதி துலியா ஹிஜாப்பை அணிவது அவரவர் விருப்பம் எனத் தெரிவித்தார்.