அதிமுகவில் குழப்பம் ஏற்படுத்த முயற்சிக்கிறார் என்று அதிமுக சார்பில் சசிகலாவிற்கு எதிராக மாவட்ட வாரியாக தீர்மானம் நிறைவேற்ற உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், சேலத்தில் நடைபெற்ற எடப்பாடி பழனிசாமி தலைமையிலான கூட்டத்திலும், விழுப்புரத்தில் நடைபெற்ற சி.வி.சண்முகம் தலைமையிலான கூட்டத்திலும் அவருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.


அதிமுகவில் அடிப்படை உறுப்பினராக இல்லாத, அதிமுக உறுப்பினர் ஆவதற்கு தகுதியே இல்லாத சசிகலா, அதிமுகவில் குழப்பத்தை ஏற்டுத்த முயற்சிக்கிறார். ஊழல் வழக்கில் சிறை தண்டனை பெற்ற சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர்களை வன்மையாக கண்டிக்கிறோம். அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் கொண்டு வந்துள்ள தீர்மானத்தை ஒரு மனதாக ஏற்று அதனை நிறைவேற்றுகிறோம் என்று அந்த தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.




சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்வியடைந்தபிறகு, அரசியலில் இருந்து விலகியிருக்கிறேன் என்று அறிவித்த சசிகலா மீண்டும் அதிமுகவை கைப்பற்றும் முயற்சியில் இறங்கியிருக்கிறார். ஒவ்வொரு நாளும் அவர் அதிமுக தொண்டர்களிடம் பேசும் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், சசிகலாவோடு பேசிய 15 பேரை அதிமுகவில் இருந்து நீக்கியும், சசிகலாவிற்கு எதிராகவும் ஒபிஎஸ் – ஈபிஎஸ் அறிக்கை விட்ட நிலையில், அடுத்த நாளே 10 அதிமுக தொண்டர்களுடன் பேசி ஆடியோ வெளியிட்டார் சசிகலா.


சசிகலாவிற்கு எதிராக நான் பேசவில்லை : கடம்பூர் ராஜூ


இதனை சமாளிக்கும் நோக்கில், சசிகலாவே தொடர்புகொண்டு பேசினாலும் எந்த அதிமுக தொண்டரும் தொலைபேசியில் அவருடன் பேசக்கூடாது என்பதை ஒவ்வொருவருக்கும் உணர்த்தும் விதமாக ஒவ்வொரு மாவட்ட செயலாளர்கள் தலைமையிலும் அவருக்கு எதிராக தீர்மான நிறைவேற்ற உத்தரவிடப்பட்டது. அதன் அடிப்படையில் இன்று சேலம், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.


இதேபோல், சசிகலாவுடன் தொலைபேசியில் உரையாடி கழகத்தின் வளர்ச்சிக்கும்,புகழுக்கும்,பழியும் தேடியவர்கள் அனைவரும் கழகத்தில் இருந்து நீக்க வேண்டும் என மதுரையில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் நடைபெற்ற கூட்டத்திலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


சசிகலாவிற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படும் என முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ  பேட்டி கொடுத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரை தொலைபேசியில் தொடர்புகொண்ட பேசிய சசிகலாவின் ஆதரவாளரிடம் நான் அப்படி சொல்லவே இல்லை, சசிகலாவிற்கு எதிராக நான் பேசவும் இல்லை என்று அவர் மறுப்பது போன்ற அந்த ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் நிலையில், எடப்பாடி பழனிசாமி, சிவி சண்முகம் உள்ளிட்டோர் தங்கள் மாவட்டங்களில் சசிகலாவிற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர்.


இதேபோன்று அனைத்து மாவட்டங்களில் உள்ள அதிமுக மாவட்ட செயலாளர்கள் தலைமையில் சசிகலாவிற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.  முன்னாள் அமைச்சர்கள்தான் பல மாவட்டங்களில் மாவட்ட செயலாளர்களாக இருக்கும் நிலையில், அனைவரும் சசிகலாவிற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்போகிறார்கள் அல்லது தலைமையின் உத்தரவுக்கு யாரேனும் பின் வாங்கப்போகின்றார்களா ? குறிப்பாக, தேனி மாவட்டத்தில் ஓபிஎஸ், சசிகலாவிற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுவாரா என்பதையும் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.