நாளை இந்தியா-நியூசிலாந்து உலக கோப்பை டெஸ்ட் கிரிக்கெட்டிற்கான இறுதி போட்டி துவங்குகிறது. யார் சதம் அடிப்பார்கள் என்கிற எதிர்பார்ப்பு கிரிக்கெட் ரசிகர்களுக்கு எகிறிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில், அரை சதம் அடித்திருக்கிறார் சசிகலா. தொண்டர்களிடம் சசிகலா பேசும் 50வது ஆடியோ வெளியாகியிருக்கிறது. பகுதி வாரியாக தனது ஆதரவாளர்களிடம் பேசி வரும் சசிகலாவின் பேச்சில் இருக்கும் சாரம்சம் ஒன்று தான்; ‛நான் வந்துடுவேன்...’ என்பதே. உலககோப்பை கிரிக்கெட்டிற்கு முன்பே அரசியல் ஆடுகளத்தில் சோலோவாக அதகளம் செய்து கொண்டிருக்கும் சசிகலாவின் இந்த மூப், அவரது அடுத்த ஆயத்தத்தை அப்பட்டமாக காட்டுகிறது. அதற்கு சசிகலா பயன்படுத்தும் ஆயுதம் தான் ஆடியோ! எத்தனையோ வழியிருக்கிறது... அது என்ன ஆடியோ என நீங்கள் கேட்கலாம். சசிகலாவின் ஆரம்ப கால அரசியல் அடியெடுப்புக்கு வழி வகுத்தது வீடியோ. இப்போது மறு பிரவேசம் எடுக்க அவர் கையில் எடுத்திருப்பது ஆடியோ! 




அதிமுகவில் அடியெடுத்து வைக்க காரணமான வீடியோ!


1984 ல் ஆழ்வார்பேட்டை பீமண்ணா தெருவில் வீடியோ கடை நடத்தி வந்தார் சசிகலா. அப்போது சுப்பிரமணிய சுவாமியின் சகோதரியான ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்திரலேகா மூலம் ஜெயலலிதாவின் அறிமுகம் கிடைத்து, அவரது நிகழ்ச்சிகளை ஒளிப்பதிவு செய்யும் ஆர்டரை பெற்ற சசிகலா, பின்னாளில் அவரின் அன்பை பெற்று ஜெயலலிதாவின் நிழல் ஆனார். இத்தனைக்கும் பாலமாய் இருந்த ஒரே விசயம் வீடியோ. அன்று ஜெயலலிதா-சசிகலாவை இணைத்தது வீடியோ. இன்று அதிமுகவை தன் தலைமையின் கீழ் இணைக்க உதவப்போகிறது ஆடியோ என நம்புகிறார் சசிகலா. தேர்தல் நேரத்தில் விடுதலையாகி, அரசியலில் இருந்து ஒதுங்குகிறேன் என அறிவிப்பு கொடுத்துவிட்டு, முடிவு வரும் வரை காத்திருந்து, இப்போது ஒதுங்கிய அவர் மீண்டும் உரிமை கோர புறப்படுகிறார். 





*ஆடியோ இல்லை... அலர்ட்! *


போயஸ் கார்டன் ஜெ., வீடு அரசுடமையாகிவிட்டது. அங்கிருந்து அரசியல் செய்ய முடியாது. அந்த இடத்திற்கு எதிரே புதிய வீடு கட்டி கிரஹகபிரவேசத்துடன் அரசியல் பிரவேசத்தை துவக்கலாம் என எதிர்பார்த்திருந்தார் சசிகலா. தேர்தல் முடிவும் அதிமுகவிற்கு பாதகமாக வர, கட்சியில் சலசலப்பு வரும், எதிர்ப்பு வரும். நம் தலைமையை தேடி வருவார்கள் என எதிர்பார்த்தார். ஆனால், தேர்தலில் தோல்வி அடைந்தாலும், அது கவுரவ தோல்வியாகவே இருந்தது. எனவே இபிஎஸ்-ஓபிஎஸ் தலைமை மீது பெரிய அளவில் கேள்வி எழுப்ப முடியாத நிலை ஏற்பட்டது. 10 ஆண்டுகள் தொடர்ந்து ஆட்சி நடத்திய ஒரு கட்சிக்கு மூன்றாவது தேர்தலில் இந்த வெற்றி கூட பெரியதே. ஆனால் சசிகலா எதிர்பார்த்தது, நடக்கவில்லை. தேடி வரவில்லை... தேடி போவோம் என தற்போது ஆதரவாளர்களின் எண்களை டயல் செய்து கொண்டிருக்கிறார். ஒவ்வொரு அழைப்பும் பக்காவாக ரெக்கார்டு செய்யப்பட்டு வர வேண்டிய இடத்திற்கு கரெக்டாக வருகிறது. இது சசிகலா விடும் ஆடியோ விடு தூது. ஆனாலும், இபிஎஸ்-ஓபிஎஸ் தரப்பில் அதற்கும் ரியாக்ஷன் இல்லை. ஆரம்பத்திலேயே சசிகலா உடன் பேசியவர்களை கட்சியை விட்டு விலக்கினர். இதன் மூலம் சசிகலா வருவதை அவர்கள் விரும்ப வில்லை என்பது தெளிவாக தெரிகிறது.




*பிரம்மாஸ்திரம் எப்போது?*


அதே நேரத்தில் கட்சிக்குள் நிலவும் இபிஎஸ்-ஓபிஎஸ் யுத்தத்தை தனக்கு சாதகமாக மாற்ற விரும்பும் சசிகலா, ஓபிஎஸ்.,யை தன் வசமாக்க காய் எறிகிறார். தேர்தல் நேரத்திலேயே சசிகலாவை சிலாகிச்சிருந்தார் ஓபிஎஸ். இதையெல்லாம் தனக்கு சாதமாக்கி ஓபிஎஸ் மூலம் இபிஎஸ்.,யை ஓரம் கட்டலாம் என்கிற திட்டமும் இருக்கிறது. ஆனால், சிறையிலிருந்து இதுவரை சசிகலா எய்த அம்புகள் அனைத்துமே ரிட்டன் ஆகியிருக்கிறது. இந்த அஸ்திரமும் பயனளிக்குமா என தெரியவில்லை. அப்படியிருக்கும் போது தான், ஆடியோக்களை வெளியிட்டு தொண்டர்கள் மத்தியில் கல் எறிந்து பார்க்கிறார். வந்து விடுவேன்... வந்து விடுவேன் என்பதை திரும்ப திரும்ப சொல்கிறார். கொரோனா முடியட்டும் என நாள் குறிக்கிறார். இன்னும் முதல் தடுப்பூசியே போடாதவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். கொரோனா என்று முடிய, சசிகலா என்று வருவது என்கிற கேள்வியும் எழாமல் இல்லை. ஆனால் அந்த நாட் குறிப்பும் ஒரு விதமான எச்சரிக்கையாகவே பார்க்கப்படுகிறது.





*யார் மனசுல யாரு!*


இப்போதுல்ல சூழலில் இபிஎஸ் அல்லது ஓபிஎஸ், யாராவது ஒருவர் ஏற்றால் மட்டுமே சசிகலாவால் கட்சிக்குள் வர முடியும். அதை கடந்து சசிகலா நேரடியாக அதிமுகவில் ஊடுருவினால் அது அமமுக பார்ட்-2 ஆகவே இருக்கும். அல்லது அமமுக-வாகவே கூட இருக்கலாம். இரட்டை இலையும், ராயப்பேட்டை அலுவலம் இருப்பவரிடத்தில் தான் அதிமுக இருக்கும் என்கிற அடிப்படை புரிதல் அடிமட்ட தொண்டனிடம் இருக்கிறது. தோல்வி என்கிற ஒரு அஸ்திரம் மட்டுமே சசிகலாவிடம் உள்ளது. ஆனால், அதே அஸ்திரத்தை அவர் பக்கமே திருப்பவும் இரட்டை தலைமைக்கு வாய்ப்பிருக்கிறது. அமமுகவில் தொண்டர்களை பிரித்து தோல்விக்கு காரணமே அவர்கள் குடும்பம் தான் என்கிற குற்றச்சாட்டை ஒரு வேளை அவர்கள் வைக்கலாம். ஆனால் அந்த அளவிற்கு தற்போதைய அதிமுக தலைமை செல்வது சந்தேகமே. முடிந்த வரை சசிகலாவை பெயரளவில் கூட தவிர்க்க வேண்டும் என அவர்கள் விரும்புகிறார்கள். பொது எதிரி திமுக மட்டுமே என்பதை அவர்கள் முன்னிலைப் படுத்துவார்கள்.




*டாஸ் வின்... மேட்ச்.....?*


எப்படி கிரிக்கெட்டில் கடைசி பந்து வரை எதுவும் நிரந்தரம் இல்லையோ, அது போல தான் அரசியலிலும்! கடைசியில் எதுவும் நடக்கும், நடந்திருக்கிறது, நடக்கலாம். கடந்த காலங்களும் அதற்கு சாட்சி. எனவே இந்த ஆடியோ விவகாரம்... ஆரம்ப அஸ்திரம். இனி அடுத்தடுத்து பிரம்மாஸ்திரங்கள் வரலாம். சசிகலா ‛பிஸி’ காலாவாக மாறலாம். அல்லது கடந்த காலங்களை போலவே வரக்கூடிய கற்களை தடுப்புகளால் தடுத்துக் கொண்டே இபிஎஸ்-ஓபிஎஸ் தங்கள் பனிப்போரை வழக்கம் போல தொடரலாம். அதுவரை சசிகலா சொன்ன கொரோனா முடியும் காலத்தை நாமும் எதிர்பார்த்து காத்திருப்போம்.