சசிகலாவிற்கு எதிராக நான் எந்த பேட்டியும் கொடுக்கவில்லை, டிடிவி தினகரன் எனக்கு நல்ல நண்பர் என அதிமுக முன்னாள் அமைச்சரும் தற்போதைய கோவில்பட்டி எம்.எல்.ஏவுமான கடம்பூர் ராஜூ பேசியதாக ஆடியோ ஒன்று வைரலாக சமூக வலைதளங்களில் உலவி வருகிறது.
அந்த ஆடியோவில், வெளிநாட்டில் இருந்து தொலைபேசி மூலமாக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூவுக்கு அழைக்கும் சசிகலாவின் ஆதரவாளர் என்று தன்னை கூறிக்கொள்ளும் நபர், தான் வெளிநாட்டில் இருந்து பேசுவதாகவும், சொந்த ஊர் சாயல்குடி பக்கம்தான் வேப்பன்குளம் என்றும் தன்னை அறிமுகம் செய்துகொள்கிறார்.
பின்னர் அந்த ஆடியோவில் நடந்த உரையாடலை அப்படியே தொகுத்து கீழே தந்திருக்கிறோம் :-
சசிகலா ஆதரவாளர் : நல்லாயிருக்கீங்களாண்ணே, நல்லாயிருக்கீங்களா ? அது எப்டிண்ணே ? சின்னம்மாவுக்கு எதிரா நீங்க பேட்டி கொடுத்தீங்க ? அன்றைக்கு சின்னம்மா பொதுச்செயலாளராக வரவேண்டும் என்று தீர்மானம் போட்டீங்க, இப்ப நீங்களே அவங்களுக்கு எதிராக தீர்மானம் போடுறேன்னு சொல்றீங்களே ?
கடம்பூர் ராஜூ : அதெல்லாம் ஒன்னுமில்லை, எதாவது பத்திரிகைகளில் வருவதை வைத்துக்கொண்டு, ஆட்களை தூண்டிவிட்டு, இப்படி பண்ணிகிட்டு இருக்காதீங்க
சசிகலா ஆதரவாளர் : இல்லண்ணே, ஆட்கள தூண்டிவிடல, அதனாலதான் உங்க கிட்ட நேரடியா போன் போட்டு கேக்குறேன்.
கடம்பூர் ராஜூ : சொல்றத கேளுங்க, நம்ம எதிர்க்கட்சி ஆனதும், நான் பேசாதத கூட பேசுதனா இந்த பத்திரிகைகளில் எல்லாம் போட்டுக்கொண்டு இருக்கிறார்கள். நீங்க சொல்ற மாதிரி எல்லாம் யாரும் பேசல
சசிகலா ஆதரவாளர் : நீங்கள் எல்லாம் சீனியர், சின்னம்மா பற்றி தவறாக பேச மாட்டீங்கன்னு தெரியும், இருந்தாலும் நேரடியாக கேட்டுவிடுவோமே என்றுதான் அழைத்தேன்.
கடம்பூர் ராஜூ : நீங்க நினைக்கிற மாதிரி எல்லாம் யாரும் ஒன்னும் பேசிவிடவில்லை, இங்க கோவில்பட்டியில தினகரனே நின்னாரு. நான் அவர் எல்லாம் ரொம்ப நண்பர்களாக இருந்தோம். தேர்தல்னு வந்த போட்டியில நம்ம ஜெயிச்சோம். நான் தேர்தல் பிரச்சாரத்துல கூட அவங்கள விமர்சனம் பண்ணலையே. நீங்க வெளிநாட்டு ல இருந்து கவலைப்படாதீங்க, நீங்க நினைப்பது போல் எல்லாம் நான் இல்லை.
சசிகலா ஆதரவாளர் : சின்னம்மாவை பற்றி என்ன அண்ணே நினைச்சுகிட்டு இருக்கீங்க எல்லோரும் ? அடுத்து என்ன பண்ணப்போறீங்க…?
கடம்பூர் ராஜூ : அத நம்ப ஒன்னும் முடிவு பண்ண முடியாது ; முடிவு எடுக்குற லெவல் உள்ள அதிகாரத்துல நான் இல்லை. நேரா வாங்க பேசலாம்
என்று அந்த உரையாடல் முடிகிறது.
இது குறித்து கடம்பூர் ராஜூவை தொடர்புகொள்ள முயற்சித்தபோது, அவர் குளித்துக்கொண்டு இருக்கிறார் என்றும் ஒரு மணி நேரம் கழித்து, மீண்டும் அழையுங்கள் என்றும் அவரது உதவியாளர் தெரிவித்தார். ஒரு மணி நேரமா அவர் குளிப்பார், சரி இந்த ஆடியோ உண்மைதானா என நீங்கள் கூட கேட்டுச் சொல்லுங்கள் என்று நாம் மறுபடியும் கேட்க, அவரது உதவியாளர் இணைப்பை துண்டித்துவிட்டார். .