காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற அதிமுகவின் வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில், முன்னாள் அமைச்சர்கள் வி. சோமசுந்தரம் மற்றும் வைகைச் செல்வன் ஆகியோர் பங்கேற்றனர்.
முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன் செய்தியாளர் சந்திப்பு
இக்கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த வைகைச் செல்வன், ஆளும் திமுக அரசு மற்றும் விலகிச் சென்ற உறுப்பினர்கள் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். சமீபத்திய கோவை சம்பவம் குறித்துப் பேசிய வைகைச் செல்வன், "முதல்வரின் கருத்து வெட்கக்கேடானது, வேதனையானது" என்று கடுமையாக விமர்சித்தார். தமிழகத்தில் அத்துமீறல்கள் மற்றும் அடாவடித்தனங்கள் அன்றாடம் நடப்பதால், அதிமுக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை அறிவித்துள்ளதாக அவர் தெரிவித்தார். பெண்கள் பாதுகாப்பு விஷயத்தில் திமுக அரசு அக்கறை இல்லாமல் செயல்படுவதாகவும், அதிமுக அரசுதான் பெண்களுக்குப் பாதுகாப்பாக இருந்தது என்றும் அவர் வலியுறுத்தினார்.
யாரோ கொம்பு சீவி விட்டுள்ளனர்
அதிமுகவின் இரட்டை இலை சின்னம் தொடர்பாக செங்கோட்டையன் கடிதம் எழுதியது குறித்த கேள்விக்கு பதிலளித்த வைகைச் செல்வன், அதிமுக எடப்பாடி பழனிசாமி தலைமையில் சீரிய முறையில் நடைபெற்று வருவதாகவும், அவரது பொதுச்செயலாளர் பதவியைத் தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் தெளிவுபடுத்தினார். மேலும், "யாரோ ஒருவர் கொம்பு சீவி விட்டதால்" செங்கோட்டையன் பாதிக்கப்பட்டு, "நாளும் பொழுதும் ஏதேதோ உளறிக் கொண்டிருக்கிறார்," என்றும், அவர் பரிதாபத்திற்குரியவராகவே இருக்கிறார் என்றும் காட்டமாக விமர்சித்தார்.
"பாரத்துடன் பஞ்சம் பிழைக்க திமுகவுடன் சரண்"
மனோஜ் பாண்டியன் திமுகவில் இணைந்தது குறித்துப் பேசிய அவர், அவரது தந்தையாரை சபாநாயகராக்கியது எம்.ஜி.ஆர் என்றும், அதிமுக அவருக்குப் பல வாய்ப்புகளைக் கொடுத்ததாகவும் சுட்டிக்காட்டினார். ஆனால், பாண்டியன் நன்றி மறந்து, தன்மானத்தை அடகு வைத்துவிட்டு, திமுகவிற்கு பஞ்சம் பிழைக்கச் சென்றுவிட்டார் என்றும், அவர் பாவம், பரிதாபத்திற்கு உரியவராக இருக்கிறார் என்றும் சாடினார். சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ததை அவர் மூன்று வருடங்களுக்கு முன்பே செய்திருக்கலாம் என்றும், இப்போது தேர்தலில் திமுக வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற பேரத்தின் அடிப்படையில் சரணடைந்துள்ளார் என்றும் குற்றம் சாட்டினார்.
மேலும், "இப்படி உள்ளடி வைத்து வேலை செய்பவர்கள், அதிமுகவை அழிக்க நினைத்தவர்கள்," என்றும், "அதிமுகவில் இருந்து கொண்டு திமுகவின் 'பி' டீமாக செயல்பட்டவர்கள்" என்றும் வைகைச் செல்வன் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். ஓ.பி.எஸ் (ஓ. பன்னீர்செல்வம்) பாதிக்கப்படுவாரா என்ற கேள்விக்கு, "அவர் ஏற்கனவே பாதிக்கப்பட்டு இருக்கிறார்," என்று பதிலளித்து முடித்தார்.