அதிமுக ஒருங்கிணைப்பாளர் – இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தல் வரும் 7ஆம் தேதி நடைபெறும் என அதிமுக தலைமை அறிவித்துள்ள நிலையில், எப்படி அந்த தேர்தல் நடைபெறவுள்ளது என்ற எதிர்பார்ப்பும் குழப்பமும் அதிமுக தொண்டர்களிடையேயும் மக்களிடையேயும் நிலவி வருகிறது.


தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் பொன்னையன் கூட நேற்று சேலத்தில் அளித்த பேட்டியில் 7ஆம் தேதி தேர்தலா ? அப்படி ஒரு தேர்தலும் கிடையாது என சொல்லியிருப்பார். உண்மையில், அவர் ஆணையராக நியமிக்கப்பட்டதும் தேர்தல் அறிவிக்கப்பட்டதும் அவருக்கே தெரியாது.






இந்நிலையில், கடந்த 1ஆம் தேதி நடைபெற்ற அதிமுக செயற்குழு கூட்டத்தில் அதிமுகவின் சட்டவிதிகளில் மாற்றம் செய்யப்பட்டது. அதன்படி, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளரை பொதுக்குழு உறுப்பினர்களுக்கு பதிலாக, அதிமுகவின் அடிப்படை உறுப்பினர்களே தேர்வு செய்வார்கள் என திருத்தம் செய்யப்பட்டது. அதேபோல், இருவரையும் அடிப்படை உறுப்பினர்களால் ஒற்றை வாக்கின் மூலம் இணைந்தே தேர்ந்தெடுப்பார்கள் என்றும் அறிவிக்கப்பட்டது.


 ஒற்றை வாக்கின் படி தேர்வு என்றால் எப்படி..?


எம்.ஜி.ஆரோ, ஜெயலலிதாவோ அதிமுகவின் ஒற்றைத் தலைமையாக இருக்கும்போது பொதுக்குழு உறுப்பினர்களால் ஒற்றை வாக்கின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். ஆனால், தற்போது ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என இரண்டு தலைமை இருப்பதால் இரண்டு பேருக்கும் தனித்தனியாக வாக்கு செலுத்தும் நிலை இருந்தது. ஆனால், செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட திருத்தத்தின் அடிப்படையில், இவர்கள் இருவரையும் இனி ஒற்றை வாக்கின் அடிப்படையிலேயே அடிப்படை உறுப்பினர்கள் தேர்வு செய்யலாம்.


தனித்தனியாக போட்டியிட முடியாது


அதன்படி, அதிமுக ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு தனியாகவோ, இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு தனியாகவோ யாரும் போட்டியிடமுடியாது. இந்த இரு பதவிக்கும் வேட்பு மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றால், ஒரே மனுவாகதான் தாக்கல் செய்யப்படவேண்டும். அப்படி பார்த்தால், இப்போது ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு ஒ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு எடப்பாடி பழனிசாமியும் இணைந்து ஒரே மனுவாக தாக்கல் செய்வர்.


எதிர்த்து எப்படி போட்டியிடுவது ?


இவர்களை எதிர்த்து யாரேனும் போட்டியிடவேண்டும் என்றால், ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு ஒருவர், அதேபோல் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு ஒருவர் என இருவர் சேர்ந்து ஒரே மனுவாக தாக்கல் செய்யவேண்டும். கடந்த காலங்களில் பொதுச்செயலாளர் எப்படி ஒற்றை வாக்கின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டாரோ, அதேபோல, ஒரே வாக்கு அடிப்படையில் தற்போது உள்ள ஒருங்கிணைப்பாளர் – இணை ஒருங்கிணைப்பாளர் தேர்வு செய்யப்படவுள்ளனர். 


தேர்தல் எப்படி நடைபெறும் ? 


3ஆம் தேதியான இன்றும் 4ஆம் தேதியான நாளையும் ஒருங்கிணைப்பாளர் – இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு வேட்பு மனு தாக்கல் செய்ய அவகாசம் உள்ளது. ஒபிஎஸ் – ஈபிஎஸ் இருவரும் நாளை தங்களது வேட்பு மனுவை தாக்கல் செய்யவுள்ளனர். இவர்களை எதிர்த்து, கட்சியில் தொடர்ந்து 5 ஆண்டுகள் எந்த இடை நீக்கமும் செய்யப்படாமல் தொடரும் உறுப்பினர்கள் யாரேனும் இருவர், ஒரே மனுவாக தாக்கல் செய்து, அது பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, அந்த மனு ஏற்றுக்கொள்ளப்பட்டால், வரும் 7ஆம் தேதி அடிப்படை உறுப்பினர்கள் வாக்கு செலுத்தும் நடைமுறை இருக்கும்.



அதிமுக தலைமை அலுவலகம்


ஒபிஎஸ் – ஈபிஎஸ் இருவரையும் எதிர்த்து யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாமல் இருந்தாலோ, அல்லது தாக்கல் செய்து, அது நிராகரிக்கப்பட்டாலோ, அல்லது தாக்கல் செய்துவிட்டு பின்னர் வாபஸ் பெற்றுக்கொண்டாலோ, வாக்கெடுப்பு நடத்தப்படாமல், இருவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்படுவர்.