பிரதமர் நரேந்திர மோடி வரும் டிசம்பர் 13 அன்று வாரணாசியில் உள்ள கோயிலில் தரிசனம் செய்வதால், அன்று தமிழக பாஜகவினர் தமிழகம் முழுவதும் உள்ள நகரங்களில் முக்கிய கோயில்களில் சிறப்பு தரிசனம் மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 


பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு பிரிவு சார்பாக வெளியிடப்பட்டிருக்கும் இந்த அறிவிக்கையில், மாநிலத் தலைவர் அண்ணாமலை, `வருகின்ற டிசம்பர் 13 திங்கட்கிழமை அன்று, வாரணாசியில் உள்ள காசி விசுவநாதன் கோயிலில் சிறப்பு தரிசனம் மேற்கொண்டு தொடர்ந்து சிறப்பு பூஜைகள் செய்யத் திட்டமிட்டுள்ளார். அதனால் மாவட்டத்தில் உள்ள மண்டல வாரியாக முக்கிய கோயில்களில் சிறப்பு பூஜைகள் செய்ய வேண்டும். மேலும், பிரதமர் மோடி வாரணாசியில் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியை இங்கு தமிழ்நாட்டில் பொது மக்கள் பார்க்கும் விதமாகப் பொது இடங்களில் திரை அல்லது டிஜிட்டல் டிவி பயன்படுத்தி நேரடியாக ஒளிபரப்பு செய்ய வேண்டும்’ என்று உத்தரவிட்டுள்ளார்.



மேலும், இந்த நிகழ்ச்சி ஒருங்கிணைப்புக்காக மாநில அளவிலான குழு ஒன்று அமைக்கப்படுவதாகவும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இந்த அறிவிக்கையில் தெரிவித்துள்ளார். தொடர்ந்து அவர் மாவட்டம் மற்றும் மண்டல அளவில் தலா 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட வேண்டும் எனவும், மண்டல அளவிலான குழுவில் கட்டாயமாக ஒரு ஐடி பொறுப்பாளர் இருக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.






பிரதமர் மோடி வாரணாசி கோயிலில் கலந்துகொள்ளும் சிறப்பு பூஜை நிகழ்ச்சியைத் தமிழ்நாட்டில் பொதுமக்களுக்கு ஒளிபரப்பவும், தமிழகத்தில் உள்ள முக்கிய கோயில்களில் அதே நேரத்தில் சிறப்பு பூஜை செய்யவும் மாநில அளவிலான குழு ஒன்றையும் அறிவித்துள்ளது தமிழக பாஜகவின் தலைமை. இதில் கே.பி.ஜெயகுமார், கே.சண்முகராஜ், இல.கண்ணன், கே.வெங்கடேசன், ஏ.பி.முருகானந்தம், சி.டி.நிர்மல் குமார் ஆகிய மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் பணியாற்றும் கட்சிப் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 


உத்தரப் பிரதேச மாநில சட்டமன்றத் தேர்தல்கள் நெருங்கி வருவதால், பிரதமர் மோடியின் வாரணாசி பயணம் பாஜகவினரால் மிகுந்த சிறப்பு மிக்கதாகக் கருதப்படுகிறது. வரும் டிசம்பர் 13 அன்று, கோயில் பிரசாதங்களை மக்களுக்கு வீட்டிலேயே டெலிவரி செய்தல் முதலான திட்டங்களைப் பிரதமர் மோடி வாரணாசியில் தொடங்கி வைப்பார் எனக் கூறப்பட்டுள்ளது.