பொதுக்குழு வழக்கு:

Continues below advertisement

அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு இடையே இரட்டை தலைமை தொடர்பான மோதல் விஸ்வரூபம் எடுத்தது. இதையடுத்து, கடந்த  ஆண்டு ஜூலை மாதம் 11 ஆம் தேதி சென்னை வானகரத்தில் தனியார் மண்டபத்தில் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.

அதன் முடிவில்,  அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும், ஓபிஎஸ் கட்சியில் இருந்தே நீக்கப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டது.

Continues below advertisement

அதை எதிர்த்து ஓபிஎஸ் தாக்கல் செய்த மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அந்த மனு கடந்த 4ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்ட வழக்கானது, இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

இபிஎஸ் தரப்பு வாதம்:

அதிமுக தொண்டர்கள்தான் பொது செயலாளரை தேர்வு செய்ய வேண்டும் என்றால், அனைத்துக்கும் தொண்டர்களிடம்தான் செல்ல வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வாதம் வைக்கப்பட்டுள்ளது.

மேலும், அனைத்துக்கும் தொண்டர்களிடம் செல்வது என்பது சிரமமான காரியம் என்பதால் பொதுக்குழுவுக்கு அதிகாரம் தரப்பட்டுள்ளது. மேலும் பதவிகளை நீக்க பொதுக்குழுவுக்கு அதிகாரம் உண்டு

அதிமுகவின் அடிப்படை உறுப்பினர்களின் பிரதிநிதித்துவம்தான் பொதுக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள்  என்றும் பொதுக்குழு எடுக்கும் முடிவை தொண்டர்கள் எடுக்கும் முடிவாகத்தான் பார்க்க வேண்டும் என்றும்  இபிஎஸ் தரப்பு வாதம் வைத்தது

மேலும், ஒருங்கிணைப்பாளர்கள் பதவிகள் உருவாக்கியபோது, தொண்டர்களிடம் செல்லாத ஓ.பன்னீர்செல்வம், தற்போது செல்ல வேண்டும் என கூறுகிறார் என்றும் இபிஎஸ் தரப்பு வாதம் வைத்தது

அமெரிக்காவின் டிரம்ப் ஆதரவாளர்கள் செய்ததை போல, கட்சி அலுவலகத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் செயல்பட்டனர் என்று இபிஎஸ் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.

இதற்கு முன்பு , ஓபிஎஸ் தரப்பு  தனது வாதங்களை வைத்திருந்தது.

நாளை ஒத்திவைப்பு:

இதையடுத்து, இபிஎஸ் தரப்பு வாதம் முன்வைக்கப்பட்டதையடுத்து, அதிமுக பொதுக்குழு வழக்கின் விசாரணை மீண்டும் நாளை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதிமுக தலைமை அலுவலகம், அதிமுக தலைமை நிலைய செயலாளர் ஆகியோர் நாளை வாதிடுகின்றனர்.