அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்.எல்.ஏக்களுடன் முதலமைச்சர் முக ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். அப்போது, சட்டமன்றத்தில் திமுகவின் எம்.எல்.ஏக்கள் ஆளுநரை தாக்கி பேசக்கூடாது எனவும், ஆளுநருக்கு எதிராக போஸ்டர்களை அடிக்கக்கூடாது எனவும் எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது

Continues below advertisement

2023 ஆம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத் தொடர் நேற்று ஆளுநர் உரையுடன் தொடங்கியது. அப்போது தமிழக அரசு தயாரித்த உரையை ஆளுநர் முறையாக படிக்கவில்லை எனவும், உரையில் ஆளுநர் சொந்தமாக சேர்த்து படித்த எதுவும் அவை குறிப்பில் இடம் பெறாது எனவும் சட்டப்பேரவையில் ஆளுநர் முன்பே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார். அப்போது முதலமைச்சர் பேசிக்கொண்டிருக்கும் போதே ஆளுநர் ஆர்.என்.ரவி பாதியில் புறப்பட்டார். இதையடுத்து ஆளுநரின் இந்த செயலுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதையடுத்து, மரபை மீறி தமிழ்நாடு ஆளுநர் செயல்பட்டதாகவும், அவையிலிருந்து பாதியிலேயே வெளியேறியது கண்டிக்கத்தக்கது என்றும் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட பல திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். தொடர்ந்து, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக பல இடங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டு, போஸ்டர்கள் ஒட்டப்பட்டது. மேலும், மார்க்சிஸ்ட், விசிக ஆகிய கட்சிகள் ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டத்தையும் அறிவித்தனர். 

Continues below advertisement

இதற்கு மத்தியில் சட்டப்பேரவையில் நாளையும், நாளை மறுநாளும் ஆளுநர் உரை மீதான விவாதம் மற்றும் முதலமைச்சர் பதிலுரை என அடுத்தடுத்த நிகழ்வுகள் 13ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. 

இந்த நிலையில் திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அக்கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. அதில் சட்டப்பேரவை கூட்டத் தொடரில் எவ்வாறு செயல்படுவது என்பது குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது. 

அதில் சட்டமன்றத்தில் திமுகவின் எம்.எல்.ஏக்கள் ஆளுநரை தாக்கி பேசக்கூடாது எனவும், ஆளுநருக்கு எதிராக போஸ்டர்களை அடிக்க வேண்டும் எனவும் எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.