கல்வித்துறை மானியக் கோரிக்கை தொடர்பான சட்டபேரவைக் கூட்டத்தில், நுழைவுத் தேர்வை எதிர்க்கும் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அது தொடர்பாக அதிமுக சார்பில் முன்னாள் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் , தீர்மானத்தை வரவேற்று பேசினார். அப்போது நடந்த சூடான விவாதம் இதோ...


 


கே.பி.அன்பழகன்: 


மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வினை ரத்து செய்ய முடியாமல் போராடிக் கொண்டிருக்கும் நிலைமையில், 2022-23 ம் கல்வி ஆண்டிற்கான மத்திய பல்கலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு நுழைவுத்  தேர்வு நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இது கல்வியாளர்கள், பெற்றோர், மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா முழுவதும் உள்ள மத்திய பல்கலை.,கள் மற்றும் இணைப்பு கல்லூரிகளில் உள்ள இளநிலை , முதுநிலை படிப்புகளுக்கு 1 லட்சத்து 80 ஆயிரம் இருக்கைகளை நிரப்ப, நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய கல்வி அமைச்சகத்தின் இந்த அறிவிப்பு, நுழைவுத் தேர்வுக்கான பணிகளுடன் தொடங்கியுள்ளது. தமிழ் உள்பட 13 மொழிகளில் கணினி மூலம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நுழைவுத் தேர்வு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், 12ம் வகுப்பிற்கு மதிப்பில்லாமல் போகும். இதனை திரும்ப பெற தேவையான ஆக்கப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. கல்வியில் மாநில உரிமையை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா விட்டுத்தரவில்லை. அதே போல், அவர் வழியில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ஏழை மாணவர்கள் மருத்துவர் ஆக வசதியாக கொண்டு , அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இட ஒதுக்கிட்டை பெற்றுத்தந்தார். இதனால் 800 மாணவர்கள் மருத்துவர் ஆகும் வாய்ப்பை பெற்றுள்ளனர். 


(உயர்கல்விதுறை அமைச்சர் பொன்முடி குறுக்கீடு; சபாநாயகர் அவரை பேச அழைத்தார்)




அமைச்சர் பொன்முடி: 


7.5 சதவீத இடஒதுக்கீட்டிற்கு ஆளுநர் கையெழுத்து போடாமல் இருந்த போது, ஆளுநர் வீட்டு முன் போராடியதால் தான், அந்த இடஒதுக்கீட்டிற்கு ஒப்புதல் தரப்பட்டது என்பதை மறந்துவிடக்கூடாது.


எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி: 


சட்டம் இயற்றப்பட்டு,  ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டு காலதாமதம் ஆகும் போது, நானே கையெழுத்திட்டு மனு அனுப்பியதை அனுப்பினேன். முதலமைச்சரின் அதிகாரத்தில் அந்த இடஒதுக்கீடு ஒப்புதல் தரப்பட்டது என்பதை...(நேரலை ஆடியோ கட் செய்யப்பட்டது)


கே.பி.அன்பழகன்:


இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத திட்டங்களை கொண்டு வந்த முதல்வர்களாக எங்கள் இயக்க முதல்வர்கள் உள்ளனர். மாணவர்கள் 800 பேர் மருத்துவர் ஆகும் வாய்ப்பு உள்ளது. அதை பதிவு செய்யும் போது, அதை அமைச்சர் கொச்சப்படுத்தக்கூடாது. 




சபாநாயகர்: 


கொச்சைப்படுத்தவில்லை. அந்த வார்த்தைகளை தவிர்த்துவிடலாம். அது அவை குறிப்பில் இருந்து நீக்கப்படுகிறது. நீங்க பேசலாம். 


கே.பி.அன்பழகன்:


பொறியியல், மருத்துவ மாணவர்களுக்கு நுழைவுத் தேர்வு இருந்தது. 2004 ம் ஆண்டு அந்த நுழைவுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என ஜெயலலிதா...


சபாநாயகர்:


வேண்டாம்... வேண்டாம்... அங்கே போக வேண்டாம்... வேறு விவாதத்திற்கு போய் விடும்....


கே.பி.அன்பழகன்:


2005ல் அரசாணை வெளியிட்டு, அதன் தொடர் நடவடிக்கையாக ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அம்மாவின் முன்மொழிவால் அந்த நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டது..


(அமைச்சர் பொன்முடி குறுக்கீடு...)


அமைச்சர் பொன்முடி: 


கொண்டு வந்ததை நீதிமன்றத்தில் நிறுத்திவிட்டு, அதன் பின் தமிழக முதல்வர் கருணாநிதி, அனந்தகிருஷ்ணன் தலைமையில் குழுவை நியமித்து அதற்கு பிறகு தான் நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டது . ஆக... செய்தது... கலைஞர்.. கலைஞர்... கலைஞர்...


(அதற்கு அதிமுகவினர் பதிலளிக்க முயன்றனர்; சபை காரசாரமாக மாறியது)


உடனே நேரலை துண்டிக்கப்பட்டது. அமைச்சர் பொன்முடியின் கருத்துக்கு அதிமுகவினர் என்ன பதிலளித்தார்கள் என்பதை நேரலையில் அறிய முடியாத சூழல் ஏற்பட்டது.