அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் 9-ந் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவான தீர்ப்பு வந்த பிறகு நடைபெறும் முதல் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் என்பதால் இந்த கூட்டம் மீது மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.


அதிமுக கட்சி, இபிஎஸ்-க்கா அல்லது ஒபிஎஸ்-க்கா என்ற எதிர்பார்ப்பு இருந்து வந்த நிலையில், கட்சியானது இபிஎஸ் தரப்புக்கு சொந்தம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து, இபிஎஸ் ஆதரவாளரான தென்னரசு ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் களமிறங்கினார்.


இந்நிலையில், கடந்த 2 ஆம் தேதி நடந்த வாக்கு எண்ணிக்கையில், திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுக வேட்பாளரை விட சுமார் 67 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இது, அதிமுகவுக்கு பெரும் அடியாக அமைந்தது. குறிப்பாக, இபிஎஸ் வசம் கட்சி தலைமை முழுமையாக சென்ற பிறகு நடைபெற்ற தேர்தல் என்பதால், இபிஎஸ்-க்கு பின்னடைவை தந்தது.


ஆலோசனை:


இந்நிலையில், அதிமுக கூட்டம் சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நடைபெற உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இக்கூட்டத்தில், ஈரோட்டில் தோல்வி குறித்து விவாதிக்கப்படும் என கூறப்படுகிறது.


மேலும், அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், மாவட்ட வாரியாக கட்சியை வலுப்படுத்துவது குறித்தும் விவாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மேலும், வரும் 21ம் தேதி தமிழ்நாட்டில் பட்ஜெட் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதுகுறித்தான ஆலோசனைகளும் இடம்பெறும் எனவும் கூறப்படுகிறது.