தமிழ்நாடு காவல்துறை சுதந்திரமாக செயல்படவேண்டும், அந்த சுதந்திரத்தை கட்டாயம் தமிழக காவல்துறைக்கு வழங்கவேண்டும் என்று ஆளுநர் ஆர்.ரவி பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
பயங்கரவாத சம்பவத்தை எளிதாக எடுத்துக் கொண்டு கடந்துவிட முடியாது
கோவையில் நடைபெற்ற தனியார் கல்லூரியில் பங்கேற்று பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, கோவையில் கார் சிலிண்டர் வெடித்த சம்பவத்தை அவ்வளவு எளிதாக எடுத்துக்கொண்டு கடந்துவிட முடியாது என்றும், இது முழுக்க முழுக்க பயங்கரவாத தாக்குதல் என்றும் கூறினார். இந்த பயங்கரவாத சம்பவத்தில் தமிழ்நாடு காவல்துறை சிறப்பாக புலனாய்வு செய்து குற்றவாளிகளை கைது செய்துள்ளார்கள் என்றும், தமிழ்நாடு காவல்துறையின் இந்த சம்பவம் பாராட்டுக்கு உரியது எனவும் பேசிய ஆளுநர் ரவி, ஏன் இந்த வழக்கை 4 நாட்கள் கழித்து என்.ஐ.ஏ அமைப்பிடம் காலம் தாழ்த்தி ஒப்படைத்தார்கள் என்றும் கேள்வியெழுப்பினார். தமிழ்நாடு காவல்துறைக்கு என்.ஐ.ஏவை அழைத்து விசாரிக்க சொல்லும் அதிகாரம் இல்லையென்றும் ஆனால் அந்த முடிவை எடுத்தவர்கள் காலம் தாழ்த்தி எடுத்துள்ளார்கள் எனவும், இதுபோன்ற பயங்கரவாத தாக்குதல் தொடர்பான விசாரணையில் நேரம் என்பது மிக மிக முக்கியம் என்றும் தமிழ்நாடு அரசை மறைமுகமாக விமர்சனம் செய்தார்.
காவல்துறையை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும்
அதோடு, இந்தியாவிலேயே மிகச் சிறந்த அமைப்பாக தமிழ்நாடு காவல்துறை திகழ்கிறது என்றும் தான் துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருந்தபோது, பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா தொடர்பான தரவுகளையும் ஆதாரங்களையும் மற்ற மாநில காவல்துறையினரை காட்டிலும் தமிழக காவல்துறையினர் துல்லியமாக தந்தனர் என்று குறிப்பிட்டு, தமிழ்நாடு காவல்துறை சுதந்திரமாக செயல்பட வேண்டிய கட்டாயம் இருக்கிறது என்றும், அவர்களை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
தமிழக அரசை மறைமுகமாக விமர்சித்த ஆளுநர்
இப்படி பேசியதன் மூலம் தமிழக காவல்துறை சுதந்திரமாக செயல்படவில்லை என்று தமிழ்நாடு அரசு மீது ஆளுநர் மறைமுகமாக குற்றஞ்சாட்டியிருக்கிறார். ஏற்கனவே, தமிழக அரசுக்கும் ஆளுநருக்கும் இடையேயான உறவு சுமூகமாக இல்லையென்று கூறப்படும் நிலையில், தமிழக காவல்துறை சுதந்திரமாக செயல்படவில்லை என்று ஆளுநர் ரவி விமர்சித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
மாநில காவல்துறையை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் கொண்டுவர முயற்சியா ?
அதே நேரத்தில், இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான சட்ட ஒழுங்கு விதிகளை அமல்படுத்த வேண்டும் என்று நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியதும், சட்ட ஒழுங்கு என்பது மாநில அரசு கவனிக்க வேண்டிய விஷயம் ஆனால் அதிலும் தேசியத்தின் நலன் உள்ளது என்று பிரதமர் மோடி பேசியதும் கவனிக்கதக்கதாக உள்ளது.
ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு, ஒரே நாடு ஒரே தேசிய மொழி, ஒரே நாடு ஒரே பத்திர பதிவு வரிசையில், ஒரே நாடு ஒரே சட்ட ஒழுங்கு என்று மாநிலத்தின் காவல்துறை அதிகாரத்தையும் யூனியன் பிரதேசங்களில் உள்ளதுபோல மத்திய உள்துறை அமைச்சகம் கட்டுப்பாட்டில் கொண்டுவர முயற்சிகள் நடைபெறுகிறதா ? என்ற சந்தேகம் இருவரின் பேச்சுகள் மூலம் ஏற்படுவதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.