தேர்தல் முடிந்தாலும், அதிமுகவில் நடக்கும் யுத்தம் இன்னும் முடிந்தப்பாடில்லை. அதற்கு சான்றுதான், நேற்று அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் இல்லாமல், இணை ஒருங்கிணைப்பாளராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி, 9 மாவட்ட செயலாளர்கள், கட்சியின் முக்கிய நிர்வாகிகளோடு தனியாக ஆலோசனை நடத்தியது. இத்தனைக்கும் ஓபிஎஸ் சென்னையில்தான் இருந்தார். ஆனால், கூட்டத்தில் பங்கேற்கவில்லை. அதற்கு காரணமாக எடப்பாடி பழனிசாமி சொன்னது அவர் புது வீட்ல பால் காய்ச்சிருக்காரு, அதனாலதான் வரல' என்று.


ஓபிஎஸ் ஒன்றும் புதுவீடு கட்டி புதுமனை புகுவிழா நடத்தவில்லை. தி.நகரில் உள்ள ஒரு வீட்டுக்கு வாடகைக்கு போய் இருக்கிறார். அப்படி பால்காய்ச்சி, பூஜை நடத்தினாலும், ஒரு இரண்டு மணி நேரத்தில் அது முடிந்திருக்கும். அப்படிப்பார்த்தால் கூட, ஓபிஎஸ் பால் காய்ச்சியது காலை 10 மணி வாக்கில், எடப்பாடி பழனிசாமி தலைமையில் கூட்டம் தொடங்கியது 12.30 அளவில். இந்த அளவுகோலே இருவரிடையே ஒரு பனிப்போர் நடப்பதை உறுதிப்படுத்துகிறது. கட்சியின் ஒருங்கிணைப்பாளராக இருந்தும் முதல்வர் வேட்பாளராக ஆக முடியாதது, எதிர்க்கட்சித் தலைவர் பதவி கூட கிடைக்காதது என ஏக கோபத்தில் இருக்கும் ஓபிஎஸ், தற்போது கையில் எடுத்துள்ள ஆயுதம் தான் ‘ஆப்ரேஷன் Whip’.


எதிர்கட்சித் தலைவராக எடப்பாடி பழனிசாமி இருந்தாலும் அவரையே, சட்டப்பேரவைக்குள் கட்டுப்படுத்தும் அதிகாரம் மிக்க பதவிதான் ’கொறடா. அந்த கொறடா பதவியை தன்னுடைய ஆதரவாளரான மனோஜ்பாண்டியனுக்கு பெற்று தந்துவிடும் முயற்சியில்தான் அவர் இறங்கியிருக்கிறார். ‘முதல்வர் வேட்பாளர் நீங்கதான்னு சொன்னீங்க சரி, எதிர்க்கட்சித் தலைவரும் நீங்கதான்னீங்க அதுவும் சரி, இப்ப கொறடா பதவியாவது என்னோட ஆதரவாளருக்கு கொடுங்களேன்’ என எடப்பாடி தரப்பிடம் கொதித்திருக்கிறார் ஓபிஎஸ். ஆனால், கொறடாவை வைத்து நமக்கு கொக்கிப் போட்டுவிடுவார் என தெரிந்த எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் கோரிக்கைக்கு இதுவரை அசைந்துக்கொடுக்கவில்லை. அதனால்தான் அதிமுக அலுவலக ஆலோசனை கூட்டத்தை புறக்கணித்துவிட்டு, புதுவீட்டு பால்காய்ச்சும் நிகழ்ச்சியிலேயே இருந்திருக்கிறார் ஓபிஎஸ்.



ஆனால், கொறடா பதவியை தன்னுடைய ஆதரவாளருக்கு பெற்று தந்து, தனது செல்வாக்கை தக்க வைத்துவிடவேண்டும் என்று எழும்பூர் ரேடிசன் புளு ஹோட்டலில் ரூம் போட்டு இரவு பகலாக இயங்கிக்கொண்டிருக்கிறார் அவர். சரி, எதிர்கட்சித் தலைவர் பதவியை விட அக்கட்சியின் கொறடா பதவி முக்கியத்துவம் வாய்ந்ததா என்று பார்த்தால் ஆம், என்ற விடையைதான் கடந்த கால வரலாறுகள் நமக்கு காட்சிப்படுத்துக்கின்றன. கொறடாவின் உத்தரவை மீறி செயல்படும் எம்,எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்ய பரிந்துரைக்கும் அதிகாரம் இருப்பதால் அந்த பதவி என்பது சட்டபேரவையை பொறுத்தவரை ஒவ்வொரு கட்சியிலும் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.


பேரவையில் தங்கள் கட்சி சார்பாக யார் யார் பேசவேண்டும் என்று முடிவு செய்து, சபாநாயகரிடம் பட்டியல் அளிப்பவர் கொறடாதான், அப்படி அதிமுகவில் எதிர்க்கட்சி தலைவராக இருக்கும் எடப்பாடி பழனிசாமிக்கு பேச வாய்ப்பை வழங்காமல், வேறு ஒருவரை கூட பேசச்சொல்ல முடியும் அவரால். சட்டப்பேரவைக்கு வருவது பற்றியோ, அல்லது நம்பிக்கை வாக்கெடுப்பு, தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்புகளில் கொறடா இடும் கட்டளைப்படியே அந்த கட்சி எம்.எல்.ஏக்கள் வாக்களிக்க வேண்டும். அப்படி மாற்றி வாக்களிக்கும்பட்சத்தில் அவரை எம்.எல்.ஏ பதவியை விட்டே நீக்க பரிந்துரைக்கும் வலிமை கொறடாவுக்கு உண்டு.  அதனால்தான், கொறடா பதவியை பெற இவ்வளவு மெனக்கெடுகிறார் ஓபிஎஸ்.


ஆனால், எடப்பாடி பழனிசாமியோ தனது ஆதரவாளர்களாக இருக்கும் எஸ்.பி.வேலுமணியையோ அல்லது பொள்ளாச்சி ஜெயராமனையோ கொறடாவாக நியமித்து, கட்சியை மட்டுமல்ல, பேரவைக்கு உள்ளேயும் எம்.எல்.ஏக்களை தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள வேண்டும் என்று தன்பங்கிற்கு காய்களை நகர்த்தி வருகிறார். அப்படி வேலுமணியையோ, பொள்ளாச்சி ஜெயராமனையோ கொறாடாவாக நியமிக்க ஓபிஎஸ் ஒத்துக்கொள்ளவில்லையென்றால், கேபி முனுசாமியை நியமிக்கலாம் என்று எடப்பாடி ஐடியா கொடுத்திருக்கிறார். ஆனால், ஓபிஎஸ்க்கு நன்றாக தெரியும், கே.பி.முனுசாமி இப்போது தனக்கு ஆதரவாக இல்லை என, அதனால் தான் அவரது ஒரே ஒரு சாய்ஸ்சாக மனோஜ்பாண்டியன் இருக்கிறார்.


வரும் ஜூலை மாதம் முதல் வாரத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்னதாக அதிமுகவில் யார் எதிர்க்கட்சி துணைத் தலைவர், கொறடா என்பதையெல்லாம் சட்டப்பேரவை செயலாளரிடம் தெரிவிக்கவேண்டும். அப்போதுதான் அதற்கு தோதாக இருக்கைகளை முன் வரிசையில் அமைப்பார்கள். ஆனால் இன்னும் இவை இரண்டிலும் இழுபறியே நீடித்துவருகிறது.


இந்த இழுபறிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முயற்சிதான் ஓபிஎஸ் தங்கியிருக்கும் எழும்பூர் ரேடிசன் ஓட்டலுக்கே எடப்பாடி பழனிசாமி விஜயபாஸ்கருடன் சென்று, அவரை சந்தித்து பேசியது. ஓபிஎஸ் சகோதரர் பாலமுருகன் இறப்பிற்கு ஆறுதல் சொல்ல சென்றனர் என கூறினாலும், பேசப்பட்டவை கொறடாவாகவும், துணைத் தலைவராகவும் யாரை நியமிக்கலாம் என்பதை பற்றித்தான். கொறாடாவாக தனது ஆதரவாளர்தான் வரவேண்டும் என்று உறுதியாக இருந்த ஓபிஎஸ்-சிடம், வேண்டுமானால் ஏற்கனவே பேசியதுபோல, எதிர்கட்சித் துணைத் தலைவராக நீங்களே இருந்துக்கொள்ளுங்கள் என்று சொன்ன எடப்பாடி பழனிசாமியை பார்த்து சிறு புன்னகை மட்டும் பூத்திருக்கிறார் ஓபிஎஸ். அதன்பிறகு நீடித்த சில நிமிட மவுனங்களுக்கு பிறகு, எதிலும் எந்த முடிவும் எடுக்காமலேயே அந்த சந்திப்பு நிறைவடைந்து எடப்பாடி பழனிசாமி கிரின்வேஸ் இல்லத்திற்கும், ஓபிஎஸ் தேனிக்கும் புறப்பட்டுவிட்டனர். ஏற்கனவே முதல்வர் வேட்பாளர், எதிர்க்கட்சி தலைவர் தேர்வு என இரண்டிலும் தன்னை முன்னிலைப்படுத்த முடியாமல் தோற்றுப்போய்விட்ட ஓபிஎஸ், இந்த கொறடா தேர்விலாவது வென்றுவிடவேண்டும் என்று துடித்துக்கொண்டிருக்கிறார்.




அப்படி அவரின் இந்த ஆப்ரேஷன் Whip-லும் தோற்றுப்போய்விட்டால், புதிதாக ஓபிஎஸ் குடியேறியிருக்கும் தி.நகர் கிருஷ்ணா தெருவிற்கும், சசிகலா தங்கியிருக்கும் அதே தி.நகர் அபிபுல்லா சாலைக்குமான தூரம் இன்னும் சுருங்கிவிடக் கூடும் !