அதிமுகவில் இரட்டை தலைமை நீடித்து வந்த நிலையில் அதிமுக கட்சியில் ஒற்றை தலைமை வேண்டும் என்ற விவகாரம் பெரிய பிரச்னையை உருவாக்கியுள்ளது. இதனால் கடந்த சில தினங்களாக அதிமுக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக கட்சி அலுவலகத்தில் உறுப்பினர்களுடன் கூட்டம் நடைபெற்றது. கூட்டம் முடிந்தபின்னர் இருவரின் வீடுகளில் தனித்தனியாக ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடைபெற்றது. இதனிடையே அதிமுக பொதுக்குழு சென்னையில் 23 ஆம் தேதி கூட உள்ளது. இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ வெங்கடாஜலபதி திருக்கோவில் மகா கும்பாபிஷேகத்திற்கும் மற்றும் போளூர் சட்டமன்றத் தொகுதியில் பல்வேறு நலத்திட்டங்களை வழங்குவதற்கும் வருகை தந்த அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை வரவேற்று அதிமுக நிர்வாகிகள் சார்பில் பதாகைகள் வைக்கப்பட்டது.


 




"எங்களின் ஒற்றை தலைமையே" வருக வருக எனவும் புரட்சி தலைவரின் வழியில் கழகம்! புரட்சி தலைவியின் வழியில் கழகம்! தற்போது "எடப்பாடியார் வழியில் கழகம்" எங்களின் தலைமையே வருக என வசனங்களுடன் வைக்கப்பட்டுள்ள இந்த பதாகைகள் வைக்கப்பட்டது. அதுமட்டுமின்றி அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் திருவண்ணாமலை மாவட்ட எல்லையான காண்டாம்பூண்டி பகுதியில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது அவருக்கு ஏராளமான தொண்டர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் ஒற்றை தலைமையே வருக கழகத்தின் நிரந்தர பொதுச் செயலாளரே வருக என கோஷங்கள் இட்டனர். முன்னாள் முதல்வரும், தற்போதைய எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமியை அதிமுக பொதுச் செயலாளராக நியமிக்கவும் ஏற்பாடுகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது. இதற்காக அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி பெரிய அளவில் பணம் செலவழித்து வருவதாக, ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பகிரங்கமாக சமூக வலைதளத்தில் குற்றம்சாட்டி வந்த நிலையில், 


 





அதிமுக பொதுக்குழு கூட்டம் வருகின்ற 23-ம் தேதி கூட உள்ள நிலையில் பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்பது குறித்தான ஆலோசனை கூட்டம் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அதிமுக அலுவலகத்தில் தெற்கு மாவட்ட செயலாளரும் போளூர் சட்டமன்ற உறுப்பினருமான அக்ரி கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர். அதிமுக முக்கிய நிர்வாகிகள் கூட்டத்தில் பொதுக்குழு கூட்டத்திற்கு செல்வது குறித்தான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது. பொதுக்குழுவில் ஒற்றை தலைமை குறித்த உறுதிமொழி பத்திரத்தில் பொதுக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்களிடம் கையெழுத்து பெறப்பட்டது. மேலும் இந்த ஒற்றை தலைமையை அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமியே ஏற்க வேண்டும் என்று உறுதிமொழி பத்திரத்தில் பொதுக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்களிடம் கையெழுத்து பெறப்பட்டுள்ளதாக அதிமுக தொண்டர்கள் வட்டாரத்தில் கூறப்படுகிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன்,அக்ரி கிருஷ்ணமூர்த்தி, முக்கூர்சுப்பிரமணி, ராமச்சந்திரன், தூசி மோகன், ஆகியோர் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண