மதுரையில் அதிமுக தொழிற்சங்க தேர்தலில் நிர்வாகி ஒருவர்  போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு எழுந்ததால் இருதரப்பினருக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதனால் அங்கு பதட்டமான சூழல் ஏற்பட்டது. 


மதுரை மண்டல அண்ணா தொழிற் சங்க பேரவையில் உள்ள பல்வேறு பொறுப்புகளுக்கு தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டு, அதற்கான வேட்பு மனு தாக்கல் செய்யும் பணிகள் கடந்த ஆகஸ்ட் 10 ஆம் தேதி துவங்கியது. அன்றைய தினம், முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜூ, சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா மற்றும் அண்ணா தொழிற்சங்க மாநில செயலாளர் கமலக்கண்ணன் ஆகியோர் பங்கேற்று இருந்தனர்.




இந்நிலையில், மதுரை பழங்காநத்தம் பகுதியில் உள்ள அலுவலகத்தில் இன்று காலை முதல் சங்கத்தின் பொறுப்புகளுக்கான நிர்வாகிகளை தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்று வந்தன.
அப்போது, செக்கானூரணி போக்குவரத்து பணிமனைக்கு கிளை செயலாளராக ஏற்கனவே பதவி வகித்த முருகன் என்பவர் மீண்டும் அப்பதவிக்கு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
அதற்கு, எதிர்ப்பு தெரிவித்த எதிர் தரப்பினர் சங்க அலுவலகத்திற்குள்ளேயே முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா ஆகியோர் முன்னிலையில் கோஷம் எழுப்பினர்.  தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அத்துடன் தேர்வு செய்தவர்களுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். அவர்களை உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அய்யப்பன் மற்றும் மேலூர் சட்டமன்ற உறுப்பினர் பெரியபுள்ளான் ஆகியோர் அவர்களை சமரசம் செய்ய முயற்சித்தனர். ஆனால் அவர்கள் அதை ஏற்க மறுத்து தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து அலுவலகத்திற்குள் இருந்து அவர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். 




வெளியே வந்த இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் விமர்சித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் மதுரையில் முக்கிய சாலையான பைபாஸ் சாலையில் பதட்டமான சூழல் உருவானது. திடீரென வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்கள் ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டனர். இதனால் அந்த பகுதியே கலேபரம் ஆனது. முன்னாள் அமைச்சர் உள்ளிட்ட அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பலரும் அலுவலகத்திற்கு உள்ளே இருந்த நிலையில், வெளியில் அதிமுக நிர்வாகிகள் மோதிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் அங்கிருந்த மற்ற அதிமுகவினர், இருதரப்பினரையும் சமரமசம் செய்து அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இருப்பினும் அங்கு தொடர்ந்து பதட்டமான சூழல் நிலவியது. காவல்துறையினரின் அனுமதி பெறாமலும், முன்னறிவிப்பு இல்லாமலும் அண்ணா தொழிற்சங்கத் தேர்தல் நடைபெற்றதால், அங்கு நடந்த பரபரப்பான சம்பவத்திற்கு போலீசார் பாதுகாப்பு பணிக்கு வரவில்லை. அது மட்டுமின்றி அங்கு சிறிது நேரம் நடந்த பரபரப்பான வாக்குவாதம், மோதல் சம்பவங்களையும் கட்டுப்படுத்த முடியவில்லை. 



...